யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Wednesday, October 31, 2007

S- Solitude, O- Obvious, W - Willful, M for Magnanimous


M - Magnanimous

பெருந்தன்மை.

என்னை மிகவும் கவர்ந்த, என்னுள் எப்படியாது வளர்த்தே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட தன்மைகளில் முதல் நிலை வகிப்பது இதுவே. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது என்னுடைய பிறந்த ஊர். ஒவ்வொரு ஊருக்கென்று தனித்தன்மைகள், அவ்வூரின் பேசும் பாஷை போன்றவை வேறுபடும். சில விஷயங்கள் மட்டுமே நம்மை ஈர்பதுண்டு. அது போல என்னை , என் ஊர் மக்களின் பெருந்தன்மைப் போக்கும், விருந்தோம்பலும், சிறு வயதிலிருந்தே ஈர்த்ததுண்டு.என் வீட்டில் அவ்வளவாக இல்லாத ஒரு தன்மை, என்னை வெளி மனிதர்களின் பெருந்தன்மைப் போக்கினால், மிகவும் ஈர்த்ததில் ஆச்சர்யமில்லை தான். ஆனால், அத் தன்மையை எனக்குள் இயல்பாக கொண்டு வர, பல பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.

எந்த ஒரு தன்மையும் அவரவர் வீட்டிலிருக்கும் மனிதர்களின் இயல்புகளினாலோ, அல்லது பழக்கத்தினாலோ சிறு வயது முதலே, பெரியவர்களால் ஊட்டப்பட்டும், அல்லது அறிவுறுத்தப்பட்டும், அல்லது கால காலமாக தொடர்ந்து வரும் மரபணுக்களினாலோ தான் சாத்தியமகிறது. எந்த ஒரு இயல்புக்கும், பெற்றோரின் அணுகு முறையும், அவர்கள், மிக முக்கியம் என்று அறிவுறுத்தும் பாங்குமே, நம்முள் , அத்தகைய இயல்புகளை வளர்க்க ஏதுவாக இருக்கிறது.

ஆனாலும், பல இயல்புகள், குடும்பத்தார் அல்லாத மற்றவரின் பங்களிப்பாலேயே நம்முள் வளர்க்கப்படுகிறது. ஆனால், எத்துணை பேர், அத்தகைய மாற்றத்திற்க்கு தம்மை தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அவரவர் கையிலே தான் உள்ளது. உலகைப் புரிந்து கொள்ளத வயதில்,. தாய், தந்தை, மற்றும் குடும்பத்தாரின் மூலம் கற்றுக் கொண்ட சில நன்மை தராத இயல்புகளை, உலகம் புரியும் வயதிலேயும், நம்மிடையே வைத்துக் கொண்டு, " நான் இப்படித்தான்" என்று தான் பலரும் சொல்லிக் கொள்கிறோம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இயல்புகள் , தன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால். அவற்றை தம்முடையதாக்கிக் கொள்ள தீராத ரசனை மிகவும் இன்றியமையாததாகிறது.



எதை நாம் ரசிக்கிறோமோ, அதன் பாலே தான் நாம் ஈர்க்கப்படுகிறோம். எது நமக்குப் புரிகிறதோ, அதன் பால் தான் நம் ரசனையும் செல்லும். அவ்விதமாக எழும்பும் ரசனையை, ரசனை என்பதோடு மட்டும் விட்டு விடாமல், அதை எத்தகைய வழியில் நமதாக்கிக் கொள்கிறோம் என்பதில் தான், நாம் நம்முள் நாம் வளர்க்க விரும்பும் இயல்புகளும் அமையப் பெறுகின்றன.

என் வாழ்க்கையில், இத்தகைய ரசனை தான், பெருந்தன்மைப் போக்கை எனக்குள் நான் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை உறுதியாகப் பதித்தது. சொல்லப் போனால், பெருந்தன்மை போக்கு உள்ளவரெல்லோருமே, நல்லவர்களாகத் தான் அன்றும், இன்றும் எனக்குத் தெரிந்திருக்கிறார்கள். அது உண்மையும் கூட. வாழ்க்கையின் எத்தகைய நிகழ்விலும், இந்த பெருந்தன்மைப் போக்கானது, எதிர்மறையான விளைவுகளை புரட்டிப் போட்டிருக்கிறது.

இரு சகோதரர்களுக்குள்ளே நடைபெறவிருக்கும் சொத்து பாகப்பிரிவினையில் கூட, ஒருவரின் பெருந்தன்மைப் போக்கானாது, மற்றவரின் மனதை நொடிப் பொழுதில் , முழுதும் மாற்றிய விந்தையை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நல்ல உறவு முறைகளுக்கு அன்பு எப்படி ஆதாரமோ, அதே போல் தான், பெருந்தன்மைப் போக்கும், நல்ல உறவு முறைகள் காலங்காலமாய், சீர் பட நிலைத்து நிற்கக் காரணமாய் விளங்குகின்றது.

