யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Thursday, November 26, 2009

தட்டுகள் தடையோ !


வாழ்க்கையை வாழும் வகைகளை நாம் பின்பற்றும் வாழும் முறைகளே நிர்ணயிக்கின்றன ! மேல் தட்டு, இடைத் தட்டு மற்றும் கீழ் தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளில் மிக இலகுவாக இருக்கும் முறையாக நீங்கள் கருதுவது எது? ஏன்?உங்களின் கருத்துப் பரிமாற்றத்திலிருந்து முழுபதிவு தொடரும் !

-------------------------------------------------------------------------------------------------------------------------------

 வாழ்க்கை என்பது பெரும்பாலும் தெரிந்தெடுக்கப் பட்டதாகும். சில சமயம் திணிக்கப்பட்ட வாழ்கையாகவும் அது அமைவதுண்டு. எத்தகைய வாழ்க்கையானாலும், நாம் அதை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறோம் , எவ்வாறு அணுகுகிறோம் என்பதை பொறுத்தே, அதற்குண்டான,பலன் அமையப் பெறுகிறது. எவ்வித சூழலில் நாம் பிறக்கிறோம், எவ்வாறு வளர்கிறோம் என்பதே நாம் வாழும் முறைகளை தீர்மானிக்கின்றது. மேல் தட்டு, இடை தட்டு, கடை தட்டு ஆகிய மூன்று பிரிவுகளாகளைத் தான் நம் வாழ்க்கை உள்ளடக்கியதாக உள்ளது.


மேல் தட்டு மக்களின் வாழ்க்கை முறை அவர்களது செளகரியத்தை சார்ந்ததாகவும், கடைத் தட்டு மக்களின் வாழ்க்கை முறை, கிடைத்ததை வைத்து வாழ்வை ஓட்டும் விதத்தை சார்ந்ததாகவும் , இடைத் தட்டு மக்களின் வாழ்க்கை முறை, மேற்கூறிய இரண்டும் இல்லமால், ஆற்றில் ஒரு கால் , சேற்றில் ஒரு கால் என்ற அளவில் அமைகிறது.

 இதற்கு முக்கிய காரணிகளாக நிர்ணயிக்கப்படுவது எது? வாழ்க்கை பற்றிய நம் எண்ணங்களும் , அதை நாம் பார்க்கும் கோணங்களுமே !

கோடு போட்டு வாழும் வாழ்க்கை ! - இவை இப்படித்தான் பின்பற்றப்பட வேண்டும், இத்தகைய வாழ்வு முறைகளைத் தான் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியான கோட்பாடுகளை இடைத் தட்டு மக்கள் பின்பற்றுவதாலேயே, அவர்கள் மேற்கொள்ளும் வாழ்வு முறை, கடினமாகவும், அக்கடினத்தை சாமாளித்து, வாழ்வை கையாளும் விதமும் அவர்களுக்கு இலகுவாகிறது !

 போகும் போக்கில் வாழ்வை அணுகும் முறை, எளிதானதாகவே அமைந்து விடுகிறது. இத்தகைய வாழ்க்கை முறையையே கடை மற்றும் மேல் தட்டு மக்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்க உட்படுகிறார்கள்.

நினைக்கும் வாழ்க்கையை வாழ போதிய பொருள் ஆதாரம் இல்லை என்பதாலும், அன்றைய பொழுதை வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தினாலும், வரையறைக்குட்பட்ட வாழ்க்கை முறை அவர்கள் கண்களுக்கு புலப்படாமலே போய் விடுகிறது.

எல்லாம் போதிய அளவிற்க்கு மேல் இருப்பதாலேயோ என்னவோ, மேல் தட்டு மக்களும், இந்த நொடி எனக்குப் பிடித்ததாக அமைந்திருக்கிறதா இல்லையா, என்பதில் ஈடுபாடு காட்ட விழைகிறார்கள்.

எதுவும் இல்லை, ஆதாலால் எது கிடைக்கிறதோ அதை சுற்றியே வாழ்க்கை - இலகு - கடைத் தட்டு வாழ்க்கை முறை !

எல்லாமே அளவுக்கு மிஞ்சி இருக்கிறது, என் வாழ்க்கை என் விருப்பம் - மிகவும் இலகு- மேல்தட்டு வாழ்க்கை முறை !

இருக்கிறது - ஆனால் இல்லை, தோற்றப் பிழை போல் வாழ்க்கை - கடினம் - ஆனாலும் வாழ்வோம் -  இடைதட்டு வாழ்க்கை முறை !