யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Tuesday, June 26, 2007

மூன்றாவது கண் திறந்திடுமா

"லிவிங் டுகெதர்" (living together) ஒழுக்கமான நெறிமுறையா ? - கீர்த்திவாசன்

கீர்த்திவாசனின் இந்த கேள்வி எனக்கு,"living together "அதாவது"சேர்ந்து வாழுதல்" பற்றி விரிவாக எழுத உதவி இருக்கிறது.முதற்க்கண் அதற்க்காக என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

நெறி முறைகள் என்று நாம் வகுத்தவை எவை? ஏன் நெறிமுறைகள் வகுக்கப்பட்டது? நெறிமுறைகள் இல்லாத வாழ்வு வாழ்வாகாதா? நெறிமுறைகளுக்காக நாமா? அல்லது நமக்காக நெறிமுறைகளா? இவ்வாறெல்லாம் கேள்விகள் ஒவ்வொரு மனதிலும் எழலாம். அதற்கு, அவரவர் எண்ணுதலுக்கேற்ப்பவும், நம்பிக்கைகளுக்கேற்ப்பவும் உண்டான பதில்களை அவரவரே சிந்தித்து,முடிவு செய்து,அதனை செயல ்படுத்திக்கொண்டிருக்கலாம். இது தான், நாம் எல்லோரும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருப்பது.

நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நெறிமுறைகளை நாம் நம் முழு ஈடுபாட்டோடு தான் செயல்படுத்திக் கொண்டிருகிறோமா? அதாவது, சட்டம், ஒழுங்கு, வரைமுறைகள், நெறிமுறைகள், பண்பாடு, கலாச்சாரம் இவை எல்லாவற்றிலும், நமக்கு பூரண உடன்பாடு இருக்கிறதா என்றால், பரிபூரணமான உடன்பாடு என்பது இல்லாமல் இருப்பது தான் சாத்தியம். ஆனாலும், அதை நாம் ஆதரிக்கிறோம்.ஏன்?

எல்லா நேரங்களிலும், எல்லா மனிதர்களும், சீராக இயங்குவதில்லை. ஒரு சிலர் மட்டுமே, மனம், அதன் சாட்சி என்று இயங்குகின்றனர்.மற்றவர், எந்த வழி சுலபமான வழியோ அதை பின்பற்றி, வாழ்வை சுலபப்படுத்திக் கொள்கிறார்கள்:.இவ்வாறு இயங்குபவர்கள் தன் நலம் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள், பிறர் நலத்தை பாதிக்கத் தான் செய்கிறார்கள். இத்தகைய இன்னல்களிலிலிருந்து,பிறரை காக்கவே, இந்த சட்டம், ஒழுங்கு முறைகள், நெறிமுறைகள் உண்டாக்கப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்து தான் பண்பாடு, கலாச்சாரங்கள் பின்னப்பட்டன. ஆகவே, நாம் நாமாக இயங்க, சமுதாயம் இடம் கொடுப்பதே இல்லை. அது சாத்தியமும் இல்லாமல் போயிற்று.

நாம் எல்லோருமே அஞ்சி வாழும் வாழ்வையே, மிகவும் எளிதாக்கிக் கொண்டுள்ளோம். சாலை விதிமுறைகளில், வெள்ளைக் கோட்டை மீறினால், தண்டிப்புக் கட்டணம் கட்ட வேண்டிவரும் என்பதால் தான், அதை மீறாமல் இருக்கிறோமே ஒழிய, நமக்குள்ளேயே, அக்கோடு எதனால் போடப்பட்டது என்ற விழிப்புண்ர்வும், அதை மதித்து நடக்க வேண்டும் என்ற உள்ளுணர்வும் இருக்கிறதா? பழமொழி ஒன்று உண்டு.. சமய சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோருமே திருடர்கள் தான்.

உண்மையாகவே நாம் நாகரீகம் தெரிந்த மனிதர்கள் தாமோ? நாகரீகத்தை நுனி நாக்கு ஆங்கிலத்திலும், அணியும் உடைகளிலும், பெயருக்கு பின்னால் நீண்டிருக்கும் பட்டப் படிப்பிலும் காண்கிறோமே ஒழிய, மனத்தை செம்மை செய்யும் வழிமுறைகளை கற்று நாம் நாகரீகம் என்ற நிலையை அடைந்திருக்கிறோமா என்றால், அதன் பதில் உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எப்போது எவ்வித ச்ட்டங்களையும், நெறிமுறைகளையும் மனதிற் கொண்டு செயல் படாமல், நாமாகவே, நம் செம்மை மனதுடன், ஒரு காரியத்தை செய்கிறோமோ, அப்போது தான் நாம் நாகரீகமானவர்கள் என்ற சொல்லையே பயன்படுத்த முடியும்.

சரி தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்.

கற்பு என்பது கூட ஒரு சிறந்த நெறிமுறையாக சொல்லப்பட்டது தான். ஆனால் அந்தோ! அது பெண்மைக்கு மட்டுமே உரித்தாக்கப் பட்டுவிட்டது.கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டதா,அல்லது உடல் சம்பந்தப்பட்டதா?அது எது சம்பந்தமாக வழிமொழியப்பட்டதோ தெரியவில்லை.ஆனால், நம் தமிழ் படங்கள் மூலம், கற்பு என்பது, உடல் சம்பந்தபட்டது தான் என்ற் எதிர்மறை தீர்மானம் வரும் அளவுக்கு மீடியாவின் தாக்கம் இருந்திருக்கிறது. பாவம், அப்போது அதையெல்லாம் சாட மருத்துவர் இராம தாஸூக்கு நேரமில்லை போலும்.

