யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Tuesday, July 31, 2007

இறப்பை வரவேற்க்கத் தயாராவோமா?

தலைப்பே ஒரு விதமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? என்ன! தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டாள் என்ற முணுமுணுப்பும் என் காதில் விழுகிறது :) என்னைப் பொறுத்தவரையில், வாழ்க்கையும், தத்துவமும் தனித் தனிச் சொற்கள் அல்ல. தத்துவத்தை தொடாமல், வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க முடியாது. புரியாத ஒன்றைத் தான் தத்துவம் என்ற பொருளில் நாம் காணுகிறோம். ஆனால், அதே தத்துவத்தை தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை இல்லாமல்.

இறப்பை வரவேற்பதா? எப்படி சாத்தியம் இது? என்ற கேள்வி ஒவ்வொரு மனதிலும் எழக் கூடும். சற்றுக் கடினம் தான். அவ்வளவு எளிதாக ஜீரணம் செய்து கொள்ள முடியாத ஒன்று தான் இறப்பு என்பது. அன்றாட வாழ்வில் பிறப்பு என்பது எவ்வளவு சாதாரணமோ, அத்துணை சாதாரணம் தான் இறப்பும். இது எல்லோருக்குமே தெரிந்தது தான். ஆனால், அந்த எதார்த்தமான எண்ணம் இறப்பை சந்திக்கும் தருவாயில் நமக்கு எழுகிறதா? நடைமுறை வாழ்க்கையில், ஒரு நாளில், பலரின் இறப்புகளை பார்த்தாலும், மனம் ஏதோ புதிதாய் ஒன்று வாழ்க்கையில் நடைபெறுகிறது என்ற போக்கில் தான் செயல்படுகிறது. இறப்பை பொறுத்தவரையில் எதார்தத்தை ஏற்றுக் கொள்ள நம் மனம் நம்மை அனுமதிப்பதில்லை.

மற்றவரின் இறப்பே நமக்குள் இது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் போது, நம் இறப்பைப் பற்றி நமக்கு என்ன சிந்தனை இருக்க முடியும். இன்னும் இரண்டொரு நாளில், நீ இறந்து விடுவாய் என்ற கெடு வைத்தால், அந்த இரண்டொரு நாள் நாம் வாழ்வோமா, இதைக் கேட்ட அன்றே இறந்து போகும் சாத்தியக் கூறுகள் தான் அதிகம். இப்படி மரணமானது நமக்குள் நிதர்சன உண்மையை உணரும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறதோ இல்லையோ..பயத்தை பூரணமாக தோற்றுவிக்கிறது. ஆக இறப்பதற்கு ஒருவருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் வாழ்க்கையில் இறப்பு என்பது தவிர்க்க முடியாது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். விருப்பம் இல்லை, ஆனால் ஏற்றுக் கொள்கிறோம். அதனால் தான் துயரம் என்பது இறப்பைப் பொறுத்தவரை அதிகமாக உணரப்படுகிறது.

இங்கு நான் சொல்ல வந்த கருத்து, நம் இறப்பை நாம் வரவேற்க்கத் தயாராகுதல் எப்படி? அப்படி நாம் தயாராக வேண்டிய அவசியம் என்ன? அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? வாழுதல் என்பது முழுமையாக இருக்கும் பட்சத்தில், இறப்பையும் நாம் வரவேற்க்க முனைய முடியுமா? இது போன்ற எண்ணங்கள் உங்கள் மனதில் உதித்திருக்கிறதா..என்பது தெரியவில்லை. ஆனால், இது போன்ற எண்ணங்கள் என் மனதில் உதித்திருக்கிறது.

மேலும் இது பற்றி இங்கு சொல்வதற்கு முன், இது போன்ற விஷ்யங்களில் எண்ணப் பகிர்தலைப் பற்றி உங்கள் அபிப்ராயம் வேறாக இருக்கும்பட்சத்தில், உங்கள் மேல் என் கருத்துகள் திணிக்கப் பட்டவையாகத் தான் நான் உணருகிறேன். அவ்வாறு திணிக்கப்படுதலை தவிர்க்கும் எண்ணத்தில்,உங்களின் மறுமொழிகளின்் மூலம்,இந்த தலைப்பை தொடரலாமா.. வேண்டாமா என்ற முடிவுக்கு வரலாம் என்று இருக்கிறேன். மிகவும் மென்மையாக கையாளப்பட வேண்டிய தலைப்பு என்பதால் தான், தங்களின் பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களைப் பொறுத்து மேலும் இத்தலைப்பை தொடரலாம் என்ற எண்ணத்துடன் முடிக்கிறேன்

Friday, July 27, 2007

Let us create the creativity !An awesome presentation by Ken robinson “Do schools kill Creativity?” He is right. We are working hard to remove the illiteracy but we somehow kill the creativity of the children with our structured curriculum. We think and also believe, education can give a fruitful result, when we follow the same structure of learning process and we always stick to it to master up the brilliancy of the students with already proven methods of education in various subjects. Here, we are just following the information but we are not allowed to apply our own thinking based on any concept to rebuild it with different ideas and views to nourish the same.

Once, I have asked the same question to the principal of a Indian school. She totally disagreed with me. And further,she explained , that the class strength is too high to apply the techniques to improve the creativity of the students. And she also included, that they must finish off the syllabus within the limited period of time. But who fixed this time boundary?. As far as, Indian education system is concerned, they are very liberal with their rules and regulations. The Government allow the schools to fix their own syllabus and they can even use their own material to enhance the educational phenomenon. But most of us are not aware of such government rule.

Unfortunately, the school management is not ready to prepare their own material, because they find it difficult and moreover they are not holding teachers who have their own creativity to prepare the same. With the tool of creativity, we can do wonders in our education system. It is the smartest way to achieve the target with less strain. Creative skills helps us to make the learning process easier.It improves the application oriented skills within us as well around us. It creates the desire to learn more , communicate effectively and it kindles the desire to efficiently lead and manage things. In fact , it is a easier process to make the students to understanding the concept quickly.

But this can be achieved , if we are able to adopt our education pattern in creative way. It can be done with new recruits who flourish with creative skills. Creativity in the school atmosphere will draw the new approaches with new strategies derived from the past experience. It increases the openness and acceptability within you. It increases the communication, visualization, understanding skills. It overcomes the dormant state of brain power and it also helps learning to learn and learning to lead.

Schools in India should come forward to create this kind of atmosphere and that will lead to the destiny to change yourself and change the world.

Monday, July 23, 2007

என்னை அரி(றி)கிறேன்

நம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றித் தெரியும். நம்மைப் பற்றி தெரிந்ததை விட அதிகமாக அடுத்தவர்களைப் பற்றித் தெரியும். அதுவும் அடுத்தவரின் குறைகள் நம் கண்ணுக்கு நன்றாகவே புலப்படும். அதை நம் இயல்பாகவே நாம் கொண்டு விட்டோம். நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்த்து ரசிக்க மனம் ஆசைப்படுவதைப் போல, நம் அகத்தை நாமே உணர்ந்து ரசிக்க நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று சொன்னால், பெரும்பாலானோர், ஏதோ தெரியும் என்ற பதிலைத் தான் தர விழைவார்கள்.

நம்மைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளும் பட்சத்தில், நம்மால் நம் நிறை, குறைகளை சமமாக உணர முடியும். நம் நிறைகளை நாமே வாழ்த்தவும்., குறைகளை நாமே சீர்திருத்திக் கொள்ளவும் பேருதவியாகத் தான் தன்னை உணர்தல் தேவைப் படுகிறது.

நமக்கு மற்றவரின் நிறை, குறைகள் நன்றாகத் தெரிவதால், அவர்களிடம் இருக்கும் நிறைகளால், அவர்களுக்கு தேவைப்படும் போது, உதவ வேண்டும் என்ற எண்ணமும், அதே நேரம், குறைகள் தென்பட்டால், அவர்களிடம் விலகிச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது. மற்றவருக்காக நாம் செலவு செய்யும் நேரம் தான் அதிகமே தவிர, நம்மை நாமே உணர, அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷத்தினைப் பெற ஒரு நாளில் குறைந்தது இருபது நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும்.

உடம்பிற்கு தேவையான உற்சாகம் கிடைக்க பல வழிகளில் நாம் முயல்கிறோம்.வாரக் கடைசி நாளான சனிக்கிழமையில் , ஒர் இடத்தில் கூட்டம் கூடுவதைப் பார்த்தாலே, தெரிந்து விடும்.உற்சாகம் எவ்வாறெல்லாம் தேவைப்படுகிறது. அதனை எவ்வாறெல்லாம் தேடிக் கொள்கிறோம் என்று.

நம்மை நாமே விமர்சனத்திற்குள்ளாக்கிக் கொண்டாலே போதும், வெளி மனிதர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். எது புத்திசாலித்தனம்? நம்மை நாமே நேரம் ஒதுக்கி, கவனித்து சரி செய்து கொள்வதா? அல்லது மற்றவருக்கு அந்த வாய்ப்பை நல்குவதா?

பொதுவாகவே, அவரவர்க்கு அவரவர் நல்லவரே ! அந்த கருத்து நமக்குள் இருப்பதனால் தாம், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நம் ஆளுமையில் எம்மாதிரி குணங்களை விலக்க வேண்டும், எவ்வகையான குணங்களை சேர்க்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தாலே, நமக்கு நாம் எப்படி இருக்க வேண்டுமோ, அது சாத்தியமாகும். தன்னை அறிதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும் பட்சத்தில் தான், நமக்கு என்ன தேவை, தேவையில்லை என்ற முடிவுக்கு வர இயலும். மனவியல், வாழ்வியலைப் புறக்கணித்து நம்மால் வாழ்க்கையை வாழ முடியாது. வாழ்ககையின் அடிப்படை ஆதாரமே, நம் வாழ்வை நாம எப்படி் சந்தோஷமாக அமைத்துக் கொள்வது, என்று சிந்திப்பதில் தான் இருக்கிறது.

நமக்குள், சிறு சிறு கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தாலே போதும், நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்ள பிள்ளையார் சுழி போட்டதற்கு சமம். ஒரு சில மாதிரிக் கேள்விகளை இங்கு தர விழைகிறேன். கேள்விகளுக்குண்டான பதிலகளை ஆம்/இல்லை என்ற கோணத்தில் கொடுத்துக் கொள்ளவும்

1. நான் இரகசியமாக கர்வம் கொண்டவனா?/ கொண்டவளா?

2. என்னுடைய மோசமான குணங்களையும், தவறுகளையும் எதிர் நோக்க முடியாதவனா?/முடியாதவளா?

3. என்னால் மற்றவரின் கருத்துக்கள், அபிப்ராயங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

4. என் ஆலோசனைகளை மற்றவர் கேட்டு அதன் படியே நடக்க வேண்டும் என்று நான் எதிர்பார்பவனா?/ எதிர்பார்பவளா?

5. என் உணர்சிகள் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா? கட்டுப்படுத்த கஷ்டமாக உள்ளதா?

6. மற்றவர்களை திருப்தி படுத்த நான் அக்கறை எடுத்துக் கொள்கிறேனா?

7. மற்றவர்களை அனுசரித்துப் போகும் பழக்கம் என்னிடம் இருக்கிறதா?

8. நான் பார்கிற வேலைக்கும், கடமைக்கும், விசுவாசமில்லாத புகழைத் தேடுகிறேனா?

9. கவலைப்பட்டு மனசோர்வுக்கு ஆளாகிறேனா?

10. ஒரு வேலையை முடிக்கிற வரையில் அதனை ஈடுபாடோடு, உற்சாகமாக செய்கிறேனா?

11. மேற்கொள்ளும் காரியத்தில் எப்போதும் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேனா?

12. என்னை சுற்றி நடக்கிற நிகழ்வுகளில் நான் ஆர்வம் கொண்டுள்ளேனா?

13. குடும்பத்தினரிடம் அன்பு செலுத்த அதிக பிரயத்தனம் மேற்கொள்கிறேனா?

14. மற்றவரின் தோழமையை விட எனக்கு நானே தோழன் என்று தனிமையில் இருக்க விரும்புகிறேனா?

15. நாம் முற்றிலும் விரும்பாத நபர்கள் இருக்கிறார்களா?

16. மற்றவர்கள் என்னிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றோ, உரிய மரியாதை தருவதில்லை என்றோ எண்ணுகிற போக்கு என்னிடம் இருக்கிறதா?

வாழ்க்கையில் எதிர்ப்பார்பதை நீங்கள் அறுவடை செய்யவில்லை என்கிற உணர்வு உங்களுக்கு இருந்தால், தவறு எங்கே என்று, உங்கள் பதிலின் மூலம் புரிந்திருக்கும். நீங்கள் மற்றவரிடம் எதிர்பார்க்கும் விஷயங்களில் நீங்கள் எப்படி, என்பதற்கு உங்களின் நேர்மையான பதில்கள், சரியான உத்திரவாதத்தை உங்களுக்குத் தரும்.

Saturday, July 21, 2007

சுயநலம் வளர்.. !

சுயநலம் ஆக்கப் பூர்வமான ஒன்றா? பெரும்பாலும், இதில் உடன்பாடு இல்லாமல் தான் இருக்ககூடும். சுயநலம் சிறப்பான ஒன்று என்று நான் கூறினால், உடனே ஏற்றுக் கொள்ளுதல் இயலுமோ?

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதும், மகிழ்வித்துக் கொள்வதும் சுயநலம் தான். சுயநலம் என்றதும் பொதுவாய் பிறர் நலத்தைக் கவர்ந்து சுயமாய் அமைத்துக் கொள்ளும் நலம் என்றே நினைப்பதனால் வரும் கோளாறு தான் இது.

வாழ்வியலில் சிறப்பான ஒரு அம்சம் தான் சுயநலம்.ஒருவன் தன்னையே முழுதாய் நினைத்துக் கொண்டு வாழ்வை ஓட்டிச் சென்றால் அது சுயநலம் தான். கீதையின் தத்துவம் போல, பலனை எதிர்பாராமல் தன் காரியத்தில் தான் ஈடுபடுவதும் - இந்த கண்ணோட்டத்தோடு பார்த்தால் இது சுயநலம் தான். சொல்லப் போனால் வெகு ஆரோக்கியமானதும் கூட.

மனநலத்திற்கும், சுயநலத்திற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தனக்கே நல்லதாகவும், தனக்கு நன்மையை தர வல்லதாகவும் ஆக்கிக் கொள்ளும் விஞ்ஞானமே மனநலம். சுயநலம் என்றதும், நமக்கு அது ஒரு கேவலமான நிலை என்ற பொருளே தொனிக்கிறது இதுதான் மனவியலில் வினோதமான விதி. நாம் வார்த்தைகளை குறியீடுகளாகவே பயன்படுத்தி பழகிக் கொண்டிருக்கிறோம்.

வாக்கியங்களின் அர்த்தங்களை உணராமல், வார்த்தையின் ஒலிகளை குறியீடுகளாக்கிக் கொள்வதாலேயே சிக்கல்.அதனால் தான் சுயநலம் என்ற சொல்லை அர்த்தம் புரிந்து கொள்ளாமல், கேவலமாகவே சித்தரிக்கப் பட்ட சொல்லாகவே நம் வழக்கில் நாம் கொண்டு விட்டோம்.

நாம் சமூகத்தில் ஓர் அங்கம். நாமே நமக்குள் தனியாக வாழ்வது இயலாத நிலை. அப்படி வாழ்வதும் ஏற்புடையதாகாது. இதற்கெல்லாம் சுயநலம் என்பதை சரியாக புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. சமூகத்தோடு இயைந்து வாழ்ந்தும், அதே சமயம், தன் இயல்பினை இருத்திக் கொள்வதும். இவ்விரண்டும் ஒரு சேர அமைத்துக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டாலே வாழ்வில் சாதனை மிக எளிதாகி விடும்.

சமூகத்தில் நாம் ஒரு அங்கம் , என்பது போல், ச்மூகமும் நம்மின் விரிவாக்கம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உலகம் பிறந்தது எனக்காக..ஓடும் நதிகளும் எனக்காக என்ற எண்ணத்தோடு சமூகத்தை அணுகும் நோக்கு தென்பட்டாலே, நாம் சமூகத்தில் இயங்குவது எளிதாகிப் போகிறது. அனைத்தும் எமதே என்று கருதுவது ஆணவமாகாது. எனக்கே அனைத்தும் என்று கருதுவது தான் ஆணவம். இவ்விரண்டில் உள்ள அர்த்த வேறுபாட்டை நாம் புரிந்து கொண்டாலே, சுயநலம் என்பதை எதிர்மறையாக நாம் எண்ணாதிருப்போம்.

அக்காலத்து சுயம்வரம் கூட சுயநலத்தை நன்கு சித்தரிக்கும் வகையில் தான் நடந்தேறி வந்திருக்கிறது. இக்கால நிலைப் போல , பெற்றோர் பார்த்து வைக்கும் வரனில், தன்னை இணக்கம் செய்து கொண்டு, தம் விருப்பம் என்ற ஒன்றை விலக்கி, வாழ தயாராகும் பெண்ணிடம் சுயநலம் இருக்கக் கூடாது என்று தான் உலகம் நினைக்கிறது. தனக்கு தானே செய்து கொள்ளும் நியாயமான காரியங்களையும் பிறருக்காக விட்டுவிடும் பொது நலமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. அப்படி மற்றவருக்காக தம் வாழ்வை தியாகம் செய்வதில் பெருமை இருப்பதாகத் தான் நாம் கருதுகிறோமே அன்றி, நம்மை அழித்து மற்றவரைக் காத்து, அச்செயலுகுண்டான முழு அர்த்தமும் விளங்காமல், ஜீவிப்பதை என்றாவது ஒரு நாள் மனம் எண்ணாமல் போகாது. அதனால் பூரண திருப்தியும் வாழ்வில் ஒருவர்க்கு கிடைக்காது.ஆனால், வெளியே சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் தான் பெரும் பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு முன் நியாயமாகவும், தேவையாகவும், தர்மமாகவும் புலப்படுபவை நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவுபவை. இவற்றை நோக்கி நாம் முன்னேறும் போது ச்முதாய ரீதியாய் நாம் கற்றுக் கொண்டவை தடையாககின்றன. ஒரு புதிய கருத்தினை கூறும் போது, விவேகானந்தர் விவரித்தபடி கேலி(ridicule), ஆட்சேபம்(opposition) வந்தபின் தான் ஏற்பு(acceptance) அமையும். கேலிக்கும், ஆட்சேபத்திற்கும் அடிபணிவதும், சமுதாயத்தை மீறி சுய நியாயத்தை நிலை நிறுத்தாமல் விட்டுவிடுவதும் சுயநலமல்ல. ஒரு ஆழமான கோக்கில் பார்த்தால் இது பொது நலமும் அல்ல.

மனவியல் ரீதியாக சமூகத்தில் சிறப்புடன் இயங்க, ஒருவருக்கொருவர் இயைந்து நடக்க, அடிப்படையான தேவைகள் நான்கு. வெளிப்படை (openness), பிற நேயம் (empathy), ஏற்பு(acceptance), அக்கறை(caring) வெளிப்படையாய், நம் விருப்பு , வெறுப்பு காட்டினால் , நம் எல்லாமும், எல்லார்க்கும் தெரிந்துவிடும் என்பதும் பாதுகாப்பு தான். ஆனால் பாதுகாப்பு என்பது பல கதவுகளை பூட்டி வைப்பதை விட, சன்னல்கள எல்லாம் திறந்து வைப்பதில் தான் உள்ளது. வெளிப்படை என்பது பூரணமாக வெளிக்காட்டிக் கொள்வதல்ல. தெளிவாய் இருப்பதை உணர்த்துவது.

பிற நேயம் என்பது, மற்றவரது வருத்தங்களை உணர்ந்து கொள்வது. பிறரின் சிக்கல்கள் விளங்கினால் அவர்களை நாம் பாதிக்காமல் இருக்கலாம். நாம் பாதிக்காத எவருமே நம்மை பாதிக்கப் போவதில்லை. நாம் பாதுகாப்பாக இருக்க இதுவும் ஒரு சிறந்த வழி முறையே.

ஏற்பு என்பது, மற்றவரை நம் போல குறை, நிறையோடு ஏற்றுக் கொள்ளுதல்.இது போன்ற தன்மையை வளர்த்துக் கொண்டால், நம்மையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஒருவர் இருக்கிறார் என்று நாம் நினைப்பது போலேயே, மற்றவரும் நினைக்கும் நிலை ஏற்படும். நம் வாழ்வு செழிக்க இவ்வித நிலை ஏதுவாக இருக்கும்.

மேற்கூறிய குண நலன்களை பிறர் நலத்துக்காகத் தான் நாம் காணுகிறோமே அன்றி, நம் சுயத்தை செழுமைப் படுத்த நாம் வளர்த்துக் கொள்ளும் குணங்களாக நாம் கொண்டாலே, சுய ந்லம் என்பதின் முழு அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

Saturday, July 14, 2007

வெளியே வா.

நம் வாழ்ககையை நம் இஷ்டப்படி வாழ்கிறோமா? நாம் நினைப்பது போலேயே நாம் இருக்கிறோமா. இது எல்லோருக்குள்ளும் இருக்கும் கேள்வியா? இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை.ஆனால், அது கேள்வியாக இருந்தால், அதற்கு பதிலை நாமே சொல்லி விடலாம், எனக்குள் பல முறை இந்த கேள்வி எழும்பி இருக்கிறது. அதற்கு பதிலும் கிடைத்திருக்கிறது. அந்த பதிலை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

நம் விருப்பப்படி வாழவிடாமல் தடுப்பது நம் எதிரிகளா? நாமே தான். நம்முடைய இன்யெபிஷியன்சஸ் (inhibitions) தான்.இந்த இன்யெபிஷியன்ஸ் என்ற ஓட்டுக்குள் நாம் அடிக்கடி ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம்.

தனிமையில், நமக்காக நம் குடும்ப நபர்கள் படும் கஷ்டத்தை நினைத்து பார்த்திருப்போம். நமக்காக இத்துணை செய்கிறார்களே என்று பூரித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் எத்துணை முறை நாம் அதை அவர்களிடம் வெளிக்காட்டி இருக்கிறோம். அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்லி இருக்கிறோம். அப்படி நாம் அவர்களிடம் சொல்ல முடியாமல் நம்மை தடுப்பது எது. நம் இன்கெபிஷியன்ஸ்.(inhibitions)

மனதிற்குள்ளேயே பாசத்தையும், அன்பையும், காதலையும் வைத்துக் கொண்டே நம்மால் திருப்தி கொள்ள முடிகிறதே தவிர, அம்மாவிடமோ, அப்பாவிடமோ, தங்கை, தம்பி, அண்ணண், அக்கா, மனைவி, காதலி மற்ற உறவுகளிடமோ, அவர்களைப் பற்றி நாம் சேர்த்து வைத்திருக்கும், நல்ல எண்ணங்களையோ, நல்ல அபிப்ராயங்களையோ வெளியே அவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லி இருக்கிறோமா என்றால், இல்லை என்று தான் பெரும்பாலனோர் கூறுவோம்,ஏன் என்று விளக்கம் கேட்டால், எல்லாவற்றையும் வெளியே சொன்னால் தான் அன்பா என்ற மறு கேள்வி தான் எழும்புமே அன்றி, அந்த அன்பை மற்றவர் புரிந்து கொள்ள நாம் நம் பக்கத்திலிருந்து என்ன செய்தோம் என்று நாம் நினைப்பதே இல்லை.

ஞாபத்தில் இருந்து கூட அழிந்து விட்ட ஏதோ ஒரு தகராறுக்காக, பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையே இல்லாமல் இருக்கும், எத்தணையோ உறவு முறைகளும், ஒரே இடத்தில் வேலை பார்த்தும், ஒரு சிறிய தகராறினால் பேசாமல் முகம் திருப்பிக் கொண்டு போவதற்கும் எது காரணம் என்று பார்த்தால் இன்கெனிஷியன்ஸ்(inhibitions) மட்டுமே காரணம்.

பாட்டு பாட ஆசை இருக்கும், ஆட்டம் ஆட ஆசை இருக்கும், ஏன் கண்ணீர் விட்டு கதற வேண்டும் என்ற எண்ணம் கூட இருக்கும். ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து, நாம் விரும்பும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட செய்வதில்லை.பிறர் கண்ணுக்கு நன்றாக தெரிய வேண்டும் என்று நம் சந்தோஷத்தையே காலால் மிதிக்கிறோம். இந்த தடைகளை எல்லாம் உடைத்து சுத்ந்திரம் அடைவது எப்போது.

எப்போதோ, மதிப்பெண் குறைந்ததற்காக கடுமையாக கோபித்துக் கொண்ட அப்பா, தான் கோபித்துக் கொண்டதோடு நிறுத்திக் கொள்வதால், ஒரு இரும்புத் திரையை தனக்கும், தன் மகனுக்கும் இடையே எழுப்பி விடுகிறார். மகனும், அப்பாவிற்கு தன் மேல் பாசம் இல்லையோ என்று நினைத்துக் கொண்டு விடுகிறான். கோபப் பட்டு விட்டு, பாசம் இருந்தாலும், அப்பாவுக்கு தன் மகனிடம் பக்கத்தில் உட்கார்த்து பேச முடியவில்லை. ஒரு பெரிய இடைவெளியை இருவரும் விரும்பாமலேயே அமைத்துக் கொண்டு விடுகின்றனர்.

அதே அப்பா, ஒரு நாள் தனக்கு கிடைத்த ஒரு பரிசை, அப்பரிசை கொடுத்தவர், அப்பரிசை தான் மிகவும் நேசிக்கும் ஒருவருக்கு கொடுக்கச் சொன்னார் என்று சொல்லி தன் மகனிடம், "நான் மிகவும் நேசிக்கும் நப்ர் நீ தான் , இந்தா பரிசு" என்று வழ்ங்கும் போது தான், பல வருடம் இது புரியாமல் போய் விட்டதே என்று மகன் விம்மி அழுகிறான். இதே நிலை தான் நம்மில் பலருக்கும்.

யாரையாவது நெஞ்சார நேசிக்கிறீர்களா? உங்கள் தாயை, தந்தையை, தமக்கையை, கணவனை, மனைவியை, பிள்ளைகளை மிகவும் நேசிக்கிறீர்களா. ஆனால் அதை வெளியே காட்ட முடியாமல் உங்களுக்குள் எழும் இன்கெபிஷியன்ஸை உடைத்தெறியுங்கள். உங்களை அவர்களுக்குத் தெரியப் படுத்துங்கள். அப்போது தான், நீங்கள் விரும்பும் வாழ்க்கை உங்களுடையதாகிறது.

Thursday, July 12, 2007

உனக்குள்ளே....

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா? சந்தோஷத்தை நிர்ணயிப்பது யார். நம் சந்தோஷத்தை எங்கு வைத்திருக்கிறோம்.இது போன்ற பல கேள்விகள் நமக்கிடையே அவ்வப்போது எழுந்தாலும், அப்போதைக்கு மனம் என்ன சமாதானம் சொல்கிறதோ, அதை தான் நாம் நடைமுறைப் படுத்துகிறோம். மனமானது சரியான வகையில் தான் சமாதானம் செய்கிறதா? என்பது அவரவர் தன்மைகேற்பவும், நம்பிக்கைகேற்பவும் மாறுபடுகிறது.

உண்மையிலேயே சந்தோஷத்தை வரையருக்க இயலுமா? , என்றால் இயலாது. இது தான் சந்தோஷம் என்று சில விஷயங்களை மட்டும் நாம் ஒதுக்கி விடுவதில்லை.மனம் எதில்லெல்லாம், பூரண திருப்தி அடைகிறதோ, அது மனதிற்குள் சந்தோஷமாக மலர்கிறது. மனம் பூரண திருப்தி அடைய, ஆசைகள் பூர்த்தி செய்யப் படவேண்டி இருக்கிறது. ஆசைகளை உண்டாக்க, ஒரு இலக்கை நாம் நிர்ணயிக்க வேண்டி இருக்கிறது. அதாவது, இன்ன பொருள் கிடைத்தால் எனக்கு சந்தோஷம் என்பதை ஒரு இலக்காக வைத்து மனமானது ஆசைப் படும் போது, அது நடக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் போது, சந்தோஷமனது மலர்கிறது.

ஒரு இலக்கை வைத்து, ஆசைகள் எழும் போது, அவ்விதமாக சந்தோஷத்தை அடைய ஏதுவாக இருக்கிறது. ஆனால் இலக்கில்லாமல், எது கிடைத்தால் எனக்கு சந்தோஷம் என்ற கேள்வியும், மற்றவருக்கு கிடைக்கும் எல்லாமே எனக்கும் கிடைத்தால் , சந்தோஷம் என்று வரும் போது, நம் இலக்கு இன்னதுதான் என்ற குறிக்கோள் மறைந்து, மற்றவரின் இலக்கை நம் இலக்காக கொண்டு, சந்தோஷத்தை தேடுவதால் தான், பூரண சந்தோஷத்தை அடைந்த திருப்தியை நாம் அடையாமல் போகிறோம்.

எனக்கு என்ன வேண்டும் என்ற நினைவு நம்மிடையே சற்று குறைவு தான். இந்த நிலையை அடைய, தெளிந்த மனம் வேண்டும். உலகம் எவ்வழியோ அதுவே என் வழி என்று ஆகும் போது, பூரண திருப்தி தரும் சந்தோஷத்தை நம்மால் அடைய முடியாமல், மற்றவர்கள் நம் சந்தோஷத்தை நிர்ணயித்தவர்கள் ஆகிறார்கள்.

ஒரு கதை உண்டு.முல்லா நஸ்ருதீன் ஒரு முறை அழுது கொண்டே இருந்தாராம். அவரின் நண்பர் அதைக் கண்டு, ஏன் அழு்து கொண்டே இருக்கிறாய் என்று கேட்க, அதற்கு முல்லா, என் மாமா நேற்று இறந்து விட்டார், போகும் போது, ஒரு லட்ச ரூபாயை என் பெயரில் எழுதி வைத்துவிட்டு போய் விட்டார் என்று அழுதாராம் அதற்கு நண்பர், போனால் போகிறது, வருத்தப்படாதே.அவர் போனாலும், உனக்கு சொத்து வந்து விட்டதல்லவா, அதை நினைத்து சந்தோஷப்படு என்று கூறினார். அதை கேட்ட முல்லா மேலும் அதிகமாக அழ ஆரம்பிக்க, பதைபதைத்த நண்பர், ஏன் மேலும் அழுகிறாய் என்று கேட்க, போன மாதம் என் தாத்தா இறந்து போனார், அவரும் என் மேல் இரண்டு லட்சங்களை எழுதி வைத்து விட்டு போய்விட்டார் என்று அழ, அந்த நண்பருக்கு ஆச்சர்யமாக போய் விட்டது.அடடா! மேலும் உனக்கு சொத்தாக குவிந்து இருக்கிறது. அப்படியும் நீ ஏன் அழ்து கொண்டே இருக்கிறாய் என்று வினவ, அதற்கு முல்லா, நான் என்ன செய்வேன், என் மேல் இனிமேல் சொத்து எழுதி வைத்து இறந்து போக, இன்னும் உறவினர்கள் இல்லாமல் போய் விட்டனரே என்று தான் அழுகிறேன் என்று சொன்னாராம்.

எப்படி இருக்கிறது கதை. இது தான் நடந்து கொண்டிருக்கிறது நம்மில். நம் கை, கால், உடல் எல்லாம் நன்றாக இருந்தும், நம்மால் இவை எல்லாம் எனக்கு நன்றாக இருக்கிறதே என்ற எண்ணமும், திருப்தியும் நமக்கு கிடைப்பதில்லை. ஏதோ ஒரு விரலை இழந்தாலே, இப்படி நாம் இழந்து விட்டோமே என்ற அதிருப்தியானது, நல்ல கை கால், உடல் நலத்துடன் வாழ்ந்தாலே போதும், நிம்மதி என்ற கட்டத்திற்கு நம்மை இட்டு சென்று விடுகிறது.

நம்மிடம் இருக்கும் எந்த விதமான பொருளின் அருமையை நாம், அதை இழக்கும் போது தான் உணர்கிறோம். உணரப்படும் போது, அப்பொருள், நமக்கு இல்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது. சிறிது, சிந்தித்தாலே போதும், நம்மில் எத்துணை சந்தோஷம் நிறைந்திருக்கிறது. அது எங்கெல்லாம், நமக்குள் ஒளிந்திருக்கிறது. அவற்றை இனம் காணுதல் எப்படி, இனம் கணடு, மன நிறைவை காண்பது எப்படி. இப்படியெல்லாம் நம்மால், சந்தோஷத்தை பல வழிகளில் மனதார அடையவும் முடியும். பூரணமாக உணரவும் முடியும்.. அப்புறம் என்ன ! வாழ்வே ஆனந்தம் தான் !