யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Friday, August 24, 2007

க(ம்பன்)ண்ணதாசன் ஏமாந்தானா? ஏமாற்றினானா?பாடல் : கண்ணதாசன்
படம் : நிழல் நிஜமாகிறது

கம்பன் ஏமாந்தான் -
இளம் கன்னியரை ஒரு
மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது
பாய்வதினால் தானோ
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது
கொதிப்பதனால் தானோ...

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ...

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

இப்பாடலில் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ள வரிகள் (நீல நிற வரிகள்) சரியானவை தானா? அவ்வாறு ஏன் குறிப்பிட வேண்டும். இதைப் பற்றி தங்கள் கருத்துகள் என்ன? பகிர்ந்து கொள்வோமா..

=================
"நான் மானுட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

ரத்தத்திலகம் படத்தில் தானே நடித்து, கண்ணதாசன் பாடிய வரிகள் இவை. "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை " என்பதை வெறும் பாடல் வரிகளாக கொள்ள முடியவில்லை. கண்ணதாசன் ஒரு கவிஞனாக மட்டுமே பார்க்கப்படுபவன் இல்லை. திரை இசைப் பாடல்களுக்காக அவன் எழுதிய கவிதைகளை வைத்து, வெறும் திரைப்பட பாடல் கவிஞன் என்று என்னால் முத்திரைக் குத்த முடியவில்லை.

காலத்தை கடந்து நிற்கும் பாரதிக்கும் அவனது கவிதைகளுக்கும் சமமானவன் கண்ணதாசனும் அவனது படைப்புக்களும்.அவனது ஒவ்வொரு வரிகளும், அவனுடைய இயல்பையும், வாழ்க்கை குறித்து அவன் கொண்டிருக்கும் அபிப்ராயங்களையும் தெள்ளத் தெளிவாகத் தான் காட்டி வந்திருக்கின்றன. திரை ஊடகம் ,அவன் படைப்புகளை, அவனது எண்ணங்களை பாமரனிடத்தில் கொண்டு சேர்த்தன. அவனை கவியரசு கண்ணதாசனாக காண்பதை விட, வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து முத்தெடுத்த ஒரு தீர்க்கதரிசியாகத் தான் நான் காண்கிறேன்...

திரை இசைப் பாடல்கள் எழுதும் கவிஞர்கள், பொதுவாக, திரையில் அப்பாடலை பாடி நடிக்கும் பாத்திரப் படைப்பிற்கு தகுந்த வண்ணம் தான் பாடல்களை இயற்றுவார்கள். ஆனால் கண்ணதாசனைப் பொறுத்தவரையில், அவன் எழுதிய பாடல் வரிகள், பாத்திரப் படைபின் திறனை மீறி தான் கொடுக்கப ்பட்டிருக்கின்றன. இதை பல பாடல்கள் கொண்டு உணர்த்த முடியும். ஒரு குடிகாரன், சோம்பேறி, தன் சகோதரியின் சொற்ப சம்பளத்தில், தானும், தன் மனைவி , குழந்தையும் வாழும் நிலை குறித்து சிறிதும் சிந்திக்காத சுயநலவாதி பாடும் பாடலா இது...

"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு....

வாழ்வின் பொருள் என்ன..நீ வந்த கதை என்ன..

கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி..
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி..

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்..
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்..

என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி..
உண்மை என்ன..பொய்மை என்ன..
இதில் தேன் என்ன..கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

இப்படி ஒருவன் பாடினால், அவன் தெளிவான நோக்கு உள்ளவனாகத் தானே இருக்க வேண்டும். ஆனால் பாத்திரப் படைப்பு , முற்றிலும் வேறு விதமாக இருந்த, அப்படத்தில், கண்ணதாசன் ஏன் இப்படி பாடலை எழுதினான். பாத்திரப் படைப்பு என்பது ,அவனைப் பொறுத்தவரை வெறும் பெயருக்குத்தான். அவனினிலிருந்து வெளிப்படும் வரிகள், எல்லாமே அவன் சிந்தனை, அவன் கருத்து, அவனால் உணரப்பட்டவை. வெகு சாதாரணமாக அவன் பாத்திரத்திற்காக கவிதை எழுதினான் என்பதை சொல்லி விட முடியாது.

சரி..இப்போது, பிரச்சனைக்குரிய பாடல் வரிகளுக்கு வருவோம். கம்பன் ஏமாந்தான்..

நீங்கள் கூறுவது போல், பாத்திரப் படைப்பிற்காக அப்பாடல் எழுதப்பட்டாலும், அப்பாடலின் வரிகள், கதாப் பாத்திரத்தின் எண்ண வெளிப்பாடாக மட்டும் கொள்வதிற்கில்லை. பல் வேறு கோணங்களில் அவ்வரிகளை நாம் புரிந்து கொள்ளலாம். முதல் கோணம்.. ஆண்களை துச்சமென மதிக்கும் கதாநாயகியை , அவளை நேசிக்கும் கதாநாயகன், சீண்டுவது போல பாடலைப் படைத்தது. இரண்டாவது கோணம், இப்பாடலின் மூலம் கதாநாயகன், ரசிப்பு -(அம்பு விழி என்று...), ஏக்கம் -(தீபத்தின் ஜோதியில்.....) ,அறிவுரை ( ஆத்திரம் என்பது...) போன்ற தன் பாவங்களை (expression)வெளிப்படுத்துவதாக எழுதப் பட்டிருக்கலாம்.