பெருந்தன்மையினால், ஒருவர் உயர உயர செல்கிறாரே அன்றி, அவர் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அடிக்கடி, மனதிலெழும், வள்ளுவனின் வாக்கு,

" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்"

- இக்குறள் பெருந்தன்மையையே பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன். அகிம்சை வழி என்பது எப்படி, வீரியமிக்க வழியோ, அதே போல தான், பெருந்தன்மைப் போக்கும், வீரியமிக்கது.சிலருக்கு இயல்பிலேயே இருக்கும் இத்தன்மை வியக்கத் தக்கதே. அதெல்லாம் குடும்பத்திலேயே வரணும்" - என்று அங்கலாய்பதில் அர்த்தம் இருந்தாலும், பிரயத்தனப்பட்டாகினும், இத்தன்மையை நமக்குள் நாம் வளர்க்க முயற்சித்தால், இத்தன்மை நம்மையும், நம்மைப் போல் பிறரையும், நல்ல உறவு மேம்பாட்டில் எப்போதும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Monday, October 29, 2007

S- Solitude, O- Obvious, W for Willful


மனத்திட்பத்துடன் (Willful) கூடிய மனத்திண்மை(Determination).

பொதுவாகவே எந்த ஒரு செயலுக்கும், அது செம்மையுற நடைபெறவும், நம் மன ஓட்டமே காரணமாக அமைகிறது. இச்செயலை நன்கு செய்ய வேண்டும் என்று எண்ணும் பட்சத்தில், அதை நன்கு செய்து முடிப்பதும், இச்செயல் அத்துணை முக்கியத்துவம் இல்லை என்று எண்ணுகையில், அதனை அத்துணை முனைப்போடு செய்யாமல் போவதும், நம் மனத்தினால் எழும் எண்ண ஓட்டங்களினாலேயே நிகழ்கின்றது. ஆக, ஒரு செயல், அதனை செய்யும் திறன், அத்திறனை சரியான விகிதத்தில் பயன்படுத்தி, நற்பயன் காணும் போக்கு எல்லாமே நம் மனத்திட்பத்தாலும் அதனை அடுத்து நமக்கு கிடைக்கும் மனத்திண்மையினாலுமே அமையப் பெறுகிறது.

எப்படி, அதிகாலை துயில் எழ, உடம்பைப் பழக்க வேண்டும் என்று எண்ணி, அதனை தினமும் மேற்க் கொண்டு உட்லை பழக்குகிறோமோ, அவ்வாறே, நம் மனத்திண்மையையும் பழக்கப் படுத்திக் கொள்ளலாம். எல்லாமே பழக்கத்தில் அமைவது தான் .சித்திரமே கைப்பழக்கத்தில் அமையப் பெறும் போது, மற்றதெல்லாம் எம்மாத்திரம்.

முதலில்,செயலைச் செய்வதில் மனத்திட்பம் என்றால் என்ன, என்று பார்ப்போம். எந்த ஒரு செயலையும், இதை செய்தால் என்ன, என்று தீர்க்கமாக எண்ணுவது தான் மனத்திட்பம். தீர்க்கம் என்ற நிலை உண்டாகும் போதே, அச்செயலை செய்ய ஒரு வித ஈடுபாடும், அச்செயலை எப்பாடு பட்டாகினும் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியையும் நாம் பெறுகிறோம்.

மனத்திட்பம் என்பது, முதலில் நம்மை ஒரு செயல் தொடங்க நம்மை ஈடுபடுத்தும் செய்கை தான்.இதைத் தான் When there is a will, there is a way என்று கூறியிருக்கிறார்கள். ஒரு செயலில் நம்மை முனைக்கச் செய்யச் செய்தாலே போதும், அச்செயலை ,எத்தகைய வழியில், அதை சீர்படச் செய்யும் வழி தானாகவே புலப்படும்.வழி புலப்பட புலப்பட, அச்செயலை செய்யும் ஆர்வமும், அதனை செம்மையுற செய்து முடிப்பதில், உறுதியும் பிறக்கும். மனத்திட்பத்தை நமக்குள் பழக்கினாலே, மனத்திண்மையை நாம் பெறுவது உறுதி.

மனத்திண்மை என்பது, நம் ஆளுமைத்திறனை(Personality development) வளர்க்கச் செய்ய பெரும்பாலும் உதவுகிறது. எப்போது, ஒரு செயலைச் செய்ய நம் மனத்திட்பத்தினால் , அதனை அணுகுகிறோமோ, அப்போதே, அச்செயலினால், நம் ஆளுமையில் (Personality), வாக்குறுதி (அ) கடமைத் திறன் (Commitment) அதிகரிக்க ஆரம்பிக்கிறது. கடமைத்திறன் அதிகரிக்க அதிகரிக்க, நம் பொறுப்புக்களை (responsibilities) முழு ஈடுபாட்டோடு நாம் எடுத்து செய்ய, நம் ஆளுமை பழகிக்கொள்கிறது.

