
இனிக்கச் சுவைக்க வேண்டிய வாழ்க்கையை, நாம் ஏன், வாழ்க்கை என்பதே ஒரு குறிக்கோளுக்காகத் தான் என்று உருவகப்படுத்தி, அக்குறிக்கோளை அடைந்து விட்டால், வெற்றி கண்டதாகவும், அக்குறிக்கோளை அடையா விட்டால், தோல்வியை தழுவியதாகவும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறோம்.
இலக்கு என்பதை வெகு சுலபமாக, அமைத்து விடுகிறோம். அதனை அடையும் வழியைத் தான் வெகு கடினமாக வகுத்துக் கொள்கிறோம். அதற்க்காக போராடவும் செய்கிறோம்.இதே போக்கில் வாழ்வை நாம் அமைத்துக் கொண்டால், அந்த போராட்டம் எப்போதுமே தொடர்வதாகத் தான் வாழ்வு அமையும். ஏனெனில், நமது குறிக்கோள்கள், வாழ்வின் போக்கின் படி மாறிக் கொண்டே தான் இருக்கும். ஒன்றை சாதித்து முடித்த பின், அடுத்தது என்ன சாதிக்க போகிறோம் என்ற மன நிலையே மிஞ்சும். அதற்காக குறிக்கோள் இல்லாமல் இருந்து விடு என்று கூறவில்லை. வாழ்க்கைக்கு என்பதற்க்கு தனியான குறிக்கோள் இருக்கிறது என்று அர்த்தம் கற்பித்துக் கொள்ளாதே என்று தான் கூற விழைகிறேன்.
பின் எப்படித் தான் வாழ்வை எடுத்துக் கொள்வது ? என்ற கேள்வி எழுகிறது ! இல்லையா ! வெகு இயல்பாக, சுலபமாக, பதமாக, இதமாக, எதார்த்தமாக, வாழ்வை எடுத்துக் கொள்ள தெரிந்தாலே, வாழ்க்கை வெகு சுலபமாகிப் போய்விடும்.குழந்தைகளைப் போல.வாழ்வை தம் போக்கில் சுகமாக்கிக் கொள்ளும் ஜீவன்களைப் போல, இருக்க முயன்று விட்டாலே, வாழ்க்கையின் அற்புத சுவை தெரிய ஆரம்பிக்கும். இப்போது ,இன்னது தான் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை வகுத்துக் கொள்ளாமல், மனம் சந்தோஷத்தில் திளைக்கும் வண்ணம், பிடித்த விஷயங்களை செய்து, பிரயத்தனமே இல்லாமல், தன் விருப்பப்படி வாழக் கற்றாலே, வாழ்க்கை பிரியமாகிப் போகும்.மனதில் எப்போதும் சந்தோஷக் கூத்தாட்டம் கிடைக்கும்.அந்தந்த நிமிடம், வாழும் கலை தெரியும்.
யாருக்காகவோ, எதற்காகவோ நம் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் நமக்குள்ளேயே அடக்கிக் கொண்டு, எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்களே, அதனால் நானும் ஓட வேண்டுமோ என்ற எண்ணத்திலேயே, ஓட ஆரம்பித்து விடுகிறோம். அந்த ஓட்டம், நம் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஓய்வே கிடையாது. இப்படியே தொடர்ந்து ஓடுவதால், கடைசியில் மிஞ்சப் போவது சோர்வே. அச்சோர்வை அடைந்த பின் தான் தெரியும் , நாம் ஏன், எதற்க்காக ஓடிக் கொண்டிருக்கிறோம், அதனால் ஏற்ப்பட்ட விளைவு என்ன என்பது..
மூன்று தாரக மந்திரத்தை அவ்வப்போது நமக்குள் சரி பார்த்துக் கொண்டாலே போதும், வாழ்வு சுலபப்பட்டு விடும். என் விருப்பப்படி, என் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறதா? வாழ்வின் எல்லா நிமிடங்களிலும், என் சந்தோஷம் கெடாமல் என் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளேனா? ஒரு குழந்தையைப் போல் என்னை நான் உணர்கிறேனா? இக்கேள்விகளுக்கு, திருப்தியான பதில்களை உங்களால் கொடுத்துக் கொள்ள முடிந்தாலே, உங்கள் வாழ்க்கை அற்புதமாக, உங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.
வாழ்க்கை என்பது ஒரு சூன்யம். ஒன்றுமே இல்லாதது. வெங்காயம் போல. உள்ளே எதாவது இருக்கிறதா என்ற ஆவலோடு தான் அதனை உரிக்க ஆரம்பிக்கிறோம். உள்ளே செல்ல செல்லத் தான், ஒன்றுமே இல்லை அங்கே என்பதை கண்டு கொள்ள நேரிடுகிறது. ஆனால், கண்டு கொண்டு சுதாரிக்கும் போது, நம் வாழ்க்கை முடியும் தருவாயில் போய் விடுகிறது. எத்துணை சீக்கிரம், வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை நாம் கண்டு கொள்கிறோமோ, அத்துணை சீக்கிரம், வாழ்க்கை சுலபமாகவும், சுவாரஸியமாகவும் ஆகிப்போகிறது.
எனவே, நமக்குள் கற்றறிவு நிரம்ப இருந்தாலும், குழந்தை தனத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்காமலும், குழந்தைகளிடத்தில் குழந்தைதனம் மாறாமல் இருக்கவும் நாம் பார்த்துக் கொண்டாலே, வாழ்க்கை எனும் வெங்காயத்தை கண்ணீர் சிந்தி உரித்து, அதில் ஒன்றும் இல்லை என்பது உரிக்காமலேயே தெரிந்து கொள்ள சாத்தியப்பட்டுவிடும். அதனால் நமக்கு மிஞ்சப் போவது , நேரமும், அதனால் ஏற்படக் கூடிய விரையமில்லா வாழ்வுமே.
வாழ முயல்வோமா !