மூன்றாவது கோணம், கவிஞன் குறிப்பேற்றுதலை அவ்வரிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கலாம். என் கேள்வி இங்கு தான் ஆரம்பமாகிறது. " ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாமஅடுப்படிவரை தானே"

பாடல் பிறந்த வருடம் 1978.. அப்போதைய நிலையில் பெண்களின் நிலை , கோபத்தை அடுப்படி பாத்திரங்களை "ணங் " என்று வைத்து காண்பிப்பதிலேயே இருந்து வந்திருக்கிறது. பெண்களின் இயலாமையும், அவர்களை அவர்களே உணரமால் போனதையும் இவ்வரிகள் சித்தரிப்பதாக எடுத்துக் கொண்டாலும், அதற்கு அடுத்த வரிகள் தான் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. " ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே...." எவ்வகையான ஆண் என்றாலும், பெண்ணே நீ அவனுக்கு அடங்கி நட என்று சொல்லவில்லை அவ்வரிகள்

துணைவன் ஆதிக்க நாயகனாக - எல்லா விதத்திலும் தலை சிறந்தவனாக,விளங்குமிடத்து " அடங்குதல் முறை தானே - அவனுள் ஐக்கியமாவது முறையானது தானே என்று பொருள் கொள்ளும் விதமாகவும் இவ்வரிகள் அமைக்கப்பட்டிருக்கலாம். அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில், கதாநாயகன், கதாநாயகியின் அன்பு வேண்டி தான் அப்பாடலை பாடுகிறான். பாடலின் சுவையை கூட்டுவதற்காக, "கம்பன் ஏமாந்தான்.." என்று பாடலை ஆரம்பிப்பது போல் பாடல் அமைக்கப ்பட்டிருக்கிறது.

கம்பன் ஏமாந்து தான் போனான், கன்னியரை ஒரு மலர் என்று கம்பன் வாழ்ந்த காலத்தில் பார்த்ததை, கண்ணதாசன் அவன் காலத்தில், கம்பன் ஏமாந்தான் என்று பாடிச் சென்று விட்டான். இன்றைய காலகட்டத்தில், கண்ணதாசனும் ஏமாந்து தான் போனான் என்று கூறும் அளவுக்கு ஆதிக்க நாயகனுக்கு சமமான , ஆதிக்க நாயகிகள் அவதரித்து விட்டனரே...ஆம்! கண்ணதாசன் ஏமாந்து தான் போனான். ஐக்கியமாகத் தான் ஆள் இல்லை இங்கே..

Tuesday, August 21, 2007

அடுத்த நொடியில்..அற்புதம் !

"யார் மனசுல யாரு...அவருக்கென்ன பேரு..","கலக்கப் போவது யாரு", "லொள்ளு சபா",சமீபத்தில் விஜய் டிவியில் இடம் பெறும் நிகழ்ச்சிகளைன் தலைப்புகள் தான் இவை. சொல்லப் போனால், நிறைய ரசிகர்கள் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கென்றே இருக்கிறார்கள். வருடக் கணக்கில்,இது மாதிரியான நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப ்படுகின்றன.தொய்வு இல்லாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் ,வெற்றி அடைய காரணங்களை ஆராய்ந்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இப்பதிவு.

(வேதாந்தத்தையே படித்துப் போன மனங்கள், இது போன்ற பதிவினைப் பார்த்தாவது மனம் மகிழட்்டுமே :P)

மீடியா என்றழைக்கப்படுகின்ற ஊடகங்களின் தாக்கம், கிட்டத்தட்ட ஒரு 10 வருடங்களாக மிகப் பெரிய அளவில் தான் இருந்து வருகிறது. இருபது வருடங்களுக்கு முன்னால், தமிழகம் முழுதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு பார்க்க ஆர்ம்பித்தார்கள். வெள்ளி ஒளியும் ஒலியும், ஞாயிறு இரு சினிமா- மதியம் பிராந்திய மொழித்திரைப்படம்- மாலை தமிழ் படம் என்று சென்னைத் தொலைக் காட்சி ஒளிபரப்ப, அதை வைத்த கண் வாங்காமல், ஆஆ...என்று பார்த்த மக்களிடத்தில் அப்போதைக்கு பெரிய எதிர்ப்பார்ப்புகள் என்று எதுவும் ஊடகங்களின் மேல் இல்லை. வாரம் ஒரு படமும், அரை மணி நேர திரை இசைப் பாடல் காட்சிகளுமே, மிகுந்த திருப்தியாக இருந்திருக்கிறது அவர்களுக்கு.

ஆனால், நாளடைவில் பல அலைவரிசைகளைக் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக ஆரம்பித்ததும், இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படமோ அல்லது திரை இசைப் பாடல்களோ, மிக சல்லிசாகப் போய்விட்டது. முதலில் எப்போதோ ஒரு படம் என்று ஆரம்பித்த போது, இருந்த ஆர்வம், இப்போது படங்கள் பார்ப்பது எப்பவும் இயன்ற ஒன்று தான் என்ற அளவிலே, ஆர்வம் என்பது சற்று குறைந்து தான் விட்டது. Trend என்று சொல்லப்படும் போக்கு இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. முன்பு அவர்கள் என்ன கொடுத்தார்களோ, அதை பார்க்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருந்தது, இப்போதோ, மக்களுக்கு என்ன ஆர்வமோ அதை தான் ஊடகங்கள் தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகியிருக்கிறது. இது ஒரு வகையில் ஆரோக்கியமே. பார்ப்போர் வட்டம் பெரிதாக இருப்பதால், பல தனியார் தொலைக் காட்ச்சிகளின் போட்டாப் போட்டிக்கிடையில், யாரை எந்த பக்கம் இழுத்தால், விளம்பரதாரகளை அதிகம் வரவழைக்க முடியும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு மக்களிடம் நிலவிய சீரியல் தொடர்களை தவறாமல் பார்க்கும் மோகம் இப்போது குறைந்து விட்டது. அதற்கு காரணம், அப்போது, போட்டிகென்று சம நிலையில், சன் டிவிக்கு நிகராக எந்த டிவியும் இல்லாத நிலை. எனவே, அவர்கள் பெரும் பாலும், ஒளிபரப்பு செய்த் சீரியல் தொடர்களையே மக்கள் விரும்பிப் பார்த்தனர்.