தாலிக் கட்டித் திருமணம்- இவ்வாறு திருமணம் செய்யும் முறை நம் தமிழ் நெறிமுறைகளில் ஒளவை காலத்தில் இல்லை. அதன் பின், அந்நெறிமுறைகளை மாற்றியது யார். தாலி என்ற கட்டுப்பாடு வர வேண்டிய அவசியம் என்ன? அப்போது எங்கோ , யாராலோ தாலிக் கட்டும் சம்பிரதாயம் பிறக்கும் அளவுக்கு, இயல்புத் தன்மை மாறப்பட்டிருக்கிறது.மீறப்பட்டிருக்கிறது. ஒரு பானை பாலில், துளி விஷம் கலந்தது போல. தாலி என்ற ஒரு கயிற்றிற்க்கு கொடுக்கப்படும் மதிப்பு, அதை கட்டும் மணமகனுக்கும் இல்லை, கட்டிக் கொள்ளும் மணமகளிடமும் இல்லை. இருவருமே, மனதால் இணைக்கப் படவில்லை. சம்பிரதாயங்களால் இணைக்கப்படுகிறார்கள். பின் வரும் காலக் கட்டங்களில் தாலி என்பது வேலியாகவே ஆக்கப்பட்டுவிட்டது. அது ஒரு பாதுகாப்பு அரண், கணவனிடத்திலிருந்து மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வாழாமல் காக்கும் அரண். ஏனெனில், நம்பிக்கையால் இணையவில்லையே அந்த இரு மனங்களும். கணவனுக்கு, மனைவி வேறு யாரிடமும் போய்விடாமல் காக்கும் கயிறு. மனைவிக்கோ தனது கணவன், வேறு துணை நாடும் போது, தன் கணவனே அவன் என்று சாட்சி சொல்லும் ஒரு கயிறு.

அடடா எத்தகைய உறவுமுறையை நம் நெறிமுறைகள் வகுத்துள்ளது. ஒருவரின் மேல் மற்ரொருவருக்கு நம்பிக்கை இல்லை..ஆனாலும் காலா காலத்திற்க்கு ஒருவரும் இணைபிரியாமல், தாலிக் கயிற்றின் சாட்சியோடு வாழ வேண்டும். என்னே நம் பண்பாடு.

தாலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தபோது, எத்தகையா நிலை நிலவியதோ, அதே நிலை தான் இப்போது இந்த (living together)சேர்ந்து வாழ்தலிலும்.

இருவர் தீர்மானிக்கின்றனர் அவரவர் வாழ்வை. எந்த நெறிமுறைகளும் அங்கு பார்க்கப்படுவதிலலை. இரு மனங்களின் சங்கமம், அதனால் ஏற்ப்பட்ட முடிவு. பாதுகாப்பு தேடப்ப்படுவதில்லை, மாறாக, அங்கு பாதுகாப்பு உணரப்படுகிறது. அங்கீகாரம் தேடப்ப்டுவதில்லை அங்கே அன்பு மட்டுமே உணரப்படுகிறது. இரு மனச்சங்கமத்தில், பாதுகாப்பு தேடப்படுவதென்பது எத்துணை கொடூரமான ஒன்று. எப்போது சுதந்திரம் உணரப்படுகிறதோ, அங்கு சங்கிலிக்கு தேவை என்ன. இத்தகைய வாழ்வில் எங்கு நெறிமுறைக்கு இடம்.

ஜீரணித்துக் கொள்ள முடியாது தான், எதார்த்தத்தை புரிந்து கொண்டாலே, பல கேள்விகளுக்கு நம்முள் விடை கொட்டிக்கிடக்கும். ஆனால் எதார்த்தம் தென்படாதவாறு நாம் இத்துணை காலம் கண் கட்டி இருந்திருக்கிறோமே. சிறிது கால்ம் பிடிக்கும் தான், அதிலிருந்து தெளிய. காலம் கனியட்டும், மூன்றாவது கண் திறக்கட்டும்.

Monday, June 18, 2007

விவாகரத்தை ரத்து செய்தால் என்ன.....!

விவாகரத்து - என்ற சொல் இந்தியாவில், இப்போதெல்லாம் அதிகம் புழங்கி வரும் ஒரு சொல்லாக ஆகிவிட்டது.மேற்கத்திய நாடுகளுக்கு நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று சவால் விடும் அளவுக்கு, இந்தியாவில் விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டே தான் இருக்கிறது. நம் கலாச்சாரம், நம் பண்பாடு என்றெல்லாம், மார் தட்டிப் பேசிக் கொண்டே, உண்மையில் அவற்றின் அர்த்தம் என்ன என்பதனை மறந்து, நமக்கு செளகரியமான சில விஷயங்களில், அக்கலாச்சாரத்தை நாம் மறந்து விடுகிறோம் என்பதை நாம் மறுத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகளில் திருமண வாழ்கை முறையானது,இப்பவும் தம் கலாச்சாரப்படி தான் நடந்து கொண்டு தான் இருக்கிறது.அவர்களிடம் எந்த மாற்றமும், இல்லற வாழ்வைப் பொறுத்தமட்டில், அவர்கள் முன்பு எப்படி இருந்தார்களோ, அதனையே இப்போதும் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களிடத்தில் குழப்பங்கள் இல்லை. சீரான தெளிவு அவர்களிடத்தில் இருக்கிறது. வெகு இயல்பாக, அவர்களால், திருமணமும் செய்து கொள்ள முடியும்,குழந்தைகளை பெறவும் முடியும், அதை விட இயல்பாக விவாக ரத்து செய்யவும் முடியும், பின் சர்வ சாதரணமாக அடுத்த துணையை, தேடிக் கொள்ளவும் முடியும், பின் அந்த பந்தத்தையும் முறித்துக் கொள்ளவும் முடியும். பின், your children and my children are playing with our children என்று உறவும் பாராட்ட முடியும். நாம் அந்த மன நிலைக்கு தயாரகி விட்டோமா என்றால், அதற்கு பதில் ,இல்லை என்பது தான்.

