

பாடல் : கண்ணதாசன்
படம் : நிழல் நிஜமாகிறது
கம்பன் ஏமாந்தான் -
இளம் கன்னியரை ஒரு
மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது
பாய்வதினால் தானோ
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது
கொதிப்பதனால் தானோ...
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ...
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே
இப்பாடலில் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ள வரிகள் (நீல நிற வரிகள்) சரியானவை தானா? அவ்வாறு ஏன் குறிப்பிட வேண்டும். இதைப் பற்றி தங்கள் கருத்துகள் என்ன? பகிர்ந்து கொள்வோமா..
=================
"நான் மானுட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
ரத்தத்திலகம் படத்தில் தானே நடித்து, கண்ணதாசன் பாடிய வரிகள் இவை. "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை " என்பதை வெறும் பாடல் வரிகளாக கொள்ள முடியவில்லை. கண்ணதாசன் ஒரு கவிஞனாக மட்டுமே பார்க்கப்படுபவன் இல்லை. திரை இசைப் பாடல்களுக்காக அவன் எழுதிய கவிதைகளை வைத்து, வெறும் திரைப்பட பாடல் கவிஞன் என்று என்னால் முத்திரைக் குத்த முடியவில்லை.
காலத்தை கடந்து நிற்கும் பாரதிக்கும் அவனது கவிதைகளுக்கும் சமமானவன் கண்ணதாசனும் அவனது படைப்புக்களும்.அவனது ஒவ்வொரு வரிகளும், அவனுடைய இயல்பையும், வாழ்க்கை குறித்து அவன் கொண்டிருக்கும் அபிப்ராயங்களையும் தெள்ளத் தெளிவாகத் தான் காட்டி வந்திருக்கின்றன. திரை ஊடகம் ,அவன் படைப்புகளை, அவனது எண்ணங்களை பாமரனிடத்தில் கொண்டு சேர்த்தன. அவனை கவியரசு கண்ணதாசனாக காண்பதை விட, வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து முத்தெடுத்த ஒரு தீர்க்கதரிசியாகத் தான் நான் காண்கிறேன்...
திரை இசைப் பாடல்கள் எழுதும் கவிஞர்கள், பொதுவாக, திரையில் அப்பாடலை பாடி நடிக்கும் பாத்திரப் படைப்பிற்கு தகுந்த வண்ணம் தான் பாடல்களை இயற்றுவார்கள். ஆனால் கண்ணதாசனைப் பொறுத்தவரையில், அவன் எழுதிய பாடல் வரிகள், பாத்திரப் படைபின் திறனை மீறி தான் கொடுக்கப ்பட்டிருக்கின்றன. இதை பல பாடல்கள் கொண்டு உணர்த்த முடியும். ஒரு குடிகாரன், சோம்பேறி, தன் சகோதரியின் சொற்ப சம்பளத்தில், தானும், தன் மனைவி , குழந்தையும் வாழும் நிலை குறித்து சிறிதும் சிந்திக்காத சுயநலவாதி பாடும் பாடலா இது...
"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு....
வாழ்வின் பொருள் என்ன..நீ வந்த கதை என்ன..
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி..
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி..
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்..
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்..
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி..
உண்மை என்ன..பொய்மை என்ன..
இதில் தேன் என்ன..கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
இப்படி ஒருவன் பாடினால், அவன் தெளிவான நோக்கு உள்ளவனாகத் தானே இருக்க வேண்டும். ஆனால் பாத்திரப் படைப்பு , முற்றிலும் வேறு விதமாக இருந்த, அப்படத்தில், கண்ணதாசன் ஏன் இப்படி பாடலை எழுதினான். பாத்திரப் படைப்பு என்பது ,அவனைப் பொறுத்தவரை வெறும் பெயருக்குத்தான். அவனினிலிருந்து வெளிப்படும் வரிகள், எல்லாமே அவன் சிந்தனை, அவன் கருத்து, அவனால் உணரப்பட்டவை. வெகு சாதாரணமாக அவன் பாத்திரத்திற்காக கவிதை எழுதினான் என்பதை சொல்லி விட முடியாது.