ஆனால் சமீப காலமாக, பல் வேறு வித்ங்களில் சீரியல் தொடரை விட சுவாரஸியம் தரும் நிகழ்ச்சிகளை மற்ற தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டதால், மக்களின் ரசனை அதற்கு தாவி விட்டது. இதுவும் மிக ஆரோக்கியமானதே. மக்களை எப்படியாவது ஒரு அரை மணி நேரம் உட்கார வைத்தால் போதும் என்ற நிலையில் தான் இப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் புதுப் புது உத்திகளை கையாள்கிறார்கள். இதனால், புதிதான எண்ணங்களுக்கும், இளைய சமுதாயத்தினரின் படைப்புத் திறனுக்கும் நல்ல தீனி கிடைத்திருக்கிறது.

விளம்பரதாரர்கள் கூட, படைப்புத்திறனைக் காண்பித்தால் தான், மக்களை விளம்பர இடைவேளைகளில் கூட உட்கார வைக்க முடியும் என்று உணர்ந்து, விளம்பரப் படங்களை எடுத்து வருகின்றனர். ஆகவே,ஊடகங்கள் கையில் மக்கள் என்ற நிலை மாறி, மக்களுக்காக ஊடகம் என்ற ஆரோக்கிய நிலை வந்து விட்டது. எதன் மூலம் , எந்த பிரிவினரை கவரலாம் என்று புதிய புதிய எண்ண ஓட்டங்களுடன் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க பல குழுமங்கள் கூடி, கூட்டு வேலை செய்து, ஒரு நிகழ்ச்சியின் வெற்றியை நிர்ணயிக்கின்றனர்

சமீபத்தில் நான் ரசித்த இரு விளம்பர படங்களை இங்கு தர விழைகிறேன். மிக அற்புதமான படைப்புத் திறனை இவ்விரு படங்களும் எனக்கு உணர்த்தின. சிலாகித்து தான் போனேன். :


இப்பதிவின் மூலம் நான் தெரிவிக்கவிருந்த கருத்து இது தான்...

எப்பவும் ஒரே மாதிரி விருப்பங்களும், சிந்தனைகளும் இருப்பதில்லை. கால ஓட்டத்திற்கு தக்ந்தபடி, புதிய பரிமாணங்களோடு வரும் எணணங்களும், சிந்தனைகளும் நம்மை ஆட்கொள்கின்றன. சிந்தனைகள் புதிதாக இருக்க, செயல்பாடுகளும் புதுமை வாய்ந்ததாகவே இருக்கப்படும். இன்று இருப்பது, நாளை இருப்பதில்லை. நாளை இருப்பது, வரும் காலத்தில் நிலைத்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. அடுத்த நொடி காத்திருக்கும் ஆச்சர்யங்களுக்காக தான் மனித மனம். அடுத்த நொடி என்னவாகும் என்ற நினைவு கொடுக்கும் ஆனந்தம் தான் நம்மை இந்த நொடியில் வாழ் வைத்துக் கொண்டிருக்கிறது.

Sunday, August 19, 2007

சுதந்திரம் ஒரு வேள்வியே !

சுதந்திரம்...இச்சொல் மிகவும் பிரபலமான சொல். ஆனால், இச்சொல்லை நாம் உச்சரிக்கும் போதே நம் நாடு சுதந்திரம் அடைந்து ...என்று ஆரம்பிக்கும் ஏதோ ஒரு செய்தி தான் இந்தியர்களான நம் எல்லோருக்கும் நியாபகத்திற்கு வரும். நம் நாடு ஆங்கிலேயரின்ன் கீழ் அடிமைப்பட்டுக் க்டந்து, பல் வேறு தடைகளைத் தாண்டி, பல் வேறு மனிதர்களின் போராட்டத்தினால் பெறப்பட்டதே இச் சுதந்திரம். ஏன் அவ்வாறு சிரமப்பட்டாது, சுதந்திரம் பெற வேண்டும்? என்ன காரணம்?

சுதந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது? சுதந்திரம் என்பதை எப்படி வரையறுப்பது? சுதந்திரம் என்பது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே, யாரையும் சாராமல், தாமே தம் திறன் மூலம் செயல்படுவது என்று கொள்ளலாமா.அதனால் தான் இந்தியர்களான நாம், நம் நாடு, நம் மொழி, நம் பேச்சு, நம் எழுத்து என்று அனைத்திற்குமே சுதந்திரம் வேண்டும் என்ற காரணத்தினால், ஆங்கிலேயனிடமிருந்து போராடி நம் உரிமையைப் பெற்றோம்.

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது கருத்து, மொழி, எழுத்து, குடிஉரிமை என்று பல் வேறு வடிவமெடுத்து, அதை செயல்பாட்டிலும் கொண்டு வர ஏதுவாக, சட்டமும் , ச்முதாயமும் பல் வேறு கோணங்களில் சிந்தித்திது செயல்படுகின்றன. இவையெல்லாம் நாட்டிற்கும், அதன் மக்களுக்கும்.

தனி மனித சுதந்திரம்?? இதனைப் பற்றி பொதுவான அபிப்ராயம் என்ன எனறு பார்த்தால், நாடும், நாடு சார்ந்த சட்டங்களுமே தனி மனிதனுக்கும் பொறுந்தும் என்ற அளவில் தான் சுதந்திரம் என்பது வரையறுக்கப்படுகிறது. ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது என்ன. இவை மட்டும் தானா. இவையும் தான், ஆனால் இது வெளித்தோற்றத்திற்க்குண்டான சுதந்திர காற்றை சுவாசிக்க பயன்படும் கோட்பாடுகள். மனிதனுக்குள்ளே சுதந்திர தன்மை என்று இருக்கிறதே, அதைப் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா?