பத்து வருடங்களுக்கு முன், விவாகரத்து செய்வோரின் விகிதங்கள் ஆரம்பமாகி இருக்க கூடும். எதையுமே நாம் பிறவற்றைப் பார்த்து தானே கற்றுக் கொள்கிறோம். ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால், ஒருவரிடமிருந்து விவாகரத்து என்ற அப்போதிருந்த நிலை மாறி, சின்ன மனஸ்தாபத்தினால் கூட விவாகரத்து வாங்கிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் இப்போது மேலோங்கி விட்டது. அதன் காரண்ங்கள் என்ன என்று சிந்தித்தால், பலவற்றை சுலபமாக நாம் பட்டியலிட்டு காண்பிக்கலாம்.


பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கும் விவாகங்களில்,விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை, காதலித்து மணம் புரிந்து, விவாகரத்து கோருபவர்களை விட குறைவாகவே உள்ளது. சொல்லப் போனால், காதலித்து மணம் புரிந்தால், விவாகரத்து என்பதே இல்லாமல் இருக்க வேண்டும்.ஆனால், காதல் மணம் புரிந்தும், வாழ்க்கை கசந்து, விவாகரத்து செய்தாலே போதும் என்ற நிலைக்கு ஆணும், பெண்ணும் தள்ளப் பட்டுவிடுகிறார்கள். இப்போதுள்ள காலக்கட்டத்தில் தான் , இவை அதிகமாக நிகழ்கிறது.

அறிவு வளர வளர, அன்பின் தன்மை குறையும்..அது தான் இயல்பு.அறிவு நான் இங்கு குறிப்பிடுவது, knowledge (accumulation of information) இவ்விதமான அறிவுப் பசியோடு தான் உலகம் போய் கொண்டிருக்கிறது. அறிவு சேர சேர துணிவும், தன்னம்பிக்கையும் மேலோங்குகிறது. இவ்விரண்டும் மேலோங்கினால், தனித்துவம் மேலோங்குகிறது. தனித்துவம் மேலோங்கினால், மற்றவரிடம் இயைந்து போவது என்பது முடியாத காரியம் ஆகிறது. நான், என் வாழ்க்கை, என் நலம் இவற்றிற்கு முன்னுரிமை தந்து, பிறர் நலம், பிறர் வாழ்க்கை என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஆண் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறி, இப்போது பெண்களும், சரி நிகர் சமானம் என்ற நிலையில், தனித்துவம் என்பது அவர்களையும் விட்டு வைக்கவில்லை.

முன்பு போல் நிலை இல்லை இப்போது. நான் சொல்ல்வது, ஒரு பத்து , பதினைந்து வருடங்களுக்கு முன்பு. அப்போதும், ஆண், பெண் இருபாலரும், வேலைக்குச் செல்பவர்கள் தான். ஆனால், பெண்கள் அப்போது எல்லாத் துறையிலும் கால் பதிக்கவில்லை.. மிகவும் எளிதான வேலையும் , தகுந்த வேலை நேரத்தையுமே அப்போதிருந்த பெண்கள் விரும்பினார்கள், ஏனென்றால், வீட்டிலும் தம் வேலையை தாமே செய்து ஆக வேண்டிய நிலை. ஆண்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுத்து கொண்டாக வேண்டும் என்று பிரகடனப்படுத்தாத காலம் அது.

ஆனால் தற்போதுள்ள காலக் கட்டங்கள் வேறு. பெண்கள் இல்லாத துறையே இல்லை. ஆணுக்கு சமமாக வேலை பார்ப்பதும், அவர்களுக்கு இணையாக வேலை பளுவைத் தாங்கவும், ஆண் போலவே, நேரம் , காலம் பாராமல், வேலை செய்வதும், பெண்களிடத்தில், தன்னம்பிக்கையும், துணிவையும், தனித்துவத்தையும் தந்திருக்கிறது. நான் முன்னே கூறியபடி, தனித்துவம் அதிகமாகும் போது, மற்றவரை சார்ந்திருக்கும் செயல்பாடு அறவே இல்லாமல் போகிறது. அதனால், நீ என்ன...நானும் உன் போல் தான் என்ற எண்ணமும், உனக்கு அடிமை இல்லை நான், உன் வாழ்க்கை உன்னோடு, என் வாழ்க்கை என்னோடு என்ற எண்ணமும் தான் மேலோங்கி வ்ருவதால், வாழ்க்கை துணையோடு இயைந்து போதல் என்பது இயலாத காரியம் ஆகிவிடுகிறது .

நான் இப்படிச் சொல்வதால், பெண்ணை குற்றம் சொல்கிறேன் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளாதீர்கள். முன்பு போல், ஆணுக்கு கீழே அடங்கி இருந்த காலத்தில், ஒரு கை ஓசை போல, பிரச்சனை என்று வரும் போது, ஆணின் கை மேலோங்கியும், பெண் என்பவள் அதற்கு, அடங்கிப் போவதும் நடக்க ஏதுவாயிற்று. அதனால், குடும்பத்தில், சண்டை, சச்சரவு என்று வந்தாலும், ஒருவர் மட்டுமே அதை பெரிது படுத்திக் கொண்டிருப்பார்.மற்றொருவர், தழைந்து போயிருப்பார்.அதனால், மனஸ்தாபம் இருந்தாலும் , எப்படியும், ஆணைச் சார்ந்து தான் பெண் இருக்க வேண்டும் , ஆதலால், விவாகரத்து என்பது மட்டுப்பட்டிருந்தது.இப்போது, இருவருமே கோல் எடுக்கிறார்கள். ஆட குரங்காக யாருமே இல்லை. ஆதால, வாழ்க்கையை சகிப்புத்தன்மையோடு ஓட்டத் தெரியவில்லை.

இவற்றிற்கு முக்கிய காரணம், அறிவோடு(so called knowledge) சேர்த்து, வாழும் கலை அறிவை நாம் கற்றுக் கொள்ள மறந்தது தான்.வாழ்க்கையை ஓட்ட பணம் அவசியம் தேவை. பணம் சம்பாதிக்க கல்வி அறிவு அவசியம் தேவை. ஆனால் சம்பாதித்ததை கொண்டு, தகுந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ, வாழ்க்கை கலை அறிவு, மிக மிக அவசியம். எப்போது, வாழும் கலையை நாம் கற்றுக் கொள்கிறோமோ, அப்போது தான், நம்மால்,கல்விக் கற்று தேர்ந்த அறிவையும், வாழ்ககை கலை கற்றுத் த்ந்த அன்பையும், சம்மாக கொண்டு சென்று வாழ்வை வெல்லத் தெரியும்.

Wednesday, June 13, 2007

உன்னிடம் ஒரு தனி மனிதன்..

"பொய் சொல்லக் கூடாது பாப்பா ! " - பாரதியாரின் வரிகளை சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தான் என் இளைய மகன். அதே நேரத்தில்,

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் " - இது என் மூத்த மகனின் வீட்டுப் பாடம்.

இருவருக்கும் இடையே நான்....விளக்கம் சொல்லித்தர வேண்டும். போச்சு..! என் பாடு திண்டாட்டம் தான் என்று நினைத்துக் கொண்டே, இந்த இரண்டு கருத்தையும் சரிவிகிதமாக சொல்லித் தந்தாக வேண்டுமே..! ஒரு சில நிமிடங்கள் சிந்தனையிலேயே கழிந்தது...


வாழ்கையில் எல்லாவற்றையும் சரிவிகித்த்தில பேலன்ஸ் செய்து தான் ஆக வேண்டியிருக்கிறது. அந்த நெளிவு சுளிவும் தெரிந்திருக்க வேண்டும்.அதே சமயம், வேல்யூஸ் என்று நாம் பின்பற்றும் முறைகளையும் குலைக்காமல், லாவகமாக வாழ்வை நாம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

"பொய் சொல்லக் கூடாது" என்று கற்றுத்தரும் நாமே,சிலசமய்ங்களில்,"பொய் கூட சொல்லலாம் அது ஒரு சில நல்ல விஷயங்களைத் தருமேயானால்", என்று சொல்லித் தரும் போது, நாம் சொல்லிக் கொடுக்கும் விஷயம் எவ்வாறு இளைய தலைமுறையினரை சென்றடைகிறது என்பதை கவனித்தே ஆகவேண்டி இருக்கிறது. அம்மா...நீ சொல்வது போல் நாயகன் படத்தில் டயலாக் வருகிறது.மீடியாவின் வீச்சு அதிசயிக்கத் தான் வைக்கிறது.

பாடத்தில் வள்ளுவரின் வரிகளாக மட்டுமே பார்க்கப் படும் ஒரு செய்தி, மணிரத்னம் படத்தின் மூலம், ஒருவரின் மனதை சென்றடைகிறது என்றால், எத்தகைய பொறுப்பு நம்மிடத்தில இருக்கிறது. சிறிது பயம் கூட ஏற்படுகிறது. நாம் சரியான வழியை, சீராகத் தான் காட்டுகிறோமா....நமக்கே தெளிவு என்பது தேவைப் படும் போது, நாம் வழிகாட்டும் பாதை சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்படுமா என்றெல்லாம் சிந்தித்து தான் செயல் புரிய வேண்டியிருக்கிறது.

இடம், பொருள், ஏவல் என்று சொல்கிறோமே, அது போல,நாம் சீராக பின்பற்ற ஒரு சில நெறி முறைகளை சொல்லித் தருவதோடு, வாழ்வின் ஒரு சில நெளிவு சுளிவுகளையும் நாம் கற்றுத் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமக்கெல்லாம் யார் சொல்லித் தந்தா...நாமெல்லாம் நல்லா இல்லாமயா போய்டோம்..எல்லாம், அவங்கவங்களா கத்துப்பாங்க....காலம் கற்றுத் தரும்.இப்படி பலரும், இதை ஒதுக்கி தள்ளலாம்.

நம் காலம் வேறு, இவ்வளவு exposure நம் காலத்தில் இல்லையே...! அறிவையும், புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும், இக்காலத்து மீடியாக்கள், சமயத்தில் அசாத்திய துணிவையும், அசட்டு தைரியத்தையும் கூட வளர்க்கத் தான் செய்கிறது. காலம் மாறினாலும், எத்துணை தான் வளர்ச்சி என்பதை நாம் எட்டினாலும், குழந்தை பருவம், குழந்தை பருவம் தானே.

பெற்றோர்க்கு தம் குழந்தைகளை வளர்க்கும், பொறுப்பும் , அக்கறையும் இப்போதெல்லாம் அதிகமாகவே உள்ளது.ஆனால், எத்தகையவற்றை நாம் கற்றுத் தருகிறோம் என்பதை பொறுத்து, குழந்தைகளைன் வளர்ச்சியானது ஆரோக்கியமானதாக உள்ள்தா..இல்லையா என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

ஒரு சிலவற்றை இப்போது பார்போம்..குழந்தைகள்..

