யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Tuesday, December 11, 2007

பெ(ஆ)ண்


ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் பொருத்தமான படைப்பு தானா? பொருத்தம் என்றால், எந்த விதத்தில்? இல்லை என்றால், காரணம் என்ன?

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ! :)

---------------------------------------------- ****** ---------------------------------
காலதாமதமாக இப்பதிவை பதிப்பதற்க்காக வருந்துகிறேன். மன்னிப்பையும் கோருகிறேன். இத்துணை நாட்கள் பொறுமை காத்தமைக்கு நன்றிகள் பல !

ஆணையும், பெண்ணையும் படைத்த இயற்க்கையின் முன் இருவரும் மிகச் சிறந்த பொருத்தம் உடையவரே..உடற்கூறு அளவில்...

ஒருவருக்கொருவர் பொருந்தும் விதத்திலேயே தான், இருவரின் உடற் பரிணாமங்கள் அமைந்திருக்கிறது. ஆனால், பரிணாம வளர்ச்சியினால், செழித்தது, உடற்கூறு மட்டுமல்ல. மனக்கூறும் தான்.

ஆண் ,பெண் இருவருக்கும் , மனரீதியினால் அமைந்துள்ள வேறுபாடுகள், அளவிடற்கரியன. சிந்திப்பதிலும், செயல்படுவதிலும், முனைந்து செயலாற்றுவதிலும், இருவருக்கும் உள்ள வேறுபாடு மிக அதிகமே. எத்துணை தான் வேறுபாடுகள் இருப்பினும், சரிவிகித புரிதல் ஒன்றே, அவ்வேறுபாடுகளை களைந்து, நல்ல உறவு முறைக்கு வழி வகுக்கக் கூடும். ஆனால், இயல்கிறதா? அது தான் கேள்வி !

இருவருக்குமே உறவு முறைகளில், ஒரு வித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தான் மற்றொருவரை, நேசிக்கும் போது, எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படியே தன்னை நேசிப்பவரும், நடந்து கொள்வதே சரியானது என்று எண்ணும் எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பு தான், எத்துணை புரிதல் இருப்பினும், உறவில் குழப்பம் விளைவிக்கும் கூற்றாக அமைந்து விடுகின்றது.பெண் - தான் சொல்வதை ஆண் , காது கொடுத்து கேட்பதேயில்லை என்றும் , ஆனால், எதையும் கேளாமலே, தீர்மானத்திற்கு வரும் குணவான்களாக ஆண்கள் இருப்பதாக கருதுகின்றனர். ஆனால்,ஆணோ -தான் செய்யும் ஒவ்வொரு செயலையும், மேல் நிலைப் படுத்த , பெண் எப்போதும் முயல்வதாகவும், அவர்களை அவர்கள் வழியில் செல்ல பெண் அனுமதிப்பதில்லை என்றும் கருதுகின்றனர்.

வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைக்குண்டான தீர்வை, தனி மனிதனாக சிந்தித்து தீர்த்து வைக்கும் குணம் ஆணுடையது. ஆனால் பெண்ணோ, தன் பிரச்சனைகளை வாய் மூலம் பிறரிடம் பேசி, தீர்மானத்திற்க்கு வரும் குணத்தை உடையவர்கள்.எந்த விஷயத்தையும், பிறரிடம் பகிர்ந்து, ஒரு முடிவுக்கு வரும் பெண்கள், நிச்சயம், பிறரை சார்ந்தே, தனக்கு வேண்டியவற்றையும் தீர்மானிக்கின்றனர். ஆனால், ஆணோ தனக்கு என்ன வேண்டும் என்பதில், தானே சுயமாக முடிவெடுக்கும் குணம் படைத்தவனாக இருக்கிறான்.

பிறரை சார்தல் என்பது, பிறரின் மேல், நம்பிக்கை இருந்தாலொழிய நடக்க இயலாது. பெண், வெகு சுலபமாக, பிறரை நம்பி விடுகிறாள். ஆனால், ஆண் அத்துணை சுலபமாக மற்றவரை நம்பி விடுவது இல்லை.பெண்ணுக்கு, ஒரு பிரச்சனைக்கு, உடனடியாக ஒரு தீர்வு தேவைப்படுவதில்லை. அவர்களை மற்றவர்கள் புரிந்து கொண்டாலே போதும் என்ற மன நிறைவைத் தான் அவர்கள் எதிர்பார்கின்றனர். ஆனால் , ஆணுக்கு, ஒரு பிரச்சனைக்கு உடனடித் தீர்வு தேவை. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், ஆண்கள் - Result Oriented .

ஒரு பெண், ஆணிடம் தன் பிரச்சனையைப் பற்றி பேசும் போது, அவளுக்கு ஒரு தீர்வினை அந்த ஆண் தர வேணும் என்று எண்ணிப் பேசுவதில்லை. மாறாக, அவள் சொல்வது, முழுதும், கவனிக்கப் படவேண்டும் என்ற எண்ணத்திலேயே, தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறாள்.