ஒரு தனி மனிதனின் உண்மையான சுதந்திரம் என்பது, அவன் இஷ்டப்படுபவைகளை எத்தடையும் இல்லாமால், யாரையும் சாராமல், சுயமாக சிந்தித்து சரியாக செய்வதேயாகும். இவ்வாறு சுதந்திரத்தை நாடும் ஒருவன், தன்னை, தன் சுயத்தை (self)
முன்னேற்றும் வகையில் தன்னைப் பண்படுத்திக் கொள்வதில் தான் அவனின் முழு சுதந்திரமும் அடங்கியிருக்கிறது. பண்படுத்திக் கொளவது என்றால் எப்படி?

தன்னை பாதிக்கும் எவ்வித பொருளிலும், செயலிலிருந்தும் விலகிச் சென்று, தன்னைக் காத்துக் கொள்வதும், எதிலும் அதீத பற்றுக் கொள்ளாமல், தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் இருப்பதும், எவ்வித கலாச்சாரத்திலும் அதீத ஈடுப்பாட்டோடும், அவ்வகையான ஈடுபாட்டினால், திறந்த மனத்தன்மை இழக்காமல் இருப்பதும்,மனதை பாதிக்கும் இறந்த கால நிகழ்வுகளை சுமக்காமல், கவலையை களைந்தெடுத்து வாழ்வதும்,எவ்வித உணர்வு பூர்வமான விஷயத்திலும் தன்னையே மூழ்கடித்துக் கொள்ளாமல், தன்னைச் சுற்றி, தானே வெளி வர முடியாத வண்ணம் சுமுதாய சிந்தனைகளையோ, பழக்க வழக்கங்களையோ, சம்பிரதாயங்களையோ வகுத்துக் கொள்ளாமல், தானே தன்னை எவன் ஒருவன் ஆள்கிறானோ அவனே பூரண சுதந்திரத் தன்மை வாய்ந்தவனாகக் கொள்ளப்படுவான்.

இவற்றையெல்லாம் செய்த்து முடிக்க மன உறுதி அதிகம் தேவைப்படுகிறது. தன்னை "மிகவும் சுதந்திரமானவன்" என்று அறிவித்துக் கொள்ள மிக அதிகமான மன திடம் தேவைப்படுகிறது. மனதிடத்தை வளர்த்தாலே, சுதந்திரக் காற்றை அவன் சுவாசிக்கும் நாள் அவனுக்கு வெகு தூரத்தில் இல்லை என்று கொள்ளலாம்.

தன்னைத் தானே அறிதல் ஒரு சுவாரசியம் என்றால், பூரண சுதந்திரம் அனுபவித்தல் அதை விட சுவாரசியமான அனுபவம். ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் விலை ஏராளம். இத்துணை காரியம் செய்து பண்பட வேண்டி இருக்கிறதே. தாகம் உள்ளவர்க்கு வேள்வி கூட சர்வ சாதாரணமே..

Thursday, August 16, 2007

கடமை ஒரு மடமை ...!

த்தலைப்பு வைக்கும் போது எனக்கு "வீராச்சாமி- இராஜேந்தர்" தான் நினைவுக்கு வந்தார..் ha..ha. "தங்கச்சி ..! இந்த அண்ணணோட கடமையில இருந்து என்னிக்குமே நான் தவறினதில்லமா...மா..மா தட்டிப் பார்தேன் கொட்டாங்கிச்சி..தாளம் வந்தது பாட்ட வச்சி..." :) Ha..Ha..

கடமை ! இந்த சொல்லை எத்துணை தவறாக புரிந்து கொள்ள முடியுமோ, அத்துணை தவறாகவே அதை பற்றி வாழ்ந்தும் விடுகிறோம்.கடமை என்பதின் முழு அர்ததம் நமக்கு தெரிந்து தான், நாம் அதை ஆதரிக்கிறோமா..என்ற சந்தேகம் எனக்கு எப்பவுமே உண்டு.அடிக்கடி நாம் கேள்வியுறும் வாக்கியம் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு. போதாததற்கு என்று பெற்றோரும், அவர்களிடம் வளர்வோரும் " என் கடமையை தான் செய்கிறேன்" என்று வசனங்களை வேறு அள்ளி விடுகிறார்கள்.

கடமை என்பது என்ன? அதன் சாராம்சம் என்ன என்பதை உணராமலேயே அந்த வார்த்தை உபயோக்கிப் படுகிறதா? இல்லை, கடமை மட்டுமே உணர்ந்து, அவ்வார்த்தை சொல்லப்படுகிறதா? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். இதை வெறும் வார்த்ைதயாக மட்டுமே உபயோக்கிக்த் தெரிந்து இருக்கிறதே என்பதே என் வருத்தம்.

சரி..இவ்வளவு பீடிகை எதற்கு? நேராகவே சொல்லி விடுகிறேனே. ஆனால் சொல்லி முடித்த பின் எத்துணை பேரின் உறவு முறையில் குழப்பங்கள் வரும் என்பதை சொல்லி விடமுடியாத. குழப்பங்கள் வரலாம்....இல்லை இதெல்லாமே முன்பே தெரிந்ததது தானே என்ற எண்ணமும் வரலாம். முதல் முறையாக இது பற்றி யோசித்த போது, எனக்கு குழப்பமே நேரிட்டது.அதனால் தான் இந்த எச்சரிக்கை மணி.

முதலில் கடமை என்பது எது சம்பந்தமாக சொல்லப்பட்ட வார்த்தையாக இருக்கக்கூடும் என்று பார்த்தால், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட, அல்லது தானே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு செயலில் இருந்து மாறாமல், வழுவாமல், அச்செயலை செய்து முடித்தல் சாலச் சிறந்தது, என்ற பொருள் தரும் வண்ணமே கடமை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்திருக்கக்கூடும். நாம் செய்யும் வேலையில் ஒரு வித பிடித்தமும், வேலையிலிருந்து நழுவாமல், நம்மை அவ்வேலையோடு பிணைத்து, அதை செவ்வனே முடிக்கும் எண்ணத்தில் தான் கடமை என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.ஆனால், அத்தகைய தொனியில் ஆரம்பித்து, கடமை என்பதை வேலை என்பதற்கு மட்டும் பாராமல், நம்மை சுற்றி இருக்கும் உறவு முறைகளிலும் நுழைத்து விட்டோம்.

பல குடும்பங்களில் நாம் கேட்டிருக்கக்கூடும். பெத்த கடமைன்னு ஒண்ணு இருக்குங்களே, அத நிறவேத்தணுமே என்று தான் தம் பொறுப்பை உணர்ந்து பேசுவதாக நினைத்துக் கொண்டு சிலர் பேசுவதுண்டு. அவ்வாறு பேசுபவர்களை பற்றிய நம் அபிப்ராயம் எப்படி இருக்கும். எவ்வளவு பொறுப்பு வாய்ந்தவராக இவர் இருக்கிறார். தன் கடமையை நன்கு உணர்ந்து செயல்படுகிறாறே என்ற பாராட்டுகள் வேறு அவருக்கு குவியும். போதாததற்கு அவர் தம் மக்களும், வளர்த்த கடன் என்பதற்காகவே நான் அவர் சொல்லும்படி செயல்படுகிறேன் என்று மார்தட்டி பேச விழைகிறார்கள். இவர்கள் இருவரும் செய்யும் தவறு ஒன்றே.

கடமை என்பதை நாம் செய்யும் அலுவல் பணியிலும், நம் திறன் அறிந்து ஒப்படைக்கப்பட்ட பணியிலும் கடைபிடிக்காமல், தத்தம் உறவு முறைகளிலும்,கடமை என்பதை நுழைத்து உறவு முறைகளுக்குள் பாசம் என்பதை கொச்சைப்படுத்தும் போக்கே நடைப் பெற்றிருக்கிறது.

ஒருவனின் குடும்பம் எவ்வாறு உண்டாகிறது.அன்பினாலும், பண்பினாலும் பிணைக்கப்பட்டு, பாசமும் நேசமும் முன்னிலை வகிக்கும் வண்ணமே ,ஒருவன் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு ஒரு குடும்பத்தை உண்டாக்குகிறான் அப்படி உருவாக்கப்பட்ட குடும்பத்தில் பிறக்கும் மழலைகளுக்கும் அதே பாசம், நேசம் என்பதௌ போய் சேரும் வண்ணம் தான் குடும்ப சூழலானது இருக்க வேண்டும். அப்படியிருக்க, எங்கே அங்கு கடமை என்பது நுழைக்கப்படுகிறது. அங்கே கடமை என்பதன் அவசியம் என்ன என்றெல்லாம் யோசித்தால், உண்மையாக ஒரு ஒரு குடும்பமும் அன்பினால் உருவாக்ப்பட்ட்டதல்ல, கடமையினாலே உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.

நம்மால் இதை ஜீரணித்துக் கொள்ள முடிகிறதா? எப்போது அன்பே பிரதானமாக கொள்ளப்பட்டு ஒரு குடும்பம் இல்லையோ, அங்கு தான் கடமை என்ற சொல்லுக்கு வழி பிறக்கும். அன்பு இருக்கும் இடத்தில் கடமை வாசம் செய்வதில்லை. அதே போல் கடமை இருக்கும் இடத்தில் அன்பு மலர்வதிற்கில்லை. அதனால் தான் காதல் திருமணங்கள் இங்கு மறுக்கப்படுகின்றன.

ஒரு நல்ல மகனாக இருந்து, தந்தை தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றும்படி அவர்கள் சொன்ன பெண்ணை திருமணம் முடித்து, அங்கும், ஒரு கடமை தவறாத கணவனாக நடந்து, பெற்றோரின் கடன் பிள்ளை பேறே என்று குழந்தைகளைப் பெற்று , அதே கடமைகளை தம் வாரிசுகளுக்கும் சொல்லித் தந்து தன் வாழ்க்கை கடனை முடித்தவனிடத்தில் எங்கு அன்பு என்பது மலர்ந்திருக்கிறது.அன்பு என்ற பேச்சுக்கே இடம் ஏது?.

அன்பை உணராதவர் தாம் அன்பை எதிர்க்கக் கூடும். காதல் திருமணங்களையோ அல்லது காதலிப்பதையோ எதிர்ப்பவர்கள், அன்பு என்பதை வாழ்வில் பார்த்திராதவர்களாகவே இருக்கக்கூடும். அன்பே பிராதனமாக கொண்டு வாழ்வை அமைத்து கொள்பவரால் மற்றவரின் அன்பு, விருப்பம், பாசம், அமைதி, ஆவேசம், கோவம் ஆகிய அனைத்தையுமே சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும்.

கடமை என்பதை தாம் செய்யும் வேலையோடு சேர்த்து பார்க்க வேண்டுமே தவிர, குடும்ப உறவுகளுக்குள் அதை கொண்டாடுவது, அன்பை உணராமல், கடனை மட்டும் உணர்ந்தவரின் வாழ்வுக்குத் தான் ஒப்பாகிறது.

தாங்கள் எவ்விதம் :)

Saturday, August 11, 2007

மன அழுத்தம் எதனால்.....?

மன அழுத்தத்தின(Stress --> Depression)் எல்லை என்பதை எவ்வாறு கொள்வது.எப்படி அது ஒருவருக்கொருவர் வேற்படுகிறது? உங்கள் அபிப்ராயத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

*********

மன அழுத்தத்தை சந்தித்தபொழுது, நான் வேறு எதுவாகவும் இல்லை.மன அழுத்தமாக மட்டுமே இருந்தேன். ஆம்! முதல் முறையாக மன அழுத்தம் எனக்குள் வந்து போனது.

வந்ததது..போனது..

எவ்வித சிகிச்சையினாலோ, அல்லது எந்த வித தெரபி முறைகளாலோ, மன அழுத்தம் விலகவில்லை. மன அழுத்தம் எவ்வாறு உண்டானதோ, அதே போல் தானாக அது விலகி விட்டது. அது தான் அதன் தன்மையும் கூட.ஆனால், இது ஒருவருக்கொருவர் எவ்வளவு சீக்கிரம் விடை கொடுக்கும் என்பது தான்் நிச்சயமாக வேறுபடுகிறது.சிலருக்கு சில நாட்கள், சிலருக்கு பல மாதங்கள்.மன அழுத்ததிலிருந்து விடை பெற வேண்டும் என்ற எண்ணமே, கால அளவை வேறுபடுத்துகிறது.

எண்ணங்களின் ஓட்டமே, மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.அதே எண்ண ஓட்டமே, மன அழுத்தத்தை சரி செய்து விடுகிறது. மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், தனக்கு அது வந்து விட்டதே என்று, அதை சரி செய்து கொள்ள பல் வேறு மருத்துவ முறைகளை பின்பற்றுதலும், தன்னால் இயலாத நிலை தனக்கு வந்து விட்டதாகவும், அதனை எப்படி சரி செய்து கொள்வேன் என்ற கவலைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் , நாமே நம் மன அழுத்தத்திற்கு காரணம், அதே போல் நாமே நம் மன அழுத்தத்தையும் சரி செய்து கொண்டு விடலாம்.

ஒரு விஷயத்தை இந்த மன அழுத்தம் காரணமாக நன்கு புரிந்து கொண்டேன். சந்தோஷம் என்பது ஒரு தனி அடுக்ககாகவே நம்மில் இருக்கிறது. அதனை மறைக்கும் விதத்தில் நாம் தான் அது தெரியாத வண்ணம், துக்கம் கொடுக்கும், கவலைகளையும், எண்ணங்களையும் அதன் மேல் பூச்சாக வைத்துக் கொண்டிருக்கிறோம். எப்போதும், கவலையும், துக்கமும் நம்மை ஆட்கொள்ள்வதில்லை. எப்பவும் நம்மிடையே இருப்பது, நம்மை திருப்தியுற செய்யும் சந்தோஷ எண்ணங்களே. அதன் மூலமே நம் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இடை இடையே நம் கவலைகளும், ஆழ்ந்த துக்கத்தில் மனதை செலுத்தும் தன்மையுமே, அந்த சந்தோஷத்தை மறைத்து, இயல்புக்கு மாறான அழுத்தத்தை மனதிற்கு தருகிறது. அதன் விளைவே மன அழுத்தம்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மனதை நாம் நினைத்தால் வெளியே கொண்டு வர இயலும். ஆனால், நம்மில் பலரும், தன் மன அழுத்தத்திற்கு காரணம் தாம் தான் என்பதை உணராமல், மன அழுத்தம் நம் எண்ணங்களினால் தான் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால், அந்த மன அழுத்த உணர்வானது சிலருக்கு சில மாதங்கள் கூட அப்படியே இருந்து விடுகிறது.


தெரபிகளில், இதற்கு சிகிச்சை என்று கூறினால், நன்கு தூங்க வைக்கத்தான் மருந்துகள் தரப்படுகிறது. தூக்கம், இயல்பு நிலை மறக்கச் செய்யும். தொடர்ந்து பல நாட்கள், இயல்பு நிலை மறந்து போனால், தானாக மன அழுத்தத்திலிருந்து, பாதிக்கப்பட்டவர்கள் வெளி வந்து விடுவார்கள் என்ற எண்ணத்திலேயே தூக்கம் தரும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந் நிலை எனக்கு வேண்டாம், என்ற எண்ணத்தோடு, மன அழுத்தத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்ற உந்துதலோடு இருந்தால், சுலபமாக மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்து விடலாம். நாம் தான் நம்மை வழி நடத்துவது. நாமே நம் எண்ணங்களை வடிவமைப்பது. நாம் நினைத்தால் மன அழுத்தத்தை நமக்குள் வர வைக்கலாம். நாம் நினைத்தால், அவ்வழுத்தத்திலுருந்து சுலபமாக வெளி வந்து விடலாம். நம் மனதை எவ்வாறு நாம் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோமோ, அவ்வாறே, நாம் நம் மனதிற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை கணக்கிட்டு கொள்ள முடியும்.

மனதை சீரிய முறையில் பழக்கப்படுத்த,உள் நோக்கும் தன்மையே (perception) காரணம். நாம் பிறக்கும் போது, உள் நோக்கும் தன்மை என்பதே இல்லாமல் தான் பிறக்கிறோம். ஆனால், நாளாக நாளாக, நம்மைப் பற்றி நாம் சிந்திக்க ஆரம்பித்தாலே, உள் நோக்கும் தன்மையை நாம் பெற்று விடலாம். நாம் வாழும் உலகிலிருந்து, நம்மை நாம் வேறு படுத்திக் காண்பதே இல்லை. அப்படி வேறு படுத்தி கண்டால் தான், நம்மால் உள் நோக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள முடியும்.

