யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Wednesday, November 14, 2007

தி ..யாகம்தியாகம் !!

எது தியாகம்? தியாகம் என்பதற்குண்டான அர்த்தம் என்ன? எவையெல்லாம் தியாகம் என்ற வகையைச் சார்ந்திருக்கும்? ஏன்?

உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். :)

----------- ** -----------
தியாகம் என்பதைப் பற்றி சொல்வதற்க்கு முன், எல்லோராலும், தியாகம் சார்ந்த நிகழ்வுகளாக கருதப்படும் செயல்கள் பற்றி பேசுவோம்.

இரு மனம் சங்கமித்து, திருமண வாழ்வில் தியாகம், நாட்டுப் பற்றினால் மக்கள் துயர் துடைக்கப் புறப்பட்டால் தியாகம். தன்னையே, இழந்து பிறருக்காக செய்யப்படும் எல்லா செயல்களுமே தியாகம், பெற்ற பிள்ளைகளுக்காக, பெற்றோர் சிரமப்படுவது தியாகம்.கட்டிய மனைவிக்காக, கணவன் கட்டுண்டால் தியாகம்.ஆக, எல்லோருக்குமே, வாழ்க்கையில், ஏதோ விதத்தில் , தாம் தியாகம் செய்கிறோம் என்ற உணர்வும், அதனால், மேலோங்கி இருக்கும் ஒரு உயரிய எண்ணமுமே, தியாகம் என்பதை உயர்த்தி கூற ஏதுவாக இருக்கும் காரணங்கள்.

தியாகம் செய்தல் மிக உயர்ந்த நிலையாக பார்க்கும் பட்சத்தில், சில சமயம், கடமை, பொறுப்பு, அன்பு, அரவணைப்பு போன்றவை எல்லாமே, தியாகச் செயல்களாக எடுத்துக் கொள்ளப் படுவது தான் பரிதாபம். அதிலும், தன்னையே தியாகம் செய்வது (self sacrifice) என்ற நிலை என்னால் புரிந்து கொள்ளப்படாத நிலையாகவே உள்ளது.

யாரும் முயலாத, எண்ணிப் பார்க்க முடியாத ஒரு செயலை, மற்றொருவர் செய்யும் போது, மிகப் பெரிய தியாகம் புரியப்பட்டதாக, அனைவரும் எடுத்துக் கொள்ள மட்டுமே, இந்த தியாகம் என்ற சொல் பயன்படுத்த பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

பத்து மாதம் சுமந்து, கடுமையான வலியையும் , வேதனையும் அடைந்து, ஒரு பிள்ளையை ஈன்றெடுத்து, அதனை சீராட்டி, பராட்டி வளர்த்து, அப்பிள்ளையை நல்வழிப் படுத்தி, ஒரு சீர் நிலைக்கு உயர்த்தும் ஒரு தாயிடத்தில், தியாகம் குடி கொண்டிருக்கிறது என்பதே பொதுவாக பேசப்படும் வாதம். ஆனால், ஒரு நிமிடம், அப்பிள்ளையா, தன்னைப் பெற்று, நல் வழிப்படுத்து என்று சொல்லியது. என்ற கேள்வி எழுப்பினாலே போதும், அத்தாய் செய்த செயல்கள் தியாகம் என்ற நிலைக்குள் வருமா என்பது தெரிந்து விடும்.

தனக்கு வேண்டும் என்ற நிலையில் தான், ஒருவளோ, ஒருவனோ, திருமண பந்தத்தில் ஈடுபடுவது. அதன் மூலம், தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் பெறப்படுவனவே பிள்ளைகள். பெற்ற பிள்ளைகளை சீராக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் பெற்றோருடையதே. இதில் தியாகம் எங்கே வந்தது.

தனக்கு வேண்டும் என்ற ஆசையிலும், ஆசையால் விளைந்த அன்பால் நிகழும் செயல்களுக்கெல்லாம் தியாகம் என்ற பெயர் சூட்டி, உண்மை அன்பையும், பாசத்தையும் முழுதும் உணராமல், தன் உறவு கொண்டாட்டத்திற்கு களங்கம் , கற்பிப்பது போல, பிள்ளையை பெற்று வளர்த்ததையே, மிகப் பெரிய தியாகம் செய்ததாக எண்ணிக் கொள்ளும் மனிதர்களை என்னென்று சொல்வது.!

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும், தன் விருப்பம் விடுத்து, மற்றவரின் விருப்பம் நிறைவேற்றுவதும், ஆகிய செயல்களின் காரணம் ஆழ்ந்த அன்பு மட்டுமே. எப்போது, ஒருவருக்கு, தான் தியாகம் செய்வது போல எண்ணம் தோன்றி, மேற் கூறிய பரிமாற்றம் நிகழ்கிறதோ, அவர்க்கு பூரண அன்பு மலரவில்லை என்பதை சொல்லத் தான் வேண்டுமோ.

சுயம (Self)் என்பது, எப்போதும் திருப்தியை நோக்கியே பயணிக்கிறது. அது தான் அதன் இயல்பு. சுயத்தை,துன்புறுத்தி, யாராலும் எந்த செயலையும் செய்தல் இயலாது. தனக்கு திருப்தி அளிக்கும் செயல்களை மட்டுமே, சுயம் அனுமதிக்கும். ஆக, எந்த ஒரு செயலை, யாருக்காகவாது செய்தலும், விட்டுக் கொடுத்து போதலிலும், அடிப்படையான சந்தோஷத்தை சுயம் பெறுகிறது.

ஆத்ம திருப்தி, இல்லாமல், மற்றவருக்காக செய்தல் என்பது நடை பெற இயலாது.ஆக, பலன் என்பது, நாம் செய்யும் செயல்களிலிருந்து நமக்கு கிடைக்கத்தான் செய்கிறது.அது பொருளாகத் தான் கிடைக்க வேண்டும் என்றில்லை. நம் சுயம் திருப்தி அடையும் செயல்களை, அன்பின் காரணமாகவோ, ஆழ்ந்த காதலின் காரணமாகவோ நாம் செய்கிறோமே தவிர, தியாகம் செய்கிறோம் என்று எண்ணும் நிலையில், அங்கு, அன்பும் , காதலும், வேட்கையும் சாகடிக்கப்படுகிறது.

Tuesday, November 6, 2007

and A.. Abstract thinking..


எண்ணங்களே நாம். நம்மை ஆட்டுவிப்பதும், ஆர்ப்பரிக்க வைப்பதும் அவைகளே. எண்ணங்களின் தன்மையே, ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கிறது. மனம் வேறு, அறிவு வேறு என்ற வேறுபாடுகள் பேசினாலும், இல்லை, இரண்டும் ஒன்று தான் என்று கருத்தினைக் கொண்டிருந்தாலும்,அதையும் நம் எண்ணுதல் மூலமே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

எண்ணங்கள் வலுவானவை. நம்மை வழி நடத்துவையும் அவையே. ஒருவர் கொண்டிருக்கும் எண்ணங்களே, அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என்பதை உறுதி செய்யும்.

அன்றாடம் நம்மை சுற்றி , நம் வாழ்வில் பல நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால், அவற்றில் எவற்றை நாம் அதிகம் கிரகித்து தக்க வைத்து, அவ்வெண்ணங்களின் வழியே, உலகை உற்று நோக்குவதும், அவ்வெண்ண்ங்களின் தாக்கம் காரணமாக, நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நம்மை உருவாக்கிக் கொள்வதும் அவரவர் கையிலே.

தீதும் , நன்றும் பிறர் தர வாரா. ஆக, எல்லாமே நாம் எண்ணுவதிலும், அவ்வெண்ணங்களைப் பற்றி தீவிர சிந்திப்பும், அச்சிந்திப்பின் விளைவாக, செயல்படுதலும், பின் செயல்பாட்டுக்குத் தகுந்த விளைவுகளையுமே அனைவரும் அனுபவித்து வருகிறோம்.

நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பது ஒரு வகை என்றால், அந்நிகழ்வுகளை சார்ந்து, நம் எண்ணங்களை விரிவுபடுத்துதல் மற்றொரு வகை. ஏன், எப்படி, எதனால் என்ற கேள்விகளும், அதைத் தொடர்ந்து அக்கேள்விகளுக்கான சரியான பதில்களை தேடுவதுமே , எண்ணங்களை விரிவுபடுத்த உதவும் கருவியாக இருக்கிறது. ஆக, அறித்ல் என்பதை அடுத்து, பகுத்தறிதல் என்ற நிலையில் தான் எண்ணங்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

சிந்தனை ஒரு விதமான சுவை.தேடல், ஒரு வகையான ஆனந்தம். ஆறறிவு கொண்ட எல்லோருக்குமே சிந்தனைத் திறன் உண்டு. ஆனால், அச்சிந்தனையைக் கொண்டு வாழ்வில் அவர்கள் தேடுதல் என்ற நிலையை அடைவதன் மூலம் தான் அவர்களின் எண்ணம் விரிவாக்கம் பெறுகிறதா இல்லையா என்பதை கூற முடியும்.

இருப்பதை இருப்பதாக ஏற்றுக் கொள்வதில் , செளக்ரியம் உண்டு தான். ஏனெனில் , அதில் சிரமப் பட வேண்டாம். எது எதுவாக சொல்லப்பட்டதோ, அது அதுவாகவே உணரப்படும் என்று சுலபமாக சொல்லிக் கொண்டு காலத்தை தள்ளி விடலாம். காலகாலமாக, பழக்கத்தில் இருந்துவரும், நம்பிக்கைக் கோட்பாடுகளும், இத்துணைக் காலம், வேறூன்றி நின்று நிலைத்து நிற்கும், என் கலாச்சாரமும், அதனைச் சார்ந்த சம்பிரதாயங்களும், எனக்கு நல்லன தராமலா போய்விடும் என்ற எண்ணமும், என் முன்னோர்களை விட நான் என்ன பெரிதாக எண்ணி விடப் போகிறேன் என்ற எண்ணமும், இத்துணைக் காலம், சீர் காத்து வந்திருக்கும் என் பண்பாடு, என் எண்ணங்களால் சீர் குலைந்து போக நான் காரணமாக இருக்கலாமா என்ற எண்ணமுமே, நம்மில் பலரை எண்ண விரிவாக்கத்திற்கு தடை போட வைத்திருக்கிறது.

யாருக்குத் தான் எழாது கேள்வி. யாருக்குத் தான் வராது சந்தேகம். வாழ்வு என்பது இப்படித்தானா. கடைசி வரை ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டுமா. பிடித்ததோ, பிடிக்கவில்லையோ, என்னைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு கட்டுப் பட வேண்டுமா. ஆம் ! என்றால், ஏன்.இல்லை என்றால், ஏன் ! எனக்கு என் வாழ்வில் என்ன வேண்டும், எதை நோக்கி நான்.. இவை எல்லாமே எல்லோருக்குள்ளும் எழும்பத்தான் செய்கிறது. ஆனால், அதை எல்லாம், சிரத்தையாக கவனித்து, அக் கேள்விகளுகுண்டான பதில் கிடைக்குமா, இல்லை, நான் தேடவேண்டுமா என்பதை அவரவரின் ஈடுபாடும், தெரிந்து கொள்ளும் ஆர்வமும், சொன்னதிற்கேல்லாம் தலை ஆட்டாமல், ஏன் என்ற கேள்வியை எழுப்பி விடை காணும் பழக்கமுமே நிர்ணயிக்கிறது.

ஆனால், அத்தகைய நிலையை அடைய அசாத்திய தன்னம்பிக்கைத் தேவைபடுகிறது. தன்னம்பிக்கை வளர்த்தல் ஒரு புறம் என்றாலும், தன்னபிக்கை ஊட்டலில் தான் ஒருவன், அத்தகைய உறுதியைப் பெறுகிறான். தன்னபிக்கை ஊட்டல், சூழலிலிருந்து தான் கிடைக் பெறும். ஆக, எச்சூழலில் ஒருவன் வளர்க்கப் படுகிறானோ, அதற்குத் தக்கவாறே, அவன் தன்னம்பிக்கை வலுப்பெறுகிறது. அவ்வலுவூட்டமே, கேள்விகளை அவனுள் எழுப்ப ஏதுவாகிறது. கேள்விகளை எழுப்பத் தொடங்கியவுடனே, அவன் எண்ணங்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

ஏன்? என்ற கேள்வி ஒன்றே, இப்போது நாம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சிக்குக் காரணம். பரிணாம வளர்ச்சி என்பதற்கு முடிவு தான் ஏது. வளர்தல் ஒரு முடிவுறா பயிற்சி. ஒரு கேள்விக்கு ஒரு விடை தான் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால், வளர்ச்சி என்பது, எப்போதோ தடை பட்டு போயிருக்கும். எண்ணங்களின் விரிவாக்கமே, தடையில்லா வளர்ச்சி காண உதவும் கருவி.

எண்ணங்களின் விரிவாக்கத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருவது என்க்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மனதில் எழும் ஒரு கேள்விக்கு, ஓராயிரம் பதில்கள் உண்டு என்பதை வெகு நிச்சயமாக நான் நம்புகிறேன். ஏன்? இந்த பதிவே கூட அத்தகைய விரிவாக்கமே.

கடந்த ஆறு பதிவுகளையும், இங்கு பதிக்க தூண்டு கோலாக அமைந்த திரு.குமார் அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றியையும், இது போன்ற சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து, என்னையே எனக்குள் திருப்பிப் பார்க்க வைத்து, எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் சமர்பிக்கிறேன்.இத்துணைக் காலம், தனி ஒரு மனித குண நலன்கள் பற்றி, தனித் தனி பதிவா என்று எண்ணியும், ஆர்வம் மிகுதியால் அதை படித்து, பொறுமை காத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள். !


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Thursday, November 1, 2007

S- Solitude, O- Obvious, W -Willful,M - Magnanimous , Y for Yield


Y - Yield

பணிதல்

பொதுவாகவே பணிந்து போவதென்பதை அடங்கிப் போவதாகவும், நமக்குத் தகுந்த நிலை அல்ல அது என்பதாகவுமே ்பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.ஒருவருக்கு கீழ் அடங்கிப் போதல் என்பது, ஏதோ நம்மையே நாம் அவர்க்கு கீழ் அடகு வைத்தது போலே தான் உணரப்படுகிறது. கிட்டத்தட்ட தன் நிலை தாழ்தல் போலவே, பணிதல் நிலை உணரப்படுகிறது. காரணம், " நான்" என்ற தன்முனைப்பு எண்ணமே. நம்மையே நமக்கு அறிமுகப்படுத்துதலும் அதுவே.

பொதுவாகவே, மற்றவர் நமக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம். நமக்கு அடங்கியிருப்பவர்களைத் தான் பெரும்பாலும் நாம் நேசிக்கிறோம். நம் சொல் பேச்சு கேட்பவர்களையும், நமக்குத் தலை ஆட்டுபவர்களையுமே நாம் அன்பு கொள்ளத் தலைப்படுகிறோம். அது தான், நாம் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த முறை என்றும் நினைக்கிறோம். காரணம், மற்றவர் நமக்கு முன், அடங்கிப்போகும் போது, நம் தன்முனைப்பு ஆனந்தம் கொள்கிறது. நம் உயரம்், அவர்கள் தலை தாழ்தலால், மேலும் உயரமாகிப் போகின்ற உணர்வைப் பெறுகிறோம்.

உற்று நோக்கினால், அப்படி ஒருவர் நமக்கு அடங்கிப்போதல் என்பது பாசாங்கு மட்டுமே. நாம் சென்றபின் , அளவுக்கு அதிகமாக, அடங்கிப்போனவர் எம்பிக் குதிக்கும் மன நிலையில் தான் இருப்பார். அதனால் தான், மேலதிகாரிகளிடம், மிகவும் அடங்கிப் போபவர், தனக்கு கீழ் இருப்பவர்களை வாட்டி வதைப்பபராகவே இருப்பார். அடங்கியிருப்பது பணிவாகாது. அது மரியாதையும் ஆகாது. அது சமயோஜித புத்தி மட்டுமே,.

பணிந்து போவதில் , கீழ்படிதலும் ஒரு வகையே. ஒரு நிகழ்வின் சகல விளைவுகளையும் புரிந்து கொள்வதால் மட்டுமே கீழ்படிதல் சாத்தியம். கீழ்படிதல் என்பது தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமால், தன் பணி சிறக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அதற்காக ஒருவரின் பேச்சுக்கு கீழ்படிந்து போவது.எதைச் சொன்னாலும், பணிந்து போவது என்றில்லாமல், நியாயமானதிற்க்காக பணிந்துபோவதே.

அடங்கியிருத்தல், கீழ்படிதல், இவை மட்டும் பணிதலின் வகையாகாது. இவை எல்லாவற்றிலும் உயர் நிலை உண்டு. அது தான் நான் இப்பதிவின் மூலம் தெரிவிக்கவிருத்த நிலை. ஒப்படைத்தல். சரணாகதி அடைதல்.மேற்கூறிய நிலைகளில், ஒருவர் மட்டுமே ஈடுபட அதிக வாய்புண்டு. ஆனால், ஒப்படைத்தல், பரஸ்பரம் நிகழக் கூடியது. இந்நிலையில் தான் இரு " நான்" களும் காணாமல் போகக் கூடிய சாத்தியங்கள் அதிகம்,இரு நபர்கள், தத்தம் தன்முனைப்பை, தாமிருவரும் ஒப்படைக்கும் விஷயத்திற்க்காக உதறி தள்ளி உறவு பாராட்டிக் கொள்ளல் சாத்தியமாகிறது.

தம்மை முழுதும் இழத்தல் ஒரு அரிதான நிலையே. நான் சொல்லும் இக்கருத்துகள் தத்துவார்த்தமாகத் தான் இருக்க இயலும். படித்து தெரிந்து, புரிந்து கொள்ள இந்நிலை சாத்தியமே இல்லை.உணர்ந்து மகிழ வேண்டிய நிலையே இந்த ஒப்படைத்தல் நிலை.

ஒப்படைப்பவர்களுக்கு கட்டளைகள் தேவையில்லை. வேண்டுகோள் போதுமானது. அதிகார தோரணை தேவையில்லை. அன்பு செய்கை போதுமானது. குறிப்புகள் தேவையில்லை.குறிப்பறிதல் போதுமானது. சொல்வதற்கு முன்பே செயல்கள். ஆழ்ந்த உள்ளுணர்வு மிகைப்படுவது ஒப்படைத்தலினால் தான். மொட்டுகள் மலர்வது எப்படி கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் நிகழ்வாக இருக்கிறதோ, அப்படியே இந்த ஒப்படைத்தலில் உறவு மலர ஆரம்பிக்கும்.

அடங்கிப்போபவர்கள் தான் அடக்கி விடுபவர்களாகவும் ஆகிறார்கள், அத்தகையவர்கள், ஒப்படைத்தலின் சுவை தெரிந்து கொண்டால், அவர்களின் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இயலாமையால் கிடைத்தவையாய் இல்லாமல், அன்புமயம் என்ற ஆழ்ந்த குளத்தின் குளிர்ச்சியால் கிடைத்தவையாயிருக்கும்.

இத்தகைய சுவையை ஏட்டில் புரட்டி மட்டும் சுவைக்காமல், பரஸ்பரம் அதை முழுதும் சுவைத்த , சுவைக்கின்ற நிகழ்வை என்னால் எழுத்தின் மூலம் வடிக்க இயலவில்லை !