ஒரு ஆண், அன்பினையும், காதலையும், பிறர் தனக்குத் தேவை என்ற நேரத்தில் மட்டுமே தான் உணர்கிறான், ஆனால், பெண்ணுக்கோ, அவ்வுணர்வு, தான் மதிக்கப்படும் போதும், பாராட்டிக் கூறப்படும் போதும், பாதுகாக்கப்படும் போதும் உணரப்படுகிறது. ஆக, ஆணுக்கு தன் நிலைப் பற்றிய புரிதல், பெண்ணிடம் கிடைத்தாலே பெரும் திருப்தி கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு, தன்னை பற்றிய உயர்ந்த எண்ணமும், பாரட்டுதலும், ஆண் தன்னிடம் அன்பாகவும், காதலுடடையவனாகவும், இருக்கும் போதே கிடைத்து விடுகிறது.

ஆணின் தேவை, அன்னியோன்யமாக இருக்கும் போதே பூர்த்தி ஆகிவிடுகிறது அந்த அன்னியோன்ய சூழலில் இருந்து விடு பட்டவுடனே, ஆண், மிடுக்கானவனாகவும், சார்தலில்லிருந்து (dependence )விடுபட்டவனாகவும் ஆகிபோகிறான். சிறிது காலம் கழித்த பின் தான், திருப்பவும் அவனுக்கு அன்னியோன்ய சூழல் தேவைப்படுகிறது. தேவைப்படும் போது மட்டுமே, அவன் பெண்ணை சார்ந்திருக்க முடிகிறது.அவன் தேவை பூர்த்தி ஆனதும், அவனுக்கு சார்ந்திருத்தல், தேவையில்லததாக ஆகிறது. இது இயற்கையாகவே அவனுள் நடக்கும் மாற்றம்.

பெண்ணோ இநநி்லைக்கு எதிர்மறை.

விழுந்து எழும் அலைகள் போல, அவளின் உணர்வுகள் வெளிப்படும். எப்பவும் சார்தலையே அவளின் தன்மைகள் பிரதிபலிக்கின்றன. தன் சுய மரியாதை மிகும் இடங்களில், அதாவது தன் சுய மரியாதை வெகுவாக தூண்டப்படும் போது, அவள் மிகுந்த அன்பை ஆணுக்கு வாரி வழங்கி, அன்னியோன்யமாக இருக்க ஆரம்பிக்கிறாள். சுய மரியாதை சற்று குறைவாக இருக்கும் போதும், அவளால், ஆணுடன் , அன்னியோன்யமாக உணர முடிவதில்லை.

பெண்ணுக்கு, அக்கறை, புரிதல்,மரியாதை, பக்தி, மதிப்பீடு, உறுதிப்படுத்தல் ஆகியன தன் உணர்வுகளை சுலபமாக காட்டவும், கிரகித்துக் கொள்ளும், உணர்வுத் தேவைகளாக உள்ளன. ஆணுக்கு, நம்பிக்கை,ஏற்றுக் கொள்ளல், பாராட்டுக்கள்,ஈடுபாடு, சான்றுரைத்தல், உற்சாகப்படுத்தல் ஆகியன உணர்வுத் தேவைகளாக உள்ளன. இவ்விரண்டு நிலைகளையும் சரிவர உணர்ந்து, புரிந்து, செயல் படும் ஆணும், பெண்ணும் சரநிகர் பொருத்தம் , தமக்குள் இருப்பதாகவே உணரப்படுவர்.

தத்தம் ,துணையின் உணர்வுகளையும், இயல்புகளையும் ஏற்றுக் கொண்டாலே, ஒருவருக்கொருவர் பொருத்தமான உணர்வை இருவரும் பெற்று விடலாம். பெண்ணைப் போல் ஆண், எப்போதும் காதல் வயப்பட்டவனாகவும், பாசம் மிக்கவனாகவும் இருக்க இயல்வதில்லை. வாழ்ககையின் பல சவால்களை அவன் சந்திக்க நேரிடும் போது அவனுள் இருக்கும் காதல் மறைந்து, அவன் கடமையும், அவனின் குறிக்கோளுமே அவன் மனதில் உணர்வுகளாக இருக்கிறது. அது அவனின் குற்றம் அல்ல. இயற்கை.

பெண்ணோ, எப்பவும் உணர்ச்சிப்பிழம்பாகவும், காதல் வயப்பட்டவளாகவுமே இருக்கிறாள். எவ்வித சவால் நிறைந்த சூழலும், அவளின் இத்தன்மையை மாற்றுவதிற்க்கில்லை. அது அவளின் இயற்கையாகிப் போகிறது, இவ்விருவரின் நிலையை புரிந்து நடந்தாலே, வீணாக உண்டாகும் விவாதங்களை தவிர்த்து விடலாம்.

ஆணை - அவன் ஒரு ஆண், அவனின் இயல்பு இன்னது தான் என்று முழுதும் தெரிந்து புரிந்து, நடத்துவதாலேயும், பெண்ணை, அவள் தன்மை இது தான் என்ற புரிதலோடு கையாள்வதாலேயும், சுலபமாக ஆண், பெண் பொருத்தத்திற்கு தீர்வு காணலாம். இயற்கைப் படைத்த ஆணும், பெண்ணும், உடல் அளவில், மிகப் பொருத்தம் உடையவரே, என்றாலும், உணர்வு பூர்வமான பந்தம் என்ற நிலையில் பார்த்தால், நாகரீகம் கருதி, ஒருவரின் நிலையை, மற்றொருவர், தெரிந்து, புரிந்து, ஏற்று நடந்தாலே, மனப் பொருத்தமும் அமைந்துவிடும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :)