
தியாகம் !!
எது தியாகம்? தியாகம் என்பதற்குண்டான அர்த்தம் என்ன? எவையெல்லாம் தியாகம் என்ற வகையைச் சார்ந்திருக்கும்? ஏன்?
உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். :)
----------- ** -----------
தியாகம் என்பதைப் பற்றி சொல்வதற்க்கு முன், எல்லோராலும், தியாகம் சார்ந்த நிகழ்வுகளாக கருதப்படும் செயல்கள் பற்றி பேசுவோம்.
இரு மனம் சங்கமித்து, திருமண வாழ்வில் தியாகம், நாட்டுப் பற்றினால் மக்கள் துயர் துடைக்கப் புறப்பட்டால் தியாகம். தன்னையே, இழந்து பிறருக்காக செய்யப்படும் எல்லா செயல்களுமே தியாகம், பெற்ற பிள்ளைகளுக்காக, பெற்றோர் சிரமப்படுவது தியாகம்.கட்டிய மனைவிக்காக, கணவன் கட்டுண்டால் தியாகம்.ஆக, எல்லோருக்குமே, வாழ்க்கையில், ஏதோ விதத்தில் , தாம் தியாகம் செய்கிறோம் என்ற உணர்வும், அதனால், மேலோங்கி இருக்கும் ஒரு உயரிய எண்ணமுமே, தியாகம் என்பதை உயர்த்தி கூற ஏதுவாக இருக்கும் காரணங்கள்.
தியாகம் செய்தல் மிக உயர்ந்த நிலையாக பார்க்கும் பட்சத்தில், சில சமயம், கடமை, பொறுப்பு, அன்பு, அரவணைப்பு போன்றவை எல்லாமே, தியாகச் செயல்களாக எடுத்துக் கொள்ளப் படுவது தான் பரிதாபம். அதிலும், தன்னையே தியாகம் செய்வது (self sacrifice) என்ற நிலை என்னால் புரிந்து கொள்ளப்படாத நிலையாகவே உள்ளது.
யாரும் முயலாத, எண்ணிப் பார்க்க முடியாத ஒரு செயலை, மற்றொருவர் செய்யும் போது, மிகப் பெரிய தியாகம் புரியப்பட்டதாக, அனைவரும் எடுத்துக் கொள்ள மட்டுமே, இந்த தியாகம் என்ற சொல் பயன்படுத்த பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.
பத்து மாதம் சுமந்து, கடுமையான வலியையும் , வேதனையும் அடைந்து, ஒரு பிள்ளையை ஈன்றெடுத்து, அதனை சீராட்டி, பராட்டி வளர்த்து, அப்பிள்ளையை நல்வழிப் படுத்தி, ஒரு சீர் நிலைக்கு உயர்த்தும் ஒரு தாயிடத்தில், தியாகம் குடி கொண்டிருக்கிறது என்பதே பொதுவாக பேசப்படும் வாதம். ஆனால், ஒரு நிமிடம், அப்பிள்ளையா, தன்னைப் பெற்று, நல் வழிப்படுத்து என்று சொல்லியது. என்ற கேள்வி எழுப்பினாலே போதும், அத்தாய் செய்த செயல்கள் தியாகம் என்ற நிலைக்குள் வருமா என்பது தெரிந்து விடும்.
தனக்கு வேண்டும் என்ற நிலையில் தான், ஒருவளோ, ஒருவனோ, திருமண பந்தத்தில் ஈடுபடுவது. அதன் மூலம், தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் பெறப்படுவனவே பிள்ளைகள். பெற்ற பிள்ளைகளை சீராக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் பெற்றோருடையதே. இதில் தியாகம் எங்கே வந்தது.
தனக்கு வேண்டும் என்ற ஆசையிலும், ஆசையால் விளைந்த அன்பால் நிகழும் செயல்களுக்கெல்லாம் தியாகம் என்ற பெயர் சூட்டி, உண்மை அன்பையும், பாசத்தையும் முழுதும் உணராமல், தன் உறவு கொண்டாட்டத்திற்கு களங்கம் , கற்பிப்பது போல, பிள்ளையை பெற்று வளர்த்ததையே, மிகப் பெரிய தியாகம் செய்ததாக எண்ணிக் கொள்ளும் மனிதர்களை என்னென்று சொல்வது.!
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும், தன் விருப்பம் விடுத்து, மற்றவரின் விருப்பம் நிறைவேற்றுவதும், ஆகிய செயல்களின் காரணம் ஆழ்ந்த அன்பு மட்டுமே. எப்போது, ஒருவருக்கு, தான் தியாகம் செய்வது போல எண்ணம் தோன்றி, மேற் கூறிய பரிமாற்றம் நிகழ்கிறதோ, அவர்க்கு பூரண அன்பு மலரவில்லை என்பதை சொல்லத் தான் வேண்டுமோ.
சுயம (Self)் என்பது, எப்போதும் திருப்தியை நோக்கியே பயணிக்கிறது. அது தான் அதன் இயல்பு. சுயத்தை,துன்புறுத்தி, யாராலும் எந்த செயலையும் செய்தல் இயலாது. தனக்கு திருப்தி அளிக்கும் செயல்களை மட்டுமே, சுயம் அனுமதிக்கும். ஆக, எந்த ஒரு செயலை, யாருக்காகவாது செய்தலும், விட்டுக் கொடுத்து போதலிலும், அடிப்படையான சந்தோஷத்தை சுயம் பெறுகிறது.
ஆத்ம திருப்தி, இல்லாமல், மற்றவருக்காக செய்தல் என்பது நடை பெற இயலாது.ஆக, பலன் என்பது, நாம் செய்யும் செயல்களிலிருந்து நமக்கு கிடைக்கத்தான் செய்கிறது.அது பொருளாகத் தான் கிடைக்க வேண்டும் என்றில்லை. நம் சுயம் திருப்தி அடையும் செயல்களை, அன்பின் காரணமாகவோ, ஆழ்ந்த காதலின் காரணமாகவோ நாம் செய்கிறோமே தவிர, தியாகம் செய்கிறோம் என்று எண்ணும் நிலையில், அங்கு, அன்பும் , காதலும், வேட்கையும் சாகடிக்கப்படுகிறது.