யாரையும் சாராமல் இருக்கக் கற்றுத் தருவது

கமிட்மெண்ட்டையும், பொறுப்பையும் கற்றுத் தருவது

உலகை எதிர் நோக்கும் துணிவை வளர்க்க கற்றுத் தருவது

சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப்ப, சிந்தித்து முடிவெடுக்கும் திறனை கற்றுத் தருவது

என் வாழ்கை, அதை நேசிக்கும் விதத்தை கற்றுத் தருவது


இவை எல்லாவற்றையும் விட, வாழ்கையை எவ்வாறு பேலன்ஸ் செய்து, முன்னேறுவது என்பதை பெற்றோர் அவசியம் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். இவ்வாறு கற்றுத் தரும் முறைகள், நம் பாடத் திட்டத்தில் இருந்தால் சால சிறந்தது தான்..ஆனால், அத்தகைய மறுமலர்ச்சி நடக்க பல ஆண்டுகள் பிடிக்கும்.

நல்ல உண்வும், உடுக்க உடையும், நல்ல கல்வி நிலையத்தில் பண்பட்ட கல்வியும், கேட்ட்பவை அனைத்தும் வாங்கி குழந்தைகளை மகிழ்விக்கும் எண்ணமும், பாசமும், நேசமும், அக்கறையும் மட்டுமே தந்து விட்டால், தன் குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகள முடிந்து விட்டதாகத் தான் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்:. தாம் இல்லாவிட்டாலும், வாழ்கையை தன் குழந்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்று எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறார்கள். ஒரு தனி மனிதனாக , அக்குழந்தையை நோக்காதது தான் அதற்குக் காரணம். என்னுடைய சொத்து என்று நினைக்காமல்,, ஒரு தனி மனிதனை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன் என்று, ஒரு ஒரு பெற்றோரும் நினைதார்க்ளேயானால், மேற்கூறிய அனைத்திற்க்கும் எத்துணை முக்கியத்துவம் தர வேண்டுமென்பது விளங்கும்.

பெற்றோரால் பாராட்டப்படும் அன்பு என்பது, தம் மக்களை , அவர்களாகவே வளரச் செய்து, அவ்வளர்ச்சியை பார்து பூரித்துப் போவதில் அடங்கியிருக்கிறது. நம் பார்வை அவர்களது, ஒரு ஒரு அடியையும் உற்று நோக்குவாதாக இருந்தாலும், ஒரு பூ மலருதல், இயல்பாக நடந்தால் எத்தகைய மணம் வீசுமோ, அதே போல், இயல்பாக குழந்தைகளின் வளர்ச்சி இருக்கும் பட்சத்தில், அவர்களது, முழு திறன் வெளிப்பட்டு, உள்ளிருக்கும் அதீத ஆற்றலை அது வெளிக் கொணரும். அப்போது, நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு, அவர்களுக்குள் திறமை இருப்பதை நாம் கண்டறியலாம்.

Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.
They come through you but not from you,
And though they are with you, yet they belong not to you.
You may give them your love but not your thoughts.
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams.
You may strive to be like them, but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.
You are the bows from which your children as living arrows are sent forth.


- Kahlil Gibran

Monday, June 11, 2007

கலவியலும் கல் !

களவும் கற்று மற என்று கூறப்படுவதுண்டு. அதாவது, தெரியாத விஷயங்கள் எதையும் தள்ளி வைத்துப் பாராதே. அனைத்தையும் தெரிந்து கொண்டால் தான், அதன் மூலம் நடக்கும் நல்லதையும், கெட்டதைய்ம், நம்மால் பூரணமாக உணர இயலும் என்ற் பரந்து விரிந்த எண்ணத்தை முன் வைத்துக் கூறப்பட்டது தான் அந்த பழமொழி. ஏறக்குறைய, எல்லா விதத்திலும், அம்மொழியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நம் கலாச்சாரத்தைப் பொறுத்தவரையில், கலவு(sex) என்பது களவு(theft) என்ற பொருள்படும் அளவுக்கே பார்க்கப்படுகின்றது. அதற்கு, காரணம் என்ன என்று யோசித்துப் பார்தோமேயானால், சமுதாய ஒழுங்கு முறைகள், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், கலவு கற்றலினால் தீமை விளைந்திடுமோ என்ற அச்சம், சமுதாய சீர்கேடு விளைவித்திடுமோ என்று நாம், இட்ட கட்டுப்பாடுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும், கலவு என்பது மிகவும் தேவைப்படும் ஒன்றாகவே கருத்ப்படுகின்றது. நமக்கு விருப்பப்படுகின்ற போது, அது மிகவும் தேவையான விஷயமாகவும், விருப்பம் தீர்ந்தவுடன், தீண்டத் தகாத விஷயமாகவும் தான் எல்லோராலுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஏன்? காலம் காலமாகவே இந்நிலை தான். நம்மால் சரியான விடை கண்டுப்பிடிக்க முடியாத ஒரு புதிராகத் தான் இது இருந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன?

HIV போன்ற கொடும் வியாதிகள் வந்த பின் தான் நமக்கு, கலவியல் பற்றியும்,அதன் மூலம் ஏற்படும் வியாதிகளை தடுக்க எவ்வாறான விழிப்புணர்வு தேவை என்ற உணர்வும் மேலோங்கி இருக்கிறது. அவ்வகையான வியாதிகள் ஏற்ப்பட்டிருக்காவிட்டால், கலவியல் என்பது ஒரு மறைமுகமான ஒரு விஷயமாகவே இருந்திருக்கும்.

மறைத்து வைக்கும் எதற்குமே ஈர்ப்பு உண்டு. ஈர்ப்பின் சக்தி அதிகமாகும் போது, பல தடைகளை தாண்டி, மறைத்து வைத்ததை அடையும் எண்ணம் தான் மேலோங்கும்.அது தான் இயற்கை. இயல்பாக, ஒரு பூ மலருதலைப் போல நிகழ வேண்டிய கலவு, கட்டுப்பாடுகளால், யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக, பல தீமை பயக்கும் விதங்களில், கட்டுத்தறி கெட்டு, அநாகரீகமாக நடக்கும் கோரத்தை என்னென்று சொல்வது.