பிறகு, எந்த ஒரு செய்லை நாம் செய்ய, அதில் ஈடுபட்டாலும், நாம் வளர்த்த மனத்திண்மையானது, அச்செயலை, கடமைத்திறனுடனும், தலையாய பொறுப்புடனும், செய்து முடிக்க வழி நடத்துகிறது. இதுவே பழக்கமாகி விட்ட பட்சத்தில், நம் ஆளுமை, எச்செயலையும் கச்சிதமாக (perfect) செய்து முடிக்கவே செய்யும். கச்சிதமாக முடிக்கும் மனோபாவத்தைப் பெற்று விட்டாலோ, எதையும் இலகுவாகவும், ஆர்வத்துடஞும் அணுகும் வித்தை நமக்குத் தெரிந்து விடும்.

என்னுள், இத்திறன் இயல்பாக அமைந்து விட்டதாக எண்ணுகிறேன். ஆனாலும், பல செயல்களுக்கான வித்தை, பலரின் துணையோடு தான் செயல் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

முனைக, வளர்க ! :)

Wednesday, October 24, 2007

S for Solitude - O for Obvious


Obvious

புரிதல் - தெளிவாக புரிந்து கொள்ளுதல். இத்தன்மை என்னுள் இயல்பாக இருக்கிறதா, அல்லது நானாக என்னையும் அறியாமல், அதன் பால் ஈர்க்கப்பட்டு அத்தன்மைக்கு முக்கியத்துவம் தந்தேனா என்பது பற்றி அதிகம் யோசிக்கவில்லை. நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளுக்கும், அதனைச் சார்ந்த விளைவுகளுக்கும், இந்த புரிதல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது, என்னுடைய அபிப்ராயம். எங்கே நாம் புரிந்துக் கொள்ளப்படுகிறோமோ, எங்கே நம்மால் மற்றவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறதோ, அங்கு ஒரு செளகரியமும், திருப்தியும் உண்டாக்கப்படுகிறது. செளகரியமாக உணர்ந்தாலே, நமக்கு தேவையான சூழல் கிடைத்து விடுகிறது. நல்ல சூழல் அமைந்தாலே, நல்ல உறவும் மேம்படுகின்றது.

பிரச்சனைகள் என்பது அறவே உண்டாகாமல், தடுக்கும் வழியாகவே இப்புரிதலைக் கொள்ளலாம். எல்லோருக்குமே, புரிதல் என்பது முக்கியமானதாகவே கருதப்படுகிறது. என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க .. என்பது தான் பெரும்பாலானோரின் அங்கலாய்ப்பு. பல பிரச்சனைகளை நம்முடைய நிலையில் இருந்து மட்டுமே பார்பாதாலும், பரிசீலிப்பதாலுமே, அப்பிரச்சனைக்கு சரியான தீர்வை சுலபமாகவும், நடு நிலையாகவும் எடுக்க முடியாமல் போகிறது. நம்முடைய சூழ்னிலைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே, பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. எனவே தான், நம் பக்கம் மட்டுமே நியாயம் இருப்பதாக நமக்குப் புரிகிறது. அதனாலே, நாம் பாதிக்கப்பட்டது நியாயம் இல்லை என்ற உணர்வும் எழுகிறது.

நமக்கென்று வரும் பிரச்சனைகளி நாம் பாதிக்கப்படும் போது, நாம் உணர்ச்சிகளின் ஆழத்திற்குத் தள்ளப்படுகிறோம். அதனாலேயே, மற்றவரின் , உணர்வுகளும், அவர் பக்கம் இருக்கும் நியாயங்களும் நமக்கு புரிவதில்லை. நம் காயம் தான் பெரிதாக உணரப்படுகிறது. அத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பில் அடுத்தவரின் செய்லும் அல்லது நடத்தையும் பூதாகாரமாகவே தோற்றமளிக்கிறது. இது தான் உண்மை நிலவரம் என்று நாம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாலோ நம்முடைய உணர்வுகள் மேலும் பாதிப்புக்குள்ளாகி, ஏற்ப்பட்ட காயம், ரணமாக ஆகி, வடுவாகவும் பதிந்துவிடுகிறது.

இத்தகைய நேர்வை நம்மால் நிச்சயமாக தடுக்க முடியும். நம்முடைய உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், அல்லது முக்கியத்துவத்தை சற்று குறைத்துக் கொண்டு, இரு பக்க நிலையையும் புரிந்து கொள்ள முயன்றாலே, நமக்கு ஏற்படும் வடுக்களையும், மற்றவருக்கு நம்மால் ஏற்படும் ஒரு வித அசெளகர்ய நிலையையும் தவிர்க்க இயலும்.

என்னுள் இத்தன்மை எப்பவும் அகலாமல் பார்த்துக் கொள்ளத்தான் நான் விழைகிறேன். :)

Saturday, October 20, 2007

A for Apple -- S for Solitude !


தானாக கோடு போட்டு, அதன் மேலும், கீழுமாகவும்,அல்லது அதன் மேலேயேவோ செல்வது என்ற இயல்புப் படியே இதுவரை என் பதிவுகள் இருந்து வந்திருக்கின்றன. சுருங்கச் சொன்னால், என் இஷ்டப்படியே என் பதிவுகளும், அதன் சாராம்சங்களும்.

இப்போது புதிதான ஒரு அனுபவம் தரும் வண்ணம், குமார் அவர்களின் உந்துதலின் பேரில், என்னுள் நான் விரும்பும், வளர்க்க ஆசைப்படும் இயல்புகளைப் பற்றித் தனித்தனிப் பதிவுகளாக எழுத முயன்றால் என்ன..என்ற எண்ணத்தோடே, இப்பதிவானது சம்ர்பிக்கப்படுகிறது.

உங்க சொந்தகதை, சோகக்கதைலாம் எதுக்குங்க இங்க...! என்ற எதார்த்த எண்ணமிருப்பவர்கள், பின் வரும் ஒரு சில பதிவுகளை, ஒரு குறிப்பிட்ட தலைப்பில், நான் சொல்ல விருப்பப்படும் கருத்துக்களாக மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Solitude - தமிழில் இதற்கு " தனிமை" என்ற பொருள். பொதுவாகவே, தனிமை என்பதே ஏதோ, வெறுமையான உணர்வு போலவும், ஒவ்வாத ஒன்றாகவுமே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அடடா..! தனிமை என்னை இப்படி வாட்டுகிறதே என்று புலம்புவதற்கும், ஆகா..! என்ன ஒரு அருமை இந்தத் தனிமை - என்று புளகாங்கிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள்: உண்டல்லவா.

ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால்..,

Like to be alone is completely different from feeling loneliness. A person who like to be alone, chooses the environment where he/she feels the enjoyment within himself/herself. It is a tendency of being detached from the group, without planning or trying to be alone from the group. No one can do any practice to develop that tendency of being alone.

The exact meaning for loneliness is unhappy .Because you have no friends or people to talk to, you feel the loneliness. Loneliness is a sad feeling feel by a person when he misses something aroud him. But aloneness is, something , a person like to be with.


I am not saying, being alone is heaven for someone who really don’t want to be alone. There are people who like to be with a group, like to share things with the group. I am not declaring , aloneness fetches you heaven in earth, if you adopt that. Instead, I said, the people who like to be alone finds more enjoyment with their aloneness.

I can even say in a simple way too. Sharing needs two people atleast. If the other person , whom we like to share our things may differ from the thoughts of what we share to him/her. Sharing expects recognition.

Why we like to share things?.

We like to put ourself in a comfort zone by sharing. It is one of the way of getting recognition from the person to whom we share our things. Its all depend upon the person. We would like to share our things to people who are ready to listen/accept/console. Sharing doesn’t mean to be positive all the time. It also includes criticisms/difference of opinions.

Sharing can happen with a person often, if he/she gives you the comfort of understanding. We cant share things with everyone, even when we like to be in the group. Sharing is possible only with people who has better understanding about us and about the concept what we deliver. It’s a kind of happiness we feel, when someone really understand us or listen us wholeheartedly. Most of the people prefer to share things with others. They feel some peace by sharing.

The people who prefer to be alone feels the same peace , even they are out of group. I am not degrading the people who like to be with the group. But I can say, for SOME, being alone is preferable and they feel more enjoyment while they are alone compare to be with the group.

So(w) I am :)

Saturday, September 29, 2007

அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது !!



ஒரு வீட்டில் ஒரு சிறுவன் தன் அம்மாவிடம்..

"அம்மா ! ஏம்மா, நம்ம கிட்ட கார் இல்ல...மாமா கிட்ட இருக்கு...."

- "அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்பா..நாமெல்லாம் ஏழை..நம்ம கிட்ட பணமில்ல.."

"நாம ஏம்மா..ஏழை.... அதிர்ஷ்டம்னா ப்ணமாம்மா..?"

- " இல்லடா..அதிர்ஷ்டம் இருந்தா பணம் இருக்கும்..பணம் இருக்கறதுக்கு அதிர்ஷடம் வேணும்டா.."

"அப்பாவுக்கு ஏம்மா அதிர்ஷ்டம் இல்ல.."

- "தெரியல.."

"உனக்கு அதிர்ஷ்டம் இருக்காம்மா"

-"உங்கப்பாவை கல்யாணம் பண்ணினா, எனக்கு எப்படிட இருக்கும் அதிர்ஷ்டம்"

"எனக்கு இருக்காம்மா அதிர்ஷ்டம்.."

-உனக்காது இருக்கட்டும்..

இதே பாணியில் இல்லாவிட்டாலும், இதே கருத்து பலரிடம் நிலவுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன? அது பலருக்கு, எதிர்ப்பார்ப்பு, கனவு,ஆசை. நிஜ வெய்யிலிலிருந்து இளைப்பாற பொய் நிழல்

அதிர்ஷ்டம் என்பதை மச்சம் என்றும், ஜாதகம் என்றும், வரம் என்றும், முற்பிறப்பின் பலன் என்றும் காலங்காலமாய் கூறி வந்தாலும், விஞ்ஞான பூர்வமாய், இது சரியா என்று ஆராயப்படவில்லை.எனினும், மனவியல் ரீதியாக, இதற்கு பிண்ணணி இருப்பதாகவே கொள்ளலாம்.

பரீட்சைக்கு, அதிர்ஷ்டமான பேனாவை கொண்டு செல்வதிலிருந்து, திறமையானவர்கள் கூட, இந்த ஷ்ர்ட், ஷீஸ் அதிர்ஷ்டமானது என்று வைத்துக் கொள்வது, மனத்திறனோடு சம்பந்தப்பட்டதாகத் தான் தெரிகிறது. திறமை, சக்தி, ஆர்வம், வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தீர்மானம் இருப்பவர்கள் கூட, அதிர்ஷ்டம் தேவை என்று நினைக்கக் காரணம் என்ன? அச்சம் மட்டுமே.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். தோற்றுவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது, அதிர்ஷ்டத்தை வேண்டுவதாகாது. நனறாக, தயார் செய்து கொண்ட பின்னும், ஒரு செயலைச் செய்ய தக்க திறமையைக் கொண்டிருந்தும், அதிர்ஷ்டம் இருந்தால் தான் எல்லாமும் நல்ல விதமாக நடக்கும் என்ற எண்ணத்தை ஒரு கவசம் போல கொள்வதினால், தன்னம்பிக்கை என்ற வேர் பழுது படாமல், பார்த்துக் கொள்ள ஏதுவாகிறது.

தன் மேல் எத்துணை நம்பிக்கை வைத்தாலும், தன் செய்லகளின் விளைவுக்கு தான் காரணம் அல்ல. என்ற ஏண்ணமே , இத்தகைய போக்கினை வளர்க்கிறது. முதல் காரணம் அச்சம், அடுத்தது, தன்னம்பிக்கை குறையாமல், அவ்வேலையை செவ்வனே செய்ய, தன் சக்தியை மீறி , வேறொரு சக்தி தேவைப்படுவதாக எண்ணும் எண்ணமே, அதிர்ஷ்டம் என்பதை எதிர் பார்த்துக் காத்திருக்கச் செய்வது.

அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மனிதன் எப்போது நம்ப ஆரம்பிக்கின்றான். எப்போதுமே ஒருவர் வாழ்வில் வெற்றியோ, நல்ல நிகழ்ச்சிகளோ நடை பெறும்போது, அதிர்ஷ்டம் பற்றி அவன் சிந்திப்பதேயில்லை. சட்டென்று தோல்வியை சந்தித்துக்கும் போது, அடுத்து நடைபெறும் காரியத்தில் தனக்கு நிச்சயம் வெற்றிக் கிட்டுமா? எனக்கு அதிர்ஷ்டம் உள்ளதா? என்று ஆராய்தல் அவனுள் ஏற்படுகிறது.

இது இயல்பு தான். தடுக்கி விழப்போகும் நேரத்தில் தானே, தடி தேவைப்படும்.எப்படியாது, இந்த பிரச்சனை தீர வேண்டும் என்ற பதட்டம் நேரும் போது தான், பயம் ஏற்படும் போது, ஒரு துணை தேவைப்படுகிறது மனதிற்க்கு வலுவூட்ட. அத்துணையாகத்தான், அதிர்ஷ்டம் பற்றிய எண்ணமும், அதனை சார்ந்த செயல்களான, நல்ல நேரம், ஜாதகம் , எண் கணிதம், போன்றவை பார்த்தலும் ஏற்படுகின்றன.

அதிர்ஷ்டம் என்பது ஒரு வித நம்பிக்கையே. உலகம் முழுதும் இந்த விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. வீட்டில் இயந்திரம் கட்டினால், செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம். அப்படி கொட்டி விடுகிறதா. ஆனாலும், எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நோக்கத்தில் , செய்து தான் பார்போமே, என்ன தான் ஆகிறது என்ற எண்ணத்தில் செய்யப் படுவன தான் ,இயந்திரம், வாஸ்து, குபேரன் சிலை வைப்பது, வீட்ட்ன் நுழை வாயிலில், கண்ணாடி வைப்பது போன்ற செயல்கள்.