மன அழுத்தம் என்பது ஒரு மன நோய் அல்ல. அது சமுதாயத்தை சீரழிக்கும் நோயும் அல்ல. அது ஒரு வித மன நிலை. அவ்வளவே. அதற்கு எவ்வித சிகிச்சையும் தேவையில்லை. மன நிலையை மட்டும் நாமே சரி செய்து கொள்ளும் கலை தெரிந்தாலே, நம்மால் மன அழுத்த நிலையை மாற்றிக் கொள்ள முடியும். அறிவை(Mind) விருத்தி செய்து கொள்ளப் பழகும் நாம், நம் சுயத்தை (Self) விருத்தி செய்து கொள்ளப் பழகினாலே, இது போன்ற மனம் சம்பந்தப்பட்ட நிலைக்கு தீர்வினை சுலபமாக காண முடியும்.

மன அழுத்தம் கொண்டோர், தம் மன அழுத்தம் எதனால் என்பதை சரியாக புரிந்து கொண்டாலே, அதிலிருந்து எவ்வாறு வெளி வருவது என்பதையும் அவர்களாகவே சொல்லி விட முடியும். இதற்கு ஒரு சிறந்த வழி, நான் என்னவாக இருக்கிறேன்..நான் எப்படி இச்சூழலை எதிர் நோக்குகிறேன்.. நான் எப்படிப் பட்டவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுய சிந்தனை இருந்தாலே, மன அழுத்தம் அணுகாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியே மன அழுத்தம் ஏற்ப்பட்டாலும், அதிலிருந்து நம்மை நாமே உடனடியாக விடுவித்துக் கொள்ளவும் முடியும்.

Disorder (சீரிய தன்மையற்ற) என்று சொல்லப்படும் தன்மை கூட, ஒருவரின் மன நிலையைப் பொறுத்து தான் வீரியம் மிகுந்ததாக இருக்கக் கூடும்.Disorder னால் பாதிக்கப்பட்டவரின் மன நிலை, அச்சீரிய தன்மையற்றதை விட உறுதியாக இருக்குமானால், அந்த disorder அவரை ஒன்றுமே செய்ய இயலாது.

"We don’t see things as they are, we see them as we are." எனவே இருப்பதை இருப்பதாகவே நாம் கொண்டாலே, இந்த மன அழுத்தம் போன்ற நிலைக்கு நமக்கு நாமே பதிலையும், முடிவையும் தேடிக்க் கொள்ள இயலும்.

Friday, August 3, 2007

இறப்பை வரவேற்க்கத் தயாராவோமா? (தொடர்ச்சி)

எப்போது என்ன ஆகும்? என்ற எண்ணத்தில் அல்லாது, எது நடந்தாலும் நடக்கட்டுமே என்ற எண்ணம் தான் நம்மை நம்பிக்கையோடு வாழ வைத்துக் கொண்டிருப்பது.ஆனால் அந்த நம்பிக்கையை தான் நாம் உறுதியோடு பிடித்துக் கொண்டு வாழ்கிறோம் என்பதை, நம்மால் விழிப்புணர்வோடு கவனிக்கத் தெரியவில்லை.

மாடிப்படிகளில்,மேலிருந்து கீழே இறங்கும் போது, இறங்கும் விழிப்புண்ர்வு இல்லாமல், அதி வேகமாக படிகளில், சட் என்று இறங்கும் போது, நாம் சுலபமாக படியை கடந்து விட முடிகிறது. ஆனால், இவ்வளவு படிகளை, ஜாக்கிரதையாக கடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பார்த்து பார்த்து காலடியை எடுத்து வைத்து கட்ந்தோமேயானால் தடுமாற்றம் வரத்தான் செய்யும். அதே போல தான் வாழ்வும். மிக அதிக விழிப்புணர்வு, நம் வாழ்வை தடுமாற்றத்தான் செய்கிறது.

உயிர் தான் பிரதானம். உடல் தான் பிரதானம். அதனால் தான் அதற்கு பங்கம் வருகிறது என்றால், யாராலும் சகித்துக் கொள்ளமுடிவதில்லை. சகித்துக் கொள்ள அவசியமும் இல்லை.என்னடா..இது. இறப்பை வரவேற்கலாமா..என்று கேள்வி கேட்டவ்ர், சகித்துக் கொள்ள அவசியமும் இல்லை என்று சொல்கிறார் என்று கேட்கிறீர்களா...மனதில் நிழலோடும் எந்த ஒரு உணர்வையும், சரி, தவறு என்று யாராலும் பாகுபடுத்தி பார்த்து விட முடியாது. பயமாக இருக்கிறது என்றால், பயம் ஏன் என்ற கேள்வி அங்கு அர்த்தமில்லாதது. ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால் "it happens" அதற்கு மேல் பயத்தை பற்றி விவாதிக்கவோ, அல்லது அது கூடாது என்று சொல்வதிலோ அர்த்தமேயில்லை.

ஆனாலும், இறப்பு என்பது நாம் வாழும் போதே நம்மை ஆட்டி வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும் பட்சத்தில், விதியை மதியால் வெல்லாலாம் என்ற நோக்கில் எழுப்பப்பட்ட கேள்வி தான் இறப்பை வரவேற்கலாமா? என்ற கேள்வி.பிறப்பை தடுக்க பல வழிகளை நாம் கண்டு பிடித்து விட்டோம்.ஆனால், இறப்பு? மனிதனுக்கு ஒரு பெரிய ச்வாலைத் தான் இயற்கை விடுத்துள்ளது. மழை வரும் போது, அதிலிருந்து நனையாமலிருக்க குடையை கண்டு பிடிக்கத்தான் முடிந்ததே தவிர, மழை வருதலை மனிதனால் தடுக்க முடிந்ததா? அதே போலத்தான், இறப்பை சவாலாக வைத்துள்ள இயற்கை முன், அவ்விறப்பையும், எதிர் கொள்ள தயாராகி விட்டேன் என்ற சவாலைத் தான் மனிதனால் வைக்க முடிந்திருக்கிறது. எவ்வாறு இதனை எதிர் நோக்குவது என்பதை ஒரு சிறு உண்மைச் சம்பவம் மூலமாக சொல்ல விருப்பப் ப்டுகிறேன்.