நம் சமுதாயத்தை பொறுத்தவரையில் காதல் என்ற சொல்லே, ஏதோ சொல்ல கூடாத சொல்லாகவும்,காதல் மணம் என்பது,வெறுக்கத் தக்க விஷயமாகவும் கருத்ப்படும் வகையில்,நாம் இன்று விவாதிக்க எடுத்திருக்கும் கலவியல் "அசசச்சோ..இதையா இப்படி வெளிப்படையா பேசறாங்க" என்று சொல்ல வைத்தால், அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.

கலவியல் கல்வி என்பது கைக்கு எட்டாத கனியாகவே இப்போது இருக்கிறது.ஆனால், ஒழுங்கு படுத்தப்படாத கலவியலால் நிகழும், பாதகங்கள் ஏராளமாகிப் போய்விட்டது. இக்கால இந்தியாவில், மேல் நாட்டு நாகரீகம் என்பது வெகு இயல்பாகிப் போனதாக இருக்கும் பட்சத்தில், கலவியல் கல்வி, நம் இளைய தலைமுறையினரை நன்கு வழி நடத்திச் செல்லும் விதமாக இருக்க வழி வகுக்கும்.

நாம் கலவு என்பதை எப்போது தவறு என்ற கோணத்தில் பார்க்காமல் இருக்கிறோமோ, அப்போது தான், நம்மால் அதை புரிந்து கொள்ள இயலும். அப்போது தான், இளைய சமுதாயத்திற்கும், அதனைப் பற்றி ஒரு விழிப்புணர்வையும், ஆரோக்கியமான உறவு முறைகளை வைத்துக் கொள்ளும் விதத்தையும் அவர்களுக்கு சொல்லித் தர இயலும். மறைத்து வைத்து, மிக பெரிய இழப்புக்களை சந்திப்பது சிறந்ததா? , வெளிப்ப்டையாக பேசி, இயற்கையின் இயல்பை கூறி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல் சிறந்ததா? சிந்தியுங்கள்..!

Thursday, June 7, 2007

புரிந்து கொள்கிறோமா?.....புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோமா?..

இருபத்தி மூன்று வருடங்கள் ஒன்றாகவே இருந்து,வளர்ந்து,வாழ்ந்தும்,என்னை என் வீட்டில் யாரும் சரியாகவே புரிஞ்சுக்கல...

என் தோழி ஒருத்தியின் புலம்பல் தான் இது.அது ஏன்?,கூடவே இவ்வளவு வருடங்கள் இருந்தும் என்னைப் பற்றிய சரியான புரிந்து கொள்ளல் அவர்களால் இயலாததாயிற்று. இது தான் அவளது வினா.

புரிந்து கொள்ள,கூடவே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனாலும் அவளது ஆற்றாமையில் நியாயம் இல்லாமல் இல்லை.இதற்கு காரணம் என்ன?

புரிந்து கொள்ளல் எப்பொழுது நிகழும்? எதன் மூலம் புரிந்து கொள்ளல் சாத்தியம் ?

மிக முக்கியமாகச் சொல்ல வேண்டுமென்றால், அன்பு ...அன்பு பாராட்டுதல் இருந்தே ஆகவேண்டும். இரண்டாவதாக பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள். இவை இரண்டும், புரிந்து கொள்ளல் நிகழ ஏதுவான உபகரணங்கள்.ஆனால் இவற்றை எல்லாம் விட,மிக முக்கியாமான் ஒரு சிறப்பை குடும்ப நபர்கள், ஆட்கொள்ளாதது தான், துயரக் கடலில் சிலரை ஆழ்த்த காரணமாக இருக்கிறது.

ஏற்றுக் கொள்ளல்(Acceptance)தான் அத்தகைய சிற்ப்பான பண்பு. நம்முடைய துன்பப்பாடுகளுக்கு எல்லாம் முழுமுதற்க் காரணமாக விளங்குவது "ஏற்றுக் கொள்ளாமை" தான்.

அன்பு , இந்த மூன்றெழுத்து வார்த்தை, நம்க்குள்: எப்படி சாத்தியமாகிறது?.

ஒரு குடும்பத்தில், மகனாகவோ,மகளாகவோ, சகோதரியாகவோ, சகோதரனாகவோ பிறந்து விட்டாலே, ரத்த சம்பந்ததினால், பாசம் என்ற பிணைப்புக்குள் தள்ளப்பட்டதனால், அந்த அன்பு சாத்தியமாகிறதா. இல்லை....என் குடும்பம், என் மகன், என் மகள், என் சகோதரன், என் சகோதரி என்ற எண்ண ஓட்டங்களினால் அந்த அன்பு சாத்தியப் படுகிறதா?

"கமிட்மெண்ட்"(commitment)என்று எண்ணும் எவ்விடத்திலும் அன்பு வாசம் செய்ய ஏதுவான சூழல் இல்லை.ஆனால், நம்மில் பலரும், கமிட்மெண்ட் என்று எண்ணிக் கொண்டு தான் உறவுகளோடு உறவாடிக் கொண்டிருக்கிறோம்.

"பாலும் தெளி தேனும்,பாகும் பருப்பும்,இவை யாவும் கலந்துனக்கு நான் தருவேன்,
கோலம் செய் !,துங்கக் கரிமுகத்து தூமணியே, நீ என்க்கு, சங்கத் தமிழ் மூன்றும் தா.."

எப்போதெல்லாம், இச்செய்யுள் நினைவுக்கு வருகிறதோ, அப்போதெல்லாம், ஒன்று கொடுத்தால் தான் மற்றதை பெற முடியுமோ,என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கி இருக்கும். இறையே, நான் இவையெல்லாம் தருகிறேன்,ஆதலால் நீ இவையெல்லாம் என்க்குத் தா, என்று ந்வில்வதில்,அன்பு எங்கே இருக்கிறது?.அன்பை சரியாக தெரியாதவன், அன்பை எப்படிக் கொள்ள முடியும்?.அன்பு இல்லாத இடத்தில், பரஸ்பர கருத்து பரிமாற்றம், அன்னியோன்யமாக எங்கு நிகழும்?.

"நீ இவ்வாறாக எல்லாம் இருந்தால் தான் உன்னை என்க்கு பிடிக்கும். உன்னைப் பிடித்தால் தான் உன் மீது எனக்கு அன்பு ஏற்ப்படும். அன்பு ஏற்ப்பட்டால் தான், பரஸ்பர பரிமாற்றங்கள் நடக்கும். அதனால், எனக்கு பிடித்த மாதிரி நீ இரு....."

இது தான், நம் அன்பை எதிர் நோக்கும் ஒருவருக்கு நம் மனதால், நம்மையும் அறியாமல், நாம் இடும் கட்டளைகள்..இவை எல்லாம் இருந்தால், அன்பைத் தருவேன், இல்லாவிட்டால் அன்பு no stock. அன்பு என்ற உணர்வு,சிரிப்பை போல், அழுகையைப் போல், எப்போது ஏற்படுகிறது என்பது தெரியாமல் ஏற்படும் ஒரு உணர்வு.

ஏற்றுக் கொள்ளல் என்ற சீரிய பண்பு தான் ,அதற்கு முதல் படி.ஏற்றுக் கொள்ளல் எங்கு சாத்தியம் இல்லையோ,அங்கு அன்பும் சாத்தியம் இல்லை,புரிந்து கொள்ளலும் சாத்தியம் இல்லை.

ஆகவே தான்,குடும்பம் என்ற சூழ்லில் புரிந்து கொள்ளப்படாதவ்ர்,வெளி உலக நண்பர்களால், மிக எளிதாக புரிந்துக் கொள்ளப்ப்டுகிறார்.புரிந்து கொள்ள கூடவே வாழ் நாள் முழுவதும் கூடவே, வாழ வேண்டிய அவசியம் இல்லை.யார் எப்படி இருந்தாலும் ,ஏற்றுக் கொள்ளலின் மூலம், நம் அகக்கண் விசாலமாகும், அகத்தை அன்பு ஆக்ரமிக்கும்,பரஸ்பர பரிமாற்றம் நிகழும், அப்போது தான் புரிந்து கொள்ளல் சாத்தியப்படும்.

Saturday, June 2, 2007

கவர்ச்சி..காதல்..! காமம்..

இன்றைய கால கட்டத்தில், நான் இப்போது சொல்லக் கூடிய விஷயங்கள்,பழமை வாய்ந்ததாகக் கூட இருக்கலாம்.எப்போதோ கேட்ட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது."காதல் என்பது எது வரை, கல்யாண காலம் வரும் வரை...கல்யாணம் என்பது எது வரை..கழுத்தினில் தாலி விழும் வரை " :)

காதல் என்ற சொல்லை நாம் எப்படியெல்லாம் புனிதப் படுத்துகிறோம். "நான்கு உதடுகள் உச்ச்ரிக்கிற அதிசயம்...காதல் என்ற சொல்லை சப்தமாக சொல்லாதீர்கள், அது அவ்வளவு மென்மையானது....அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள் , நீ மட்டும் உன் கண்களோடு" :)

எப்படியெல்லாம் காதலை பிராதனப் படுத்தியிருக்கிறார்கள்.நம் இலக்கியங்களை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.ஒன்று பெண்ணே பிரதானம்,காதலே முக்கியம் என்று பேசியவை. மற்றொன்று,பெண்ணே பாவம்,உலகே மாயம் என்று வாழ்வையே மறுதலித்தவை. இரண்டும் வாழ்கையின் வேறு முனைகள்.எதிர் எதிர் திக்குகள்.ந்ம் இலக்கியம், நம் கதை, நம் சினிமா, தொலைக்காட்சித் தொடர், இவை அனைத்துமே, காதலை பூதாகாரமாக ஊதி காதல் ஜெயிக்க ஓடிப் போவது தான் தீர்வு.காதல் தோற்றால் தற்கொலை முடிவு என்ற நினைப்பை மனித மனங்களுக்குள் திணித்துள்ளன என்பதை மறுக்க முடியாது.

கோபம், பயம் போல காதலும் ஒரு உணர்வு தான்.காதல் கண்டிகப் பட வேண்டிய விஷயமும் அல்ல.கொண்டாடப் பட வேண்டியா விஷயமும் அல்ல. அதை மட்டும் புனிதப் படுத்துவதற்கு அதில் ஏதும் அவசியம் இல்லை. எதை நாம் புனிதப்படுத்துகிறோமோ அது அசிங்கமாகிறது என்று பொருள்.எது போற்றப்படுகிறதோ அது புறக்கணிக்கப்படுகிறது என்பது பூடகம். தாய், தந்தை, சகோதரகளை தேர்ந்த்டுக்க முடியாது.துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.அவ்வளவு தான் வித்தியாசம்.

"ஏழை அப்பா விதி - ஏழை மாமனார் , முட்டாள் தனம் "என்கிற வரையில் தான், இப்போதுள்ள காதலர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது.இதற்கு பல காரணங்களை நாம் சுட்டிக் காட்டலாம்.