ஆனால் அதற்காக, நாம் செய்ய வேண்டிய தொழிலையோ, காரியங்களையோ நாம் செய்யாமல், அதிர்ஷ்ட்ம் எனக்கு உண்டு, என் ஜாதகமே சொல்கிறது என்று பேசாமல் இருந்து விடுகிறோமா. மனதிற்க்கு ஒரு ஆறுதல், ஒரு விதமான பிடிப்பு, எல்லாமும் செய்து, அதிர்ஷ்டம் வரவழைக்கும் வழியையும் செய்து விட்டாகி விட்டது. இனி கவலை இல்லை,. நடப்பது நடக்கட்டும் என்ற மனத் திண்மையை அடைவதற்காகவே அதிர்ஷ்டத்தை நம்பவும், விரும்பவும் செய்கின்றனர் பலர்.

ஆக அதிர்ஷ்டம் என்பது என்ன? நல்ல முறையில் எல்லாம் நிகழும் போது, அதன் தொடர்பாய், நினைவாய், பொருளோ அல்லது நபரோ இருந்தால், அது நமக்கு தொடர்ந்து விளைவிக்கும் அமைதியே அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆக அதிர்ஷ்டம் என்பது பொருளில் இல்லை. அச்சத்தைக் குறைக்க, மனதில் இருக்கும் பதட்டம் போக துணை செய்ய என்னென்ன எண்ணங்கள் உதவுமோ, அவை எல்லாமே அதிர்ஷ்டம் கொடுக்கும் சாதனங்களே. இச்சாதனங்கள் அமைதி மட்டுமே தரும். வெற்றி பெற முயற்சி ஒன்றே வழி. இது அனைவருக்கும் தெரிந்ததே.

" பார்வை இலக்கில் பதித்து விட்டால், பள்ளம் மேடு எதுவுமே பாதையில் கிடையாது"

" எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு "

- இந்தப் பார்வை நமக்கு வரும் வரை, அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையை கைத்தடியாய் வைத்துக் கொள்வதில் தவறில்லை. கண் திறந்து விட்டால், காட்சி தெரிந்து விடும். பாதை தெரியும், பயணம் புரியும். புரிந்தால், நடக்க வலு வந்து விடும். வேகம் கூடும். அப்போது எந்த வித தடியும் தேவைப்படாது.

Wednesday, September 26, 2007

வாழ்க்கை - அர்த்தம் ? (தொடர்ச்சி - II )



இனிக்கச் சுவைக்க வேண்டிய வாழ்க்கையை, நாம் ஏன், வாழ்க்கை என்பதே ஒரு குறிக்கோளுக்காகத் தான் என்று உருவகப்படுத்தி, அக்குறிக்கோளை அடைந்து விட்டால், வெற்றி கண்டதாகவும், அக்குறிக்கோளை அடையா விட்டால், தோல்வியை தழுவியதாகவும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறோம்.

இலக்கு என்பதை வெகு சுலபமாக, அமைத்து விடுகிறோம். அதனை அடையும் வழியைத் தான் வெகு கடினமாக வகுத்துக் கொள்கிறோம். அதற்க்காக போராடவும் செய்கிறோம்.இதே போக்கில் வாழ்வை நாம் அமைத்துக் கொண்டால், அந்த போராட்டம் எப்போதுமே தொடர்வதாகத் தான் வாழ்வு அமையும். ஏனெனில், நமது குறிக்கோள்கள், வாழ்வின் போக்கின் படி மாறிக் கொண்டே தான் இருக்கும். ஒன்றை சாதித்து முடித்த பின், அடுத்தது என்ன சாதிக்க போகிறோம் என்ற மன நிலையே மிஞ்சும். அதற்காக குறிக்கோள் இல்லாமல் இருந்து விடு என்று கூறவில்லை. வாழ்க்கைக்கு என்பதற்க்கு தனியான குறிக்கோள் இருக்கிறது என்று அர்த்தம் கற்பித்துக் கொள்ளாதே என்று தான் கூற விழைகிறேன்.

பின் எப்படித் தான் வாழ்வை எடுத்துக் கொள்வது ? என்ற கேள்வி எழுகிறது ! இல்லையா ! வெகு இயல்பாக, சுலபமாக, பதமாக, இதமாக, எதார்த்தமாக, வாழ்வை எடுத்துக் கொள்ள தெரிந்தாலே, வாழ்க்கை வெகு சுலபமாகிப் போய்விடும்.குழந்தைகளைப் போல.வாழ்வை தம் போக்கில் சுகமாக்கிக் கொள்ளும் ஜீவன்களைப் போல, இருக்க முயன்று விட்டாலே, வாழ்க்கையின் அற்புத சுவை தெரிய ஆரம்பிக்கும். இப்போது ,இன்னது தான் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை வகுத்துக் கொள்ளாமல், மனம் சந்தோஷத்தில் திளைக்கும் வண்ணம், பிடித்த விஷயங்களை செய்து, பிரயத்தனமே இல்லாமல், தன் விருப்பப்படி வாழக் கற்றாலே, வாழ்க்கை பிரியமாகிப் போகும்.மனதில் எப்போதும் சந்தோஷக் கூத்தாட்டம் கிடைக்கும்.அந்தந்த நிமிடம், வாழும் கலை தெரியும்.

யாருக்காகவோ, எதற்காகவோ நம் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் நமக்குள்ளேயே அடக்கிக் கொண்டு, எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்களே, அதனால் நானும் ஓட வேண்டுமோ என்ற எண்ணத்திலேயே, ஓட ஆரம்பித்து விடுகிறோம். அந்த ஓட்டம், நம் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஓய்வே கிடையாது. இப்படியே தொடர்ந்து ஓடுவதால், கடைசியில் மிஞ்சப் போவது சோர்வே. அச்சோர்வை அடைந்த பின் தான் தெரியும் , நாம் ஏன், எதற்க்காக ஓடிக் கொண்டிருக்கிறோம், அதனால் ஏற்ப்பட்ட விளைவு என்ன என்பது..

மூன்று தாரக மந்திரத்தை அவ்வப்போது நமக்குள் சரி பார்த்துக் கொண்டாலே போதும், வாழ்வு சுலபப்பட்டு விடும். என் விருப்பப்படி, என் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறதா? வாழ்வின் எல்லா நிமிடங்களிலும், என் சந்தோஷம் கெடாமல் என் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளேனா? ஒரு குழந்தையைப் போல் என்னை நான் உணர்கிறேனா? இக்கேள்விகளுக்கு, திருப்தியான பதில்களை உங்களால் கொடுத்துக் கொள்ள முடிந்தாலே, உங்கள் வாழ்க்கை அற்புதமாக, உங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை என்பது ஒரு சூன்யம். ஒன்றுமே இல்லாதது. வெங்காயம் போல. உள்ளே எதாவது இருக்கிறதா என்ற ஆவலோடு தான் அதனை உரிக்க ஆரம்பிக்கிறோம். உள்ளே செல்ல செல்லத் தான், ஒன்றுமே இல்லை அங்கே என்பதை கண்டு கொள்ள நேரிடுகிறது. ஆனால், கண்டு கொண்டு சுதாரிக்கும் போது, நம் வாழ்க்கை முடியும் தருவாயில் போய் விடுகிறது. எத்துணை சீக்கிரம், வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை நாம் கண்டு கொள்கிறோமோ, அத்துணை சீக்கிரம், வாழ்க்கை சுலபமாகவும், சுவாரஸியமாகவும் ஆகிப்போகிறது.

எனவே, நமக்குள் கற்றறிவு நிரம்ப இருந்தாலும், குழந்தை தனத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்காமலும், குழந்தைகளிடத்தில் குழந்தைதனம் மாறாமல் இருக்கவும் நாம் பார்த்துக் கொண்டாலே, வாழ்க்கை எனும் வெங்காயத்தை கண்ணீர் சிந்தி உரித்து, அதில் ஒன்றும் இல்லை என்பது உரிக்காமலேயே தெரிந்து கொள்ள சாத்தியப்பட்டுவிடும். அதனால் நமக்கு மிஞ்சப் போவது , நேரமும், அதனால் ஏற்படக் கூடிய விரையமில்லா வாழ்வுமே.

வாழ முயல்வோமா !

Monday, September 24, 2007

வாழ்க்கை - அர்த்தம்? ( தொடர்ச்சி - I)



நீண்ட கால அவகாசம் எடுத்தமைக்கு மன்னிப்பை கோருகிறேன்.எதிர்பாரத விதமாக அவகாசம் எடுக்க வேண்டியதாயிற்று.தங்கள் பொறுமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்:)

வாழ்க்கை - இதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும். வாழ்வது தான் வாழ்க்கை. அவ்வளவாக மட்டுமே அதன் நோக்கம் இருக்க முடியும். ஆனால், நமக்கோ வாழ்க்கை என்பது தீர்த்து வைக்கும் பிரச்சனையாகவும், பிறப்பெடுத்ததே அதற்க்காகத்தான் என்பது போன்ற நோக்கம் கற்பிக்கப் பட்டது போல ஒரு உணர்வு தோன்றுகிறது.அல்லல் படுவதும் வாழ்க்கை என்பதும் தனித்தனி சொற்கள் இல்லை என்பது போலத் தான் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது.

எந்த நோக்கத்திற்க்காக நாம் பிறப்பெடுத்தோம் என்ற கேள்வி எல்லோர் மனதையும் தொடாமல் விட்டதில்லை. அர்த்தம் என்பது எல்லாவற்றிக்கும் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாய மனப்போக்கோடு நம் அணுகு முறை, எல்லா விஷயங்களிலும் இருப்பதினாலேயே, வாழ்க்கை என்பதும் ஒரு நோக்கத்திற்க்காக உண்டாக்கப் பட்டதாக நமக்கு எண்ணத் தோன்றுகிறது. சொல்லப் போனால், தத்துவார்த்தமாக வாழ்க்கையைப் நோக்கினால், அவரவர்க்கு ஏற்ற எண்ண வீச்சிற்க்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப வாழ்க்கைக்கு அர்த்தம் என்பது ஏற்படுகிறது. ஆனால் ஆன்மீக ரீதியில் வாழ்க்கையை உற்று நோக்கினால், வாழ்க்கைக்கு வாழ்வது என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை என்பது புலனாகும்.

வாழ்க்கையை அது போகும் போக்கில் சென்று வாழ்ந்து அனுபவி - இது மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு வாழ்பவனிடத்தில், வாழ்க்கை என்பதற்க்கு அர்த்தம், சுவையானதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், அப்பொழுதும், அதற்கு இன்னது தான் அர்த்தம் என்பதை அவன் தெரிந்து, வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான் என்று சொல்ல முடியாது. எவ்வித அர்த்தமும், நோக்கமும் கற்பிக்கப் படாமல், வாழ்க்கை எப்படி செல்கிறதோ, அதன் வழியே சென்று அதை முழுதும் சுவைத்து அனுபவிக்க மட்டுமே அவன் கற்றுக் கொண்டு வாழ்கிறான் என்று தான் கூறமுடியும்.

நம்மில் பலருக்கும், வாழ்க்கை திருப்தி அளிக்கும்படியே இருக்கிறது. எப்படி? வாழ்வை பிரச்சனையாக நினைத்து, அப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயன்று , அதில் வெற்றி காணும் போது ஏற்படும் திருப்தி தான், வாழ்வு தரும் ச்ந்தோஷமாக நம்மால் உணரப்படுகிறது. இந்த நிலையில் தான் சந்தோஷம் என்பதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை நாம் அணுகும் முறை பெரும்பாலும், இப்படித்தான் இருக்கிறது.வயது முதிர முதிர, நமக்கு,இப்படித்தான் வாழ்வை அணுக வேண்டும் என்ற முறை சமுதாயத்தால் கற்பிக்கப் படுகிறது.

பிறந்த குழந்தையாக இருக்கும் போது, நாமே வாழ்வாகத்தான் பிறக்கிறோம். அத்துணை சக்தியோடு தான் நாம் இருக்கிறோம். நம்மில் இருக்கும் அந்த சக்தியை எந்த வித தடைகளுமின்றி செயல்படுத்தி ஆனந்தம் கண்டோம். காரணமே இல்லாமல் துள்ளிக் குதித்து மகிழ்ந்ததும் அதனால் தான். காரணம் வெகுளித்தனம்.வயதாக ஆக, எப்போது, வாழ்வை வாழ வேண்டும் என்ற விழிப்பு நமக்குள் நேரிடுகிறதோ, அப்படி இருத்தல் தான் வளர்ச்சியின் அறிகுறியாக நாம் முறைப்படுத்தி கொண்ட பட்சத்தில் வெகுளித்தனம் மறைந்து புத்திசாலித்தனம் மேலிட ஆரம்பிக்கிறது.

ஒன்றை இங்கு புரிந்து கொள்ள வேண்டும், வெகுளித்தனம் மட்டுமே வாழ்வை அதன் போக்கிலேயே சென்று வாழ வழி வகை செய்ய முடியும். விஷய ஞானம் அளிக்கும் புத்திசாலித்தனம் தான், வாழ்க்கையை கடினப் படுத்தி, சுலபமாக வாழ வேண்டிய வாழ்க்கையை, கடினமான பாதையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. வேகுளித்தனம் மிகுந்தவர்களின் வாழ்வு, நிச்சயமாக புத்திசாலித்தனம் மிகுந்தவர் வாழ்வை விட சிறப்பாகத்தான் இருக்க முடியும்.

அதனால் தான் வெகுளித்தனம் மிக்க குழந்தைகளால், வாழ்வை அத்துணை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் சிறக்க வாழ் முடிகிறது. எப்போது, வெகுளித்தனத்தை , முற்றிலும் போக்கி, புத்திசாலித்தனத்தை மனம், அடைய முயல்கிறதோ, அப்போதே வாழ்வின் உண்மையான சுவை, வேறு விதமாக மாற்றப்பட்டு, இது தான் வாழ்க்கையின் சுவை என்று நமக்கு நாமே வகுத்துக் கொண்டு, நாம் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம். இது முற்றிலும் இயற்கைக்கு முரணானது. எது ஒன்று இயற்கைக்கு முரண்பட்டு நிற்கிறதோ, அது நிச்சயமாக பலவீனமானதாகவும், நிரந்தரமில்லாததாகவுமே இருக்க முடியும். மாயை என்பதும் இது தான். இருப்பது போல இருக்கிறது. ஆனால், இல்லாததாகத் தெரிகிறது. வாழ்க்கை என்பது பல நேரங்களில் கசந்து போவதற்கு காரணம்,சில சூழ் நிலைகளில், அந்த எதார்த்தத்தை மனம் உணர்ந்து திரும்புதல் தான்.

( பதிவு நீண்டு விட்ட காரணத்தால் , அடுத்த பதிவில் தொடரலாம் என்று நினைக்கிறேன் )