அம்மனிதருக்கு 46 வயது. இந்தியாவின், ஒரு புகழ் பெற்ற கம்பெனியின், மிக உயர்ந்த பதவியில் , சிற்ப்பாக அவர் பணியாற்றி வந்தார். தனது கடின உழைப்பால், சிறிய வயதிலேயே, முன்னுக்கு வந்தவர் அவர். பார்க்காத நபர்களில்லை, போகாத நாடுகளில்லை. மிகவும் பிரமிக்கத் தகுந்த வண்ணம் தான் அவர் வளர்ச்சி இருந்து வந்தது.தம் மனைவி, இரண்டு குழந்தைகளோடு ராஜபோகத்தோடு தான் வாழ்ந்து வந்தார். சமீத்தில், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார், ஒரு பிரபல மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டு, சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும், இயற்கைக்கு முன், மனித முயற்சி எம்மாத்திரம், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில், ஒரு நாள் மருத்துவமனையில் தன்னை பார்க்க வந்த உறவினரிடம், அவர் கூறியது..

" வாழ்கையில எதை எதையோ சாதிக்கணும்னு நினைச்சேன்..சாதிச்சேன்.

நிறைய பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சேன் சம்பாதிச்சேன்...

ஆனால் அப்பணத்தைக் கொண்டு அப்பபோ வாழணும்னு எனக்குத் தெரியலை..அப்புறமா பார்த்துக்கலாமனு்..என்னோட சந்தோஷத்தை தள்ளிப் போட்டுடேன்...

இவ்வளவு, பணமும், புகழும் சம்பாதிச்சு பலன் என்ன, அதை எல்லாம் மனைவி, மக்களோடு சேர்ந்து அனுபவிக்க தவறிட்டேன்.இன்னொரு தடவை வாழ எனக்கு வாய்பிருக்காதான்னு தான் மனசு ஏங்குது.

நான் செஞ்ச தப்பை நீயும் பண்ணிடாதேப்பா....பணம் தான் முக்கியம்னு இருக்கிற வாழ்க்கையை கோட்டை விட்டவன்பா நான்.." - என்று அவர் கண்ணீர் விட்டு கதறிய காட்சி .......

இப்போது நான் கூறிய நபர் உயிரோடு இல்லை.ஆனால், வாழவேண்டும் என்ற ஆசையிலேயே தான் அவர் உயிர் பிரிந்தது.நம்மை வழி நடத்துவது நம் நம்பிக்கை மட்டுமல்ல, நம் எண்ணங்கள், மிக முக்கியமாக சொல்ல வேண்டுமானால், நம்மை மகிழ்விக்கும் எண்ணங்களே நம்மை வாழ்விக்கினறன. வாழும் ஆசையை அவைகளே தான், தோற்றுவிக்கின்றன, ஊக்குவிக்கின்றன. அவ்வெண்ணங்களைக் குலைக்காமல், அவைகளை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. எப்போது, நம்மால் இவற்றை நிறைவேற்ற இயலும்?

இறப்பு நமக்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்தும், வாழும் கலை தெரியாத பட்சத்தில், நிறைவேறாத ஆசைகளினாலும்,மகிழ்சியை எவ்வாறு தேடிக் கொள்வது என்று புரியாத காரணத்தினாலும் தான் , வாழ்தலில் திருப்தி காணாமல், மனித மனம், இன்னும் சிறிது காலமிருந்தால்,நன்றாக வாழ்வேனே.... என்று கடைசி தருவாயில் துடிக்க ஆரம்பிக்கிறது.அதனால் தான் இறப்பு நமக்கு வேண்டாத நிகழ்வாக தெரிகிறது. தவிர்க்க முடியாது என்றும் தெரிகிறது. ஆனால், மனம் அதற்கு தயாராவதற்கு மறுக்கிறது.

எப்போது, மனத்தை நாம் திருப்தியுற செய்கிறோமோ, அப்போதே, நம் இறப்பை நாம் வரவேறக்்க தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று பொருள்.திருப்தி அடைய வைக்க எனக்குத் தெரிந்த மூன்று தாரக மந்திரத்தை சொல்ல விழைகிறேன்.

1. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழ்ந்தேன்

2. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழ்கிறேன்.

3. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழுவேன்.


என்று ஒரு ஒரு நிமிடத்திலும் நம் மனமானது சந்தோஷப்படும் வகையில் வாழ்கையை நாம் வாழ ஆரம்பித்தாலே, பூரண திருப்தி வெகு சுலபமாக நமக்கு கிடைத்து விடும். ஆனால் அதுஅவ்வளவு சுலபமல்ல. அதற்கு வாழும் கலையை பிரயத்தனமாக கற்க வேண்டியதாகிறது. ஆனால், வாழ்கையின்
கடைசி நிமிடமாக , நாம் வாழும் ஒரு ஒரு நிமிடத்தையும் கொண்டாலே, நமக்கு அக்கலையை கற்கும் பிரயத்தனம் கூட சுலபமாகி விடும்.

நாம் விருப்பப் படும் , நம்மால் இயன்றதாக இருக்கும், நமக்கு சந்தோஷம் தரும், எதையும் உடனுக்குடனே செய்து ,முழு திருப்தி அடையும் கலை தெரிந்தால்..

"காலா..வாடா...உன்னை சிறு புல்லென மி(ம)திக்கிறேன்.." - என்று சீற்றம் கொண்டு பாடினானே பாரதி..அவன் பாடலுக்குண்டான முழு அர்த்தமும் விளங்கும்.