
"வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்..
என்னடா பொல்லாத வாழ்க்கை..
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்..
மேற்கூறிய பாடல்கள் எல்லாமே வாழ்க்கை என்பது இப்படித் தானோ என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாடல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை என்பதே ஒரு நோக்கத்திற்க்காகத் தான் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது என்று தான் ஆதி முதல் அந்தம் வரையிலான, நமது புராணங்களும், இதிகாசங்களும் சொல்லி வந்திருக்கின்றன.
வாழ்க்கை என்பதன் குறிக்கோள் என்ன? வாழ்க்கையில் எதை நாம் தேடுகிறோம்? நம் பிறப்பின் பலன் என்ன?எதை சாதிக்க நாம் பிறந்தோம்? - இத்தகைய கேள்விகள் தொட்டுச் செல்லாத துடிப்புள்ள மனங்கள் குறைவு. அவரவர் சூழலுக்கேற்ப்வும், ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்பவும், நாம் இத்தகைய வினாக்களுக்கு தத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் விளக்கங்களை தேடி,அவ்விளக்கங்களில்,சிலவற்றிக்கு உடன்பட்டும், சிலவற்றிற்கு உடன்படாமலும்,மேலும் சிலவற்றிக்கு, குழம்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.
சரி..இது போன்ற கேள்விகள் எப்போது எழுகின்றன. அறிவின் தாக்கத்தை அறியும் வயதில் தான் இது போன்ற கேள்விகளும், தேடல்களும் அரும்ப ஆரம்பிக்கின்றன. கூர்ந்து கவனித்தோமேயானால், இவ்வகையான தேடல்களுக்கு முன் , நாம் எப்படி இருந்திருக்கிறோம்?. அதாவது, நம் குழந்தை பருவத்தில் நாம் எப்படி வாழ்வை எதிர் நோக்கியிருக்கிறோம் என்று சிந்தித்தால், எல்லோருக்குமே அதற்குண்டான விடை தெரியும். சின்ன வயசுல, நான் எவ்வளவு அற்புதமாக வாழ்கையை வாழ்ந்திருக்கிறேன் தெரியுமா..? என்று தான் பெரும்பாலும், சிறு பிராய வாழ்க்கையை ரசித்து கூறுபவர்கள் இருக்கக் கூடும். இது ஏன்? அத்தகைய வயதில் நமக்கு நிகழ்ந்தவை என்ன?
சிலர் கூறுவர் - " அந்த வயசுல..பெருசா பொறுப்புன்னு எதுவும் இல்ல.." ;
"எதெல்லாம் ரசிக்க முடியுதோ..சந்தோஷம் தருதோ..அதை எவ்வித தயக்கமும்மின்றி அந்த வயசுல பண்ண முடிஞ்சது.." - இது மற்றொருவரின் விளக்கம்.
இவ்வாறு நிறைய காரணங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். சிறிய வயதில், அறிவை பெரிய அளவில் வளர்க்காத வயதில், நாம் கண்ட இன்பத்தை, சிறுவயதைக் கடந்து, அறிவை பெறுக்கி, வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை அறிய விழையும் வயதில்,நம்மால் காண முடிகிறதா..? காண முடிகிறது என்றால் ஏன்?..காண முடிவதில்லை என்றால், ஏன் காண முடிவதில்லை?
சரி..! கருத்துப் பரிமாற்றத்திற்காக இப்பதிவை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். தங்கள் , கருத்துப் பகிர்தலோடு மேலும் தொடரலாம் என்று நினைக்கிறேன். :)