
ஒரு வீட்டில் ஒரு சிறுவன் தன் அம்மாவிடம்..
"அம்மா ! ஏம்மா, நம்ம கிட்ட கார் இல்ல...மாமா கிட்ட இருக்கு...."
- "அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்பா..நாமெல்லாம் ஏழை..நம்ம கிட்ட பணமில்ல.."
"நாம ஏம்மா..ஏழை.... அதிர்ஷ்டம்னா ப்ணமாம்மா..?"
- " இல்லடா..அதிர்ஷ்டம் இருந்தா பணம் இருக்கும்..பணம் இருக்கறதுக்கு அதிர்ஷடம் வேணும்டா.."
"அப்பாவுக்கு ஏம்மா அதிர்ஷ்டம் இல்ல.."
- "தெரியல.."
"உனக்கு அதிர்ஷ்டம் இருக்காம்மா"
-"உங்கப்பாவை கல்யாணம் பண்ணினா, எனக்கு எப்படிட இருக்கும் அதிர்ஷ்டம்"
"எனக்கு இருக்காம்மா அதிர்ஷ்டம்.."
-உனக்காது இருக்கட்டும்..
இதே பாணியில் இல்லாவிட்டாலும், இதே கருத்து பலரிடம் நிலவுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன? அது பலருக்கு, எதிர்ப்பார்ப்பு, கனவு,ஆசை. நிஜ வெய்யிலிலிருந்து இளைப்பாற பொய் நிழல்
அதிர்ஷ்டம் என்பதை மச்சம் என்றும், ஜாதகம் என்றும், வரம் என்றும், முற்பிறப்பின் பலன் என்றும் காலங்காலமாய் கூறி வந்தாலும், விஞ்ஞான பூர்வமாய், இது சரியா என்று ஆராயப்படவில்லை.எனினும், மனவியல் ரீதியாக, இதற்கு பிண்ணணி இருப்பதாகவே கொள்ளலாம்.
பரீட்சைக்கு, அதிர்ஷ்டமான பேனாவை கொண்டு செல்வதிலிருந்து, திறமையானவர்கள் கூட, இந்த ஷ்ர்ட், ஷீஸ் அதிர்ஷ்டமானது என்று வைத்துக் கொள்வது, மனத்திறனோடு சம்பந்தப்பட்டதாகத் தான் தெரிகிறது. திறமை, சக்தி, ஆர்வம், வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தீர்மானம் இருப்பவர்கள் கூட, அதிர்ஷ்டம் தேவை என்று நினைக்கக் காரணம் என்ன? அச்சம் மட்டுமே.
இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். தோற்றுவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது, அதிர்ஷ்டத்தை வேண்டுவதாகாது. நனறாக, தயார் செய்து கொண்ட பின்னும், ஒரு செயலைச் செய்ய தக்க திறமையைக் கொண்டிருந்தும், அதிர்ஷ்டம் இருந்தால் தான் எல்லாமும் நல்ல விதமாக நடக்கும் என்ற எண்ணத்தை ஒரு கவசம் போல கொள்வதினால், தன்னம்பிக்கை என்ற வேர் பழுது படாமல், பார்த்துக் கொள்ள ஏதுவாகிறது.
தன் மேல் எத்துணை நம்பிக்கை வைத்தாலும், தன் செய்லகளின் விளைவுக்கு தான் காரணம் அல்ல. என்ற ஏண்ணமே , இத்தகைய போக்கினை வளர்க்கிறது. முதல் காரணம் அச்சம், அடுத்தது, தன்னம்பிக்கை குறையாமல், அவ்வேலையை செவ்வனே செய்ய, தன் சக்தியை மீறி , வேறொரு சக்தி தேவைப்படுவதாக எண்ணும் எண்ணமே, அதிர்ஷ்டம் என்பதை எதிர் பார்த்துக் காத்திருக்கச் செய்வது.
அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மனிதன் எப்போது நம்ப ஆரம்பிக்கின்றான். எப்போதுமே ஒருவர் வாழ்வில் வெற்றியோ, நல்ல நிகழ்ச்சிகளோ நடை பெறும்போது, அதிர்ஷ்டம் பற்றி அவன் சிந்திப்பதேயில்லை. சட்டென்று தோல்வியை சந்தித்துக்கும் போது, அடுத்து நடைபெறும் காரியத்தில் தனக்கு நிச்சயம் வெற்றிக் கிட்டுமா? எனக்கு அதிர்ஷ்டம் உள்ளதா? என்று ஆராய்தல் அவனுள் ஏற்படுகிறது.
இது இயல்பு தான். தடுக்கி விழப்போகும் நேரத்தில் தானே, தடி தேவைப்படும்.எப்படியாது, இந்த பிரச்சனை தீர வேண்டும் என்ற பதட்டம் நேரும் போது தான், பயம் ஏற்படும் போது, ஒரு துணை தேவைப்படுகிறது மனதிற்க்கு வலுவூட்ட. அத்துணையாகத்தான், அதிர்ஷ்டம் பற்றிய எண்ணமும், அதனை சார்ந்த செயல்களான, நல்ல நேரம், ஜாதகம் , எண் கணிதம், போன்றவை பார்த்தலும் ஏற்படுகின்றன.
அதிர்ஷ்டம் என்பது ஒரு வித நம்பிக்கையே. உலகம் முழுதும் இந்த விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. வீட்டில் இயந்திரம் கட்டினால், செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம். அப்படி கொட்டி விடுகிறதா. ஆனாலும், எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நோக்கத்தில் , செய்து தான் பார்போமே, என்ன தான் ஆகிறது என்ற எண்ணத்தில் செய்யப் படுவன தான் ,இயந்திரம், வாஸ்து, குபேரன் சிலை வைப்பது, வீட்ட்ன் நுழை வாயிலில், கண்ணாடி வைப்பது போன்ற செயல்கள்.
ஆனால் அதற்காக, நாம் செய்ய வேண்டிய தொழிலையோ, காரியங்களையோ நாம் செய்யாமல், அதிர்ஷ்ட்ம் எனக்கு உண்டு, என் ஜாதகமே சொல்கிறது என்று பேசாமல் இருந்து விடுகிறோமா. மனதிற்க்கு ஒரு ஆறுதல், ஒரு விதமான பிடிப்பு, எல்லாமும் செய்து, அதிர்ஷ்டம் வரவழைக்கும் வழியையும் செய்து விட்டாகி விட்டது. இனி கவலை இல்லை,. நடப்பது நடக்கட்டும் என்ற மனத் திண்மையை அடைவதற்காகவே அதிர்ஷ்டத்தை நம்பவும், விரும்பவும் செய்கின்றனர் பலர்.
ஆக அதிர்ஷ்டம் என்பது என்ன? நல்ல முறையில் எல்லாம் நிகழும் போது, அதன் தொடர்பாய், நினைவாய், பொருளோ அல்லது நபரோ இருந்தால், அது நமக்கு தொடர்ந்து விளைவிக்கும் அமைதியே அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படுகிறது.
ஆக அதிர்ஷ்டம் என்பது பொருளில் இல்லை. அச்சத்தைக் குறைக்க, மனதில் இருக்கும் பதட்டம் போக துணை செய்ய என்னென்ன எண்ணங்கள் உதவுமோ, அவை எல்லாமே அதிர்ஷ்டம் கொடுக்கும் சாதனங்களே. இச்சாதனங்கள் அமைதி மட்டுமே தரும். வெற்றி பெற முயற்சி ஒன்றே வழி. இது அனைவருக்கும் தெரிந்ததே.
" பார்வை இலக்கில் பதித்து விட்டால், பள்ளம் மேடு எதுவுமே பாதையில் கிடையாது"
" எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு "
- இந்தப் பார்வை நமக்கு வரும் வரை, அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையை கைத்தடியாய் வைத்துக் கொள்வதில் தவறில்லை. கண் திறந்து விட்டால், காட்சி தெரிந்து விடும். பாதை தெரியும், பயணம் புரியும். புரிந்தால், நடக்க வலு வந்து விடும். வேகம் கூடும். அப்போது எந்த வித தடியும் தேவைப்படாது.