காலத்திற்கேற்ப்ப மாறிக் கொள்ள வேணுங்க ! நினைத்த படியேல்லாம் வாழ்கை அமையும் அப்ப்டின்னு நினைச்சு தான் காதல் செய்கிறோம்.சில நேரம் அமையுது, சில நேரம், தெளிவா யோசிச்சு தான் நாங்க ரெண்டு பேரும் எடுத்த முடிவு தான் , இது மாதிரி நாங்க ரெண்டு பேரும் வேறு நபர்களை கல்யாணம் செஞ்சுக்கலாம் என்ற முடிவை எடுக்க வைத்தது. ப்ராக்டிகலா யோசிக்கணுங்க !

இங்கே உள்ளம் எதை தேடி இருக்கிறது. காதலையா?? கல்யாணம் செய்வத்ற்கு முன், ஒரு வித இனக் கவர்ச்சி தான் காதல் என்ற சாயம் பூசி இவர்களை ஆட்கொண்டிருகிறது. நூற்றுக்கு எண்பது சதவிகிதம் இத்தகைய கவர்ச்சியினால் மட்டுமே ஆட்க் கொள்ளப் படுகிறார்கள். அதற்கு காரணம், காதல் என்பதற்கு முழு அர்த்தத்தையும், காதல் என்ற உண்மையான உணர்வு உணராமலே, காதலில் வீழ்ந்து விட்டோம் என்ற நினைப்புமே தான்.

Infatuation என்பதையே சரியாக புரிந்து கொள்ளாத ஒருவர் அடுத்தவர்களை சரியாக புரிந்து கொண்டதாக நினைப்பதும், அவர்களது வாழ்க்கையை காட்டிலும் பிரம்மாண்டமான வடிவத்தை உண்டாக்குவதும் தான், விரைவில் infatuation நீர்த்துப் போகக் காரணம்.

கவர்ச்சி என்பது இவ்வாறாக இருக்க, காமம் என்பது உடற் பசியாக மட்டுமே சித்தரிக்கப் படுகிறது. உடற் பசி மட்டுமே காமம் இல்லை.நியாமற்ற உறவுகள் மட்டுமே காமம் இல்லை. காமம் என்பது அன்பு இல்லாமல் நிகழ்கிற பாலுண்ர்வு.இருபாலருக்கும், அன்பு வழியும் போது ஏற்படும் உணர்வு காமம் இல்லை. கட்டாயத்தினால், அன்பு இல்லாமல் வேறொரு காரணத்தினால் நிகழ்வது காமம். காமத்திறகான மிகச் சிறந்த விளக்கத்தை திருவள்ளுவர் தான் தருகிறார். பொதுமகளிரிடம் வைத்துக் கொள்ளும் உறவு, இருட்டறையில் பிணத்தினை தழுவுவது போல என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால் அது அன்பினால் நிகழ்வது அல்ல.உடல் மட்டுமே சம்பந்தப்பட்டது.இதயமோ தொடர்பற்று இருக்கும்.

காமம்,கவர்ச்சி ஆகிய இரண்டும் ஏற்படக் காரணம் என்ன? அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதித்து பெண்ணைப் புதிராக்க நடக்கும் முயர்ச்சிகள் தான் இதற்கு காரணம்.எல்லா ஊடகங்களிலும் நேசிப்பு மட்டுமே மூலக் கருவியாக இருந்து, அது மட்டுமே வாழ்க்கை என்கிற பிம்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது தான். விலக்கி வைக்கும் போது தான் விருப்பம் அதிகரிக்கிறது. சிறு வயதிலிருந்தே இயல்பாக பழகும் நெறி முறைகளை ஏற்படுத்தினால் 24 மணி நேரமும், அடுத்த பாலினைப் பற்றி சிந்திக்கிற மனப்பான்மை குறையும்.

infatuation மற்றும் lust, ஆகிய இரு முனைகளுக்கும் இடையில் தான் காதல் இடம் பெறுகிறது. தன் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு, தன் இலக்குகளை தீர்மானித்துக் கொண்டு தன்னுடைய இலட்சியங்களுக்கு ஏற்ற ஒருவரை சந்திக்க நேர்ந்தால், பனியில் பாரிஜாதம் மலர்வதைப் போல மலர்வதே காதல்.

நாளாக நாளாக அப்படிப்பட்ட ஈர்ப்பு அதிகரிக்கும்.இன்னொருவரிடம் இருக்கின்ற மற்ற பரிமாணங்களையும் உணர உணர மகிச்சியும்,அன்பும் மேலோங்கிக் கொண்டேயிருக்கும். நாளடைவில், உடல் மறைந்து போகும்.உருவம் காணாமல் போகும் உள்ளம் மட்டுமே எஞ்சி நிற்கும்.அப்போது ஆழ் மனத்தின் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.மன முதிர்சியினாலும், சரியான புரிந்து கொள்ளலினாலும் ஏற்படும் காதலே, இவை எல்லாவறையும் உணர சாத்தியம்.

நமக்கு வாழ்க்கை சலித்துப் போவதற்கு காரணம், அதை குறிப்பிட்ட வரைமுறையில் (programmed and predictable) நாம் எதிர் பார்ப்பது தான்.அடுத்தவ்ர்கள் நாம் எதிர்ப்பார்த்ததில் இருந்து மாறுபடும் போது தான் சலிப்பு வருகிறது. அன்பின் எண்ணற்ற பரிமாணங்களில் ஒன்று தான் காதல்.அதை மலர்களை ஸ்பரிசித்தும், குழந்தைகளை கொஞ்சியும், மானுடத்தை நேசித்தும், மற்றவர்களை அனுசரித்தும் வெளிப்படுத்தலாம்.

அப்படிப்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். அவசரப்படுவதில்லை.அப்படிப்பட்டவர்கள் முயற்சி செய்வதில்லை.முந்தியடிப்பதில்லை.தானாகவே அவர்கள் மடியில் அவர்களுக்கு பொருந்துகிற துணை வந்து விழுகிறது.