
M - Magnanimous
பெருந்தன்மை.
என்னை மிகவும் கவர்ந்த, என்னுள் எப்படியாது வளர்த்தே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட தன்மைகளில் முதல் நிலை வகிப்பது இதுவே. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது என்னுடைய பிறந்த ஊர். ஒவ்வொரு ஊருக்கென்று தனித்தன்மைகள், அவ்வூரின் பேசும் பாஷை போன்றவை வேறுபடும். சில விஷயங்கள் மட்டுமே நம்மை ஈர்பதுண்டு. அது போல என்னை , என் ஊர் மக்களின் பெருந்தன்மைப் போக்கும், விருந்தோம்பலும், சிறு வயதிலிருந்தே ஈர்த்ததுண்டு.என் வீட்டில் அவ்வளவாக இல்லாத ஒரு தன்மை, என்னை வெளி மனிதர்களின் பெருந்தன்மைப் போக்கினால், மிகவும் ஈர்த்ததில் ஆச்சர்யமில்லை தான். ஆனால், அத் தன்மையை எனக்குள் இயல்பாக கொண்டு வர, பல பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.
எந்த ஒரு தன்மையும் அவரவர் வீட்டிலிருக்கும் மனிதர்களின் இயல்புகளினாலோ, அல்லது பழக்கத்தினாலோ சிறு வயது முதலே, பெரியவர்களால் ஊட்டப்பட்டும், அல்லது அறிவுறுத்தப்பட்டும், அல்லது கால காலமாக தொடர்ந்து வரும் மரபணுக்களினாலோ தான் சாத்தியமகிறது. எந்த ஒரு இயல்புக்கும், பெற்றோரின் அணுகு முறையும், அவர்கள், மிக முக்கியம் என்று அறிவுறுத்தும் பாங்குமே, நம்முள் , அத்தகைய இயல்புகளை வளர்க்க ஏதுவாக இருக்கிறது.
ஆனாலும், பல இயல்புகள், குடும்பத்தார் அல்லாத மற்றவரின் பங்களிப்பாலேயே நம்முள் வளர்க்கப்படுகிறது. ஆனால், எத்துணை பேர், அத்தகைய மாற்றத்திற்க்கு தம்மை தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அவரவர் கையிலே தான் உள்ளது. உலகைப் புரிந்து கொள்ளத வயதில்,. தாய், தந்தை, மற்றும் குடும்பத்தாரின் மூலம் கற்றுக் கொண்ட சில நன்மை தராத இயல்புகளை, உலகம் புரியும் வயதிலேயும், நம்மிடையே வைத்துக் கொண்டு, " நான் இப்படித்தான்" என்று தான் பலரும் சொல்லிக் கொள்கிறோம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இயல்புகள் , தன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால். அவற்றை தம்முடையதாக்கிக் கொள்ள தீராத ரசனை மிகவும் இன்றியமையாததாகிறது.

எதை நாம் ரசிக்கிறோமோ, அதன் பாலே தான் நாம் ஈர்க்கப்படுகிறோம். எது நமக்குப் புரிகிறதோ, அதன் பால் தான் நம் ரசனையும் செல்லும். அவ்விதமாக எழும்பும் ரசனையை, ரசனை என்பதோடு மட்டும் விட்டு விடாமல், அதை எத்தகைய வழியில் நமதாக்கிக் கொள்கிறோம் என்பதில் தான், நாம் நம்முள் நாம் வளர்க்க விரும்பும் இயல்புகளும் அமையப் பெறுகின்றன.
என் வாழ்க்கையில், இத்தகைய ரசனை தான், பெருந்தன்மைப் போக்கை எனக்குள் நான் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை உறுதியாகப் பதித்தது. சொல்லப் போனால், பெருந்தன்மை போக்கு உள்ளவரெல்லோருமே, நல்லவர்களாகத் தான் அன்றும், இன்றும் எனக்குத் தெரிந்திருக்கிறார்கள். அது உண்மையும் கூட. வாழ்க்கையின் எத்தகைய நிகழ்விலும், இந்த பெருந்தன்மைப் போக்கானது, எதிர்மறையான விளைவுகளை புரட்டிப் போட்டிருக்கிறது.
இரு சகோதரர்களுக்குள்ளே நடைபெறவிருக்கும் சொத்து பாகப்பிரிவினையில் கூட, ஒருவரின் பெருந்தன்மைப் போக்கானாது, மற்றவரின் மனதை நொடிப் பொழுதில் , முழுதும் மாற்றிய விந்தையை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நல்ல உறவு முறைகளுக்கு அன்பு எப்படி ஆதாரமோ, அதே போல் தான், பெருந்தன்மைப் போக்கும், நல்ல உறவு முறைகள் காலங்காலமாய், சீர் பட நிலைத்து நிற்கக் காரணமாய் விளங்குகின்றது.
பெருந்தன்மையினால், ஒருவர் உயர உயர செல்கிறாரே அன்றி, அவர் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அடிக்கடி, மனதிலெழும், வள்ளுவனின் வாக்கு,
" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்"
- இக்குறள் பெருந்தன்மையையே பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன். அகிம்சை வழி என்பது எப்படி, வீரியமிக்க வழியோ, அதே போல தான், பெருந்தன்மைப் போக்கும், வீரியமிக்கது.சிலருக்கு இயல்பிலேயே இருக்கும் இத்தன்மை வியக்கத் தக்கதே. அதெல்லாம் குடும்பத்திலேயே வரணும்" - என்று அங்கலாய்பதில் அர்த்தம் இருந்தாலும், பிரயத்தனப்பட்டாகினும், இத்தன்மையை நமக்குள் நாம் வளர்க்க முயற்சித்தால், இத்தன்மை நம்மையும், நம்மைப் போல் பிறரையும், நல்ல உறவு மேம்பாட்டில் எப்போதும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.