சரி..இப்போது, பிரச்சனைக்குரிய பாடல் வரிகளுக்கு வருவோம். கம்பன் ஏமாந்தான்..
நீங்கள் கூறுவது போல், பாத்திரப் படைப்பிற்காக அப்பாடல் எழுதப்பட்டாலும், அப்பாடலின் வரிகள், கதாப் பாத்திரத்தின் எண்ண வெளிப்பாடாக மட்டும் கொள்வதிற்கில்லை. பல் வேறு கோணங்களில் அவ்வரிகளை நாம் புரிந்து கொள்ளலாம். முதல் கோணம்.. ஆண்களை துச்சமென மதிக்கும் கதாநாயகியை , அவளை நேசிக்கும் கதாநாயகன், சீண்டுவது போல பாடலைப் படைத்தது. இரண்டாவது கோணம், இப்பாடலின் மூலம் கதாநாயகன், ரசிப்பு -(அம்பு விழி என்று...), ஏக்கம் -(தீபத்தின் ஜோதியில்.....) ,அறிவுரை ( ஆத்திரம் என்பது...) போன்ற தன் பாவங்களை (expression)வெளிப்படுத்துவதாக எழுதப் பட்டிருக்கலாம்.
மூன்றாவது கோணம், கவிஞன் குறிப்பேற்றுதலை அவ்வரிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கலாம். என் கேள்வி இங்கு தான் ஆரம்பமாகிறது. " ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படிவரை தானே"
பாடல் பிறந்த வருடம் 1978.. அப்போதைய நிலையில் பெண்களின் நிலை , கோபத்தை அடுப்படி பாத்திரங்களை "ணங் " என்று வைத்து காண்பிப்பதிலேயே இருந்து வந்திருக்கிறது. பெண்களின் இயலாமையும், அவர்களை அவர்களே உணரமால் போனதையும் இவ்வரிகள் சித்தரிப்பதாக எடுத்துக் கொண்டாலும், அதற்கு அடுத்த வரிகள் தான் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. " ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே...." எவ்வகையான ஆண் என்றாலும், பெண்ணே நீ அவனுக்கு அடங்கி நட என்று சொல்லவில்லை அவ்வரிகள்
துணைவன் ஆதிக்க நாயகனாக - எல்லா விதத்திலும் தலை சிறந்தவனாக,விளங்குமிடத்து " அடங்குதல் முறை தானே - அவனுள் ஐக்கியமாவது முறையானது தானே என்று பொருள் கொள்ளும் விதமாகவும் இவ்வரிகள் அமைக்கப்பட்டிருக்கலாம். அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில், கதாநாயகன், கதாநாயகியின் அன்பு வேண்டி தான் அப்பாடலை பாடுகிறான். பாடலின் சுவையை கூட்டுவதற்காக, "கம்பன் ஏமாந்தான்.." என்று பாடலை ஆரம்பிப்பது போல் பாடல் அமைக்கப ்பட்டிருக்கிறது.
கம்பன் ஏமாந்து தான் போனான், கன்னியரை ஒரு மலர் என்று கம்பன் வாழ்ந்த காலத்தில் பார்த்ததை, கண்ணதாசன் அவன் காலத்தில், கம்பன் ஏமாந்தான் என்று பாடிச் சென்று விட்டான். இன்றைய காலகட்டத்தில், கண்ணதாசனும் ஏமாந்து தான் போனான் என்று கூறும் அளவுக்கு ஆதிக்க நாயகனுக்கு சமமான , ஆதிக்க நாயகிகள் அவதரித்து விட்டனரே...ஆம்! கண்ணதாசன் ஏமாந்து தான் போனான். ஐக்கியமாகத் தான் ஆள் இல்லை இங்கே..