யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, October 10, 2009

அடக்கத்தில் எல்லாம் அடக்கமா..


எட்டு மாதங்கள் - இடைவெளி------ எண்ணம் சார்ந்த என் எழுத்துக்களுக்கு ! எதனால் என்று ஆராய்வது அத்துணை சுவாரசியமாக இருக்காது என்பதால்,ஏன் பதிவு புதுப்பிக்கபடவில்லை என்று கேள்விக் கணைகள் எழுப்பிய இதயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், காலதாமதத்திற்கு மன்னிப்பையும் கோரி இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

அடக்கம் அமரருள் உய்க்கும் - அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்ற வள்ளுவனின் கூற்று, அடக்கமாக இருப்பது ஒரு மேம்பட்டத் தன்மை என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது.

பொதுவாகவே, அடங்கிப் போகிறவர்களையும், அடக்கமாக இருப்பதற்க்கு முக்கியத்துவம் தருபவர்களையும் நமக்குப் பிடிக்கிறது. ஏன்? இதன் காரணத்தை ஆராய்ந்திருக்கிறோமா ! எதனால் இந்த எண்ணப் போக்கு? எதை எதிர்பார்த்து இப்படி ஒரு எண்ணம் நம் மனதிலும், நம்மாலும், மற்றவராலும் நமக்குள் திணித்து வளர்த்த்ப்படுகிறது? பணிவை நாம் மிகவும் ஆதரிக்கிறோமே ஏன்? பணிதலுக்குப் பின்னால் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்....அத்தகைய பணிதல் நமக்குள் விளைவிக்கும் விளைவுகள் எவை..ஒரு அலசலாக இப்பதிவை வைத்துக் கொள்வோமா..உங்கள் கருத்துக்களை முன் வைத்து மேலும் இதை விரிவாக விவாதிக்கலாம் என்ற எண்ணத்துடன், உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் :)
-------------------------------------------------------------------------------------------------

பணிவு பற்றி எல்லோருக்குமே ஒரே கருத்து தீர்க்கமாக இருப்பதை காண முடிகிறது ! பணிவை நாம் மனமுவந்து ஆதரிக்கிறோம் ! மிகச்சிறந்த உணர்வாகவும், தன்மையாகவும், பணிவு நம்மால் கொண்டாடப்படுவதற்க்கு பல காரணங்கள், ஒன்று : பணியர் பெரியர் !, இரண்டு : பணிதல், தலை கனம் இல்லாத் தன்மையை குறிக்கும் அறிகுறி ! மூன்று : கற்றலுக்கு வித்து, காது கொடுத்து மட்டுமல்லாமல்,பிற விஷயங்களை உற்று கவனித்து உள் வாங்கிக் கொள்ளப் பயன்படும் தன்மை ! நான்கு: சபை நாகரீகம் - பிறரை மதித்தலை காட்டிக் கொள்ள பயன்படும் கருவி !

ஆக பணிதல் மிக அவசியமான, ஒவ்வொருவரும் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தன்மையில் ஒன்று தான்.. மறுக்கவில்லை ! ஆனால் பணிவை நாம் கற்றுக் கொள்ளல் எப்போது மிகுந்த நன்மை பயக்கும்??.. என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமாகத் தோன்றுகிறது. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என்ற கூற்றுக்களை எப்பருவத்திலும் புரிந்து ஏற்று அதன் வழி நடக்க முயல்வது, நன்மைகள் பயக்கும் சாத்தியக் கூறுகளை வெளிக் காட்டுவதைப் போல், பணிவு வளர் ! என்ற கூற்றினை,ஒரு தீர்க்கமான தெளிவை நாம் அடைந்த பின்னரே, செயல் படுத்தல் வேண்டும் என்பதே என் கருத்து. சிறுவயதில் பணிவு என்பது, கீழ்படிதல் என்ற தன்மையை வளர்க்கப் பயன்படும் ஒரு கருவி, அக்கால கட்டத்தில் தான், கற்றலின் சுவை விதைக்கப்படுகிறது. சொல்வதை ஏற்றுக் கொள் என்று அறிவுறுத்தும் விதத்தில், அப்பிராயத்தில் கற்கும் எல்லா விஷயங்களுமெ பசுமரத்தாணி போல் பதியும் என்ற உறுதியால் கீழ்படிதல் கருவியாக்கப்பட்டது.

சிறுபிராயம் அடுத்து வளர் இளம் பருவத்தில், பணிவு பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அதை ஏற்று நடக்க முட்படுவது, ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும், தன் கருத்தையோ அல்லது செயலையோ தைரியமாக எவ்வித சூழலிலும் வெளிக்காட்ட தயங்கும் எண்ணத்தை விதைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். வளர் இளம் பருவம் மட்டுமல்லாது, இளம் பருவத்தை எய்திய பின்பும், வாழ்வு பற்றிய தனக்கு உண்டான ஒரு கோணமும், அதனைச் சார்ந்த தெளிவையும் ஒருவன் அடையாமல், பணிவை அதன் கூற்றுக்காக கடைபிடிப்பவர் அனைவருக்குமே மேல் கூறிய பக்க விளைவுகள் நேரிடக் கூறும்.

கற்றல் முடிவுறுவதில்லை ! - உண்மை. வாழ்நாள் முழுதும் கற்றலில் தான் பயணிக்கிறோம். ஆனால் வாழ்க்கையின் அடிப்படை சாராம்சத்தை புரிந்து, தெளிவான் கண்ணோட்டதுடன், வாழ்வை அணுகும் போது தான், தனக்கு ஒரு நிலையான எண்ணப்பாட்டை ஒருவன் வகுத்துக் கொள்ள இயலும். அத்தகைய நிலையில் தான் பணிவின் பயன்பாடு, அவனை மேன்மைப் படுத